நல்லதொரு இல்லத்தை ஒருபோதும் வாங்க முடியாது... உருவாக்கவே முடியும்! -ஜாய்ஸ் மேனார்ட்(அமெரிக்க எழுத்தாளர்) அள்ளித்தர ஆயிரம் வங்கிகள் தயார் என்றாலும், அளவுக்கு மீறி வாங்கினால் அவஸ்தைப்படப் போவது நாம்தானே? வீட்டுவசதிக்கடன் பற்றித்தான் பேசுகிறோம்! வாங்க இருக்கும் வீட்டுக்கான மொத்தத்தொகை மற்றும் இப்போதைய குடும்ப பட்ஜெட்டை கணக்கிடுவதே முதல் பணி. இதன் பிறகே அதிகபட்சம் எவ்வளவு கடன் எனத் தீர்மானிக்கலாம்.
ஒருவரது நிகர வருமானம், பிற கடன்கள், குடும்பத்தேவை ஆகிய காரணிகளைக் கணக்கிட்டே வங்கிகள் கடன் அளவைத் தீர்மானிக்கும்.
தனிநபர் வருமான அளவு குறைவாக இருந்தால், இன்னொரு குடும்ப உறுப்பினரோடு இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், கடன் வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் அவருக்கும் அக்கறை இருக்க வேண்டியது அவசியம்.
சம்பளம் தவிர, விவசாய வருவாய் போன்ற இன்னபிற வருமானங்கள் இருந்து, அவற்றுக்கு ஆதாரம் இருப்பின், மாத வருமானத்தை அதிகமாகக் காட்ட முடியும். மாதம் ஆயிரம் ரூபாய் வருமானம் அதிகமானால்கூட, ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகக் கடன் பெற முடியும்.
குடும்பத்தின் நிகர வருமானம் மாதம் ரூ.40 ஆயிரம் எனக் கொள்வோம். இதில் அதிகபட்சம் 45 சதவிகிதத் தொகையையே ஒரு குடும்பத்தால் வீட்டுக்கடன் தவணையாகச் செலுத்த முடியும். அதாவது ரூ.18 ஆயிரம். ‘இன்னும் அதிகம் கட்டுகிறேன்’ என்று கணக்குப் பார்க்காமல் களத்தில் இறங்கினால் கஷ்டத்தில்தான் முடியும்.
நமது தவணை செலுத்தும் சக்தி மற்றும் கையிருப்புக்கு ஏற்பவே வீட்டின் பட்ஜெட்டை முடிவுசெய்ய முடியும். அல்லது தவணைக்காலத்தை நீடிக்க முடியும்.
உதாரணமாக ரூ.25 லட்சத்துக்கு ஒரு வீடு. அதற்கு ‘டவுன் பேமென்ட்’ என்ற முன்தொகையாக (15 சதவிகிதக் கணக்கில்) ரூ. 3.75 லட்சம் செலுத்த வேண்டும். 9 சத
விகித வட்டியில் 20 ஆண்டு கால தவணை எனில் மாதம் ரூ.18 ஆயிரம் (ணிவிமி) செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட கடன் தொகைக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட வட்டி விகிதத்துக்கு நாம் மாதந்தோறும் வட்டியும் முதலும் சேர்த்து செலுத்த வேண்டிய தொகைதான் இந்த இ.எம்.ஐ. (மாதாந்திர தவணைத் தொகை).
கடனைத் திருப்பிச் செலுத்தும் மாதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இ.எம்.ஐ. தொகை குறையும். 20 ஆண்டுகளில் ஒரு லட்ச ரூபாய்க்கு 9 சதவிகித வட்டியில் மாதத் தவணை ரூ.900.
விரைவிலேயே கடன் தீர்க்க விரும்பி, தவணைக் காலத்தைக் குறைத்தால், மாதாமாதம் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ. தொகை அதிகமாகும். 10 ஆண்டுகளில் அதே ஒரு லட்ச ரூபாய்க்கு அதே 9 சதவிகித வட்டியில் மாதத் தவணை ரூ. 1267.
கூடிய வரை முன்பணத்தை அதிக அளவு அளித்து, மாதத் தவணைத் தொகையையோ, தவணை மாதங்களையோ குறைத்துக்கொள்வது நல்லது.
தவணை மாதங்கள் குறையும்போது வட்டித்தொகையும் மீதமாகும். மேற்சொன்ன ஒரு லட்ச ரூபாய்க்கு 20 ஆண்டு தவணையில் நாம் செலுத்தும் வட்டி மட்டுமே ரூ.1,15,935. அதே ஒரு லட்ச ரூபாய்க்கு 10 ஆண்டு தவணை எனில் வட்டி ரூ. 52,010 மட்டுமே.
பணிபுரிபவர்கள் ஓய்வுபெறும் வயது வரையும், சுயதொழில் புரிபவர்கள் 65 வயது வரையும் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் இ.எம்.ஐ.&யை திட்டமிடலாம்.
இந்த ஒரு லட்ச ரூபாய் உதாரணத்தைக் கொண்டு வாங்கப்போகும் கடன்தொகைக்கான வட்டியை நீங்களே எளிதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். ரூ.20 லட்சம் கடன் எனில் ஒரு லட்சத்துக்கான இ.எம்.ஐ&யை 20&ல் பெருக்கினால் அதுதான் மொத்த இ.எம்.ஐ.
இ.எம்.ஐ. என்பது நம்மைப் பொறுத்தவரை என்றும் மாறா ஒரே தொகைதான். ஆனால், இந்தத் தொகையை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விதமாகப் பிரித்து வரவு வைக்கின்றன.
இதோ ஒரு எடுத்துக்காட்டு...1 லட்ச ரூபாய், 9 சதவிகித வட்டி, 20 ஆண்டு கடனுக்கு இ.எம்.ஐ. கணக்கீட்டைப் பாருங்கள்.முதல் மாத இ.எம்.ஐ. ரூ.900ல் வட்டிக்கணக்கில் ரூ.750ம் அசல் கணக்கில் ரூ.150ம் வரவு வைக்கப்படும். 7ம் மாதம் ரூ. 743 வட்டியாகவும் ரூ.157 அசலாகவும் கணக்காகும். 77ம் மாதமோ ரூ.636 வட்டியாகும்... ரூ.264 அசலாகும். 240வது மாதம் 7 ரூபாய்தான் வட்டி. அசல் கணக்கில் ரூ.893 சேரும்!
8 நிறைய தவணை செலுத்தியும் கடன் குறையவே இல்லையே எனப் பலர் புலம்புவதன் ரகசியம் இதுதான். ஆண்டுகள் குறையக் குறையத்தான் இ.எம்.ஐ&யிலிருந்து எடுக்கப்படும் வட்டித்தொகை குறைந்து அசல் தொகையின் அளவு அதிகரிக்கும்.
வங்கிக்கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? எப்படி பரிசீலிக்கப்படும்? அது அடுத்த வாரம்...
(கட்டுவோம்!)
தாஸ்