பாரபட்சம்



அப்பா இப்படி பாரபட்சமாக நடந்துகொள்வார் என்று நிகிலா எதிர்பார்க்கவேயில்லை.மனதில் இருந்ததை நேரடியாகவே கேட்டுவிட்டாள்.

‘‘அப்பா... உங்களுக்கு ஏம்பா இந்த ஓரவஞ்சனை? அக்காவுக்கு பணக்கார மாப்பிள்ளை... எனக்கு நடுத்தர மாப்பிள்ளை. அது எப்படியோ போகட்டும். அக்காவுக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆகியும், இப்பவும் நேர்ல போய் ஒவ்வொரு பண்டிகைக்கும் வரிசை வச்சி கூப்பிடறீங்க. எனக்கு இந்த மாதிரி ஒரு வருஷம் வரைக்கும்தான் கூப்பிட்டீங்க. அப்புறம் நேர்ல வராம போன்ல கூப்பிட ஆரம்பிச்சிட்டீங்க. சொல்லுங்க... ஏன் இந்த ஓரவஞ்சனை?’’

‘‘சொல்றேம்மா. உன் அக்கா ஒரே பையன் இருக்கிற குடும்பத்துல வாழ்க்கைப்பட்டிருக்கா. ஆனா, நீ இரண்டு பையனுங்க இருக்கிற குடும்பத்துல வாழ்க்கைப்பட்டிருக்கே. உன் ஓரகத்தி அருணா ஏழை. அவளுக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. நாங்க ஒவ்வொரு பண்டிகைக்கும் நேர்ல வந்து உங்களைக் கூப்பிட்டா, அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்.

அந்த மனக்கசப்பெல்லாம் நேரடியா வெளிப்படாது. குடும்பத்துல பிரச்னை, சச்சரவு, விரிசல் இப்படித்தான் வெளிப்படும். இப்படியெல்லாம் நீ கஷ்டப்படக் கூடாது. அதனாலதாம்மா கூப்பிடலை. இப்ப சொல்லு... நான் செஞ்சது தப்பா?’’‘‘தப்பில்லப்பா!’’ என்றாள் நிகிலா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.       

இரா.வசந்தராசன்