புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது. புகையிலைப் பொருட்களைக் கையால் தொடுவது கூடவே கூடாது. ஆனால், முதலீட்டுப் பார்வையில் புகை நல்லது! புகையிலைப் பொருட்களைத் தன் தயாரிப்பாகக் கொண்ட ஐ.டி.சி. நிறுவனம் முதலீட்டுக்கு ஏற்றது என்று பரவலாக முதலீட்டு ஆலோசகர்களால் சுட்டிக் காட்டப்படும் துறையாக இருக்கிறது.
நான் நேரடியாக, ‘இந்தப் பங்கை வாங்குங்கள்... அதை வாங்காதீர்கள்’ என்று சொல்லப் போவதில்லை. நான் ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்கைப் பற்றிச் சொன்னால், அது ஓர் உதாரணம்தான். அதில் சொல்ல விரும்பும் விஷயம்... போனஸ் பங்குகள், பங்கு பிரிப்பு போன்ற சூழல் இருக்கும்போது அந்தப் பங்கைத் தேர்வு செய்வது எவ்வளவு லாபகரமானது என்பதுதான்.
அதேபோலத்தான் இந்த ஐ.டி.சி. நிறுவனப் பங்கையும் பார்க்க வேண்டும். பிப்ரவரி மாதம் என்பது பட்ஜெட் மாதம். மத்திய அரசு பொது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் என்பதால், விலையேற்றத்தை எதிர்பர்த்து கடைக்காரர்கள் சிகரெட் போன்ற பொருட்களைப் பதுக்குவார்கள். அதனால், ஐ.டி.சி. நிறுவனப் பங்குகள் இந்த மாதத்தில் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
ஆனால், நான் ஐ.டி.சி. நிறுவனத்தைக் குறிப்பிடுவதற்குக் காரணம் அதுவல்ல. அவர்களுடைய அணுகுமுறை மற்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்ல... முதலீட்டாளர்கள் நல்ல நிறுவனத்தை அடையாளம் கண்டுகொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
ஐ.டி.சி. என்பது ஆரம்பத்தில் முழுக்க முழுக்க புகையிலைப் பொருட்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாக இருந்தது. அப்போது புகைபிடிப்பது என்பது ஃபேஷன் சார்ந்த விஷயமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக புகைபிடிப்பதில் உள்ள தீமைகள் பற்றிய கருத்துகள் ஆழமாக ஊன்றிப் பரவத் தொடங்கியது.
அதோடு மக்கள் நலன் குறித்து அக்கறை கொள்ளும் அரசு, புகையிலை, மது போன்ற லாகிரிப் பொருட்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதித்தது. அவர்களால் தங்கள் தயாரிப்புகளைப் பற்றி வெளிப்படையாக மீடியாக்களில் விளம்பரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் இருக்கும் வரையில் வியாபாரத்துக்குக் குறைவில்லை. பழகிய எல்லோருமே புகையிலைப் பொருட்களைத் தொடர்ந்து வாங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.
ஆனால், ‘வியாபாரம்தான் ஆகிறதே... நமக்கு என்ன கவலை’ என்று ஐ.டி.சி. நிறுவனம் சும்மா இருந்துவிடவில்லை. தன்னுடைய கவனத்தை வேறு திசைகளிலும் செலுத்தத் தொடங்கியது. ‘ஒருவேளை புகையிலைப் பொருட்கள் கைகொடுக்காமல் போனால்...’ என்ற கோணத்தில் யோசித்துக்கொண்டே இருந்தது.
ஆயத்த ஆடைகள் தொடங்கி கன்ஸ்யூமர் பொருட்கள்வரை மெதுவாக தன் கைகளைப் பரப்பிய ஐ.டி.சி. நிறுவனம் இன்று சிகரெட் தயாரிப்பு நிறுவனம் என்ற தன் இமேஜையே மாற்றிவிட்டது. பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை, புகைப்பதால் அருகில் இருக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து என்பன போன்ற விஷயங்களால் புகை என்பதே இன்றைய சூழலில் தவிர்க்க வேண்டியதாக மாறிவிட்டது. இன்னமும் சிகரெட் தயாரிப்புகளை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் ஐ.டி.சி. நிறுவனம் தேய்ந்து போயிருக்கும். அவர்கள் இன்னும் பல துறைகளிலும் கால் பதித்ததால், இன்னமும் வெற்றிகரமான நிறுவனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
தன்னைப் புதுப்பித்துக் கொள்வது எத்தனை முக்கியம் என்பதற்கு சமீபத்தில் சொல்வதாக இருந்தால் மிகச் சரியான உதாரணமாக பேஜர் நிறுவனங்களைச் சொல்லலாம்.
வீட்டுத் தொலைபேசியைத் தாண்டி சிறந்த தொடர்பு சாதனமாக பேஜர் என்ற கருவி வந்தபோது பரபரப்பாக தன் சேவையைத் தொடங்கிய நிறுவனங்கள், அதைத் தாண்டி மொபைல் சேவை வந்தபோது விழித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டன. பேஜர் என்பது அழிவில்லாத தொலைதொடர்பு சாதனம் என்று எண்ணி அவை இருந்தனவோ என்னவோ... ஆனால், மொபைல் வசதி என்ற சுனாமியில் சுருட்டியடிக்கப்பட்டுவிட்டது பேஜர். இன்று பேஜர் என்பது மியூசியத்தில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பொருளாகிவிட்டது.
அதேபோலத்தான் டைப் ரைட்டர் தயாரித்த நிறுவனமும். அதை அடியொற்றி கம்ப்யூட்டர் வந்தபோது அதற்கு தாவாமல் தேங்கி நின்றதால், இன்று அந்த டைப்ரைட்டிங் கம்பெனியே காணாமல் போய்விட்டது.
மாற்றம் என்பதைத் தவிர எல்லாமே மாறக்கூடியது என்பதை உணர்ந்த நிறுவனங்கள் தப்பிப் பிழைக்கின்றன. நான் சொல்ல வரும் விஷயம் இதுதான்... ‘காலத்தின் போக்குக்கு ஏற்ப தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்பவனே காலத்தைக் கடந்து நிற்பான்’ என்பது வெற்றிகரமான மனிதனுக்குச் சொல்லப்படும் நெறிமுறை. அது மனிதனுக்கு மட்டுமல்ல... நிறுவனத்துக்கும் பொருந்தும் என்பதற்கு ஐ.டி.சி. சரியான உதாரணம்.
16.02.11 நிலவரப்படி ஐ.டி.சி. நிறுவனப் பங்கு 156 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனப் பங்கு நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது. இன்னும் சொல்லப் போனால், அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து விலையை ஆவரேஜ் செய்து கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு நிலையான தன்மையைக் கொண்ட நிறுவனம் இது!
இப்போது சந்தை இருக்கும் சூழலில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாகவே இருக்கும் என்பதுதான் நிலையாக இருக்கிறது. அதனால், எந்த முதலீடாக இருந்தாலும் கொஞ்சம் காத்திருந்து, மொத்தமாக இல்லாமல் சிறுகச் சிறுகச் செய்வதே நல்லது!
காத்திருங்கள்... சொல்கிறேன்
லீட்:‘காலத்தின் போக்குக்கு ஏற்ப தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்பவனே காலத்தைக் கடந்து நிற்பான்’ என்பது வெற்றிகரமான மனிதனுக்குச் சொல்லப்படும் நெறிமுறை. அது மனிதனுக்கு மட்டுமல்ல... நிறுவனத்துக்கும் பொருந்தும்!