வாசகர் கவிதைகள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

ஏமாற்றம்

கரையைத் தொட்டு
திரும்பும்போதெல்லாம்
யாரையோ தேடும்
ஏமாற்றத்துடன் அலைகள்!
 என்.உஷாதேவி, மதுரை.

காத்திருப்பு

வாசலைத் தெளித்துவிட்டு
காத்திருக்கிறது மழை,
கோலம் போடவரும்
உன் தரிசனம் வேண்டி!
 எஸ்.சங்கர்,
திருப்பரங்குன்றம்.

ஆசை

வீடு விண்ணைத் தொட்டாலும்
குழந்தை மண்ணைத் தொட்டு
விளையாடவே விரும்புகிறது!
 கே.தண்டபாணி,
பொள்ளாச்சி.

செய்தி

வம்பிழுப்பதையே பிழைப்பாய்
வைத்திருப்பவன் என்பார்கள்
வேலுவைப்பற்றி சொல்லும்போது!
ஜெயிலுக்குப்போனது
கொலைசெய்தது எல்லாவற்றையும்
சாதாரணமாய் எடுத்துக்கொண்டவர்கள்,
அவன் திருந்தியதை மட்டும்
ஊரெல்லாம் பரப்பினார்கள்
அசாதாரணச் செய்தியாய்.
 லதாமகன், நாங்குனேரி

வேதனை

என்ன பிரச்னையாக இருக்கும்?
விளக்கில்
உயிரை மாய்த்துக்கொண்ட
விட்டில் பூச்சிக்கு!  
 வைகை.ஆறுமுகம், வழுதூர்.

ரசனை

பாதையெங்கும் பூக்கள்...
ரசிக்க மனமில்லை
இறுதி ஊர்வலம்!
 தங்க.நாகேந்திரன்,
செம்போடை.

பாடம்

தன் ஒவ்வொரு தவறிலும்
பெற்றோருக்கு
கற்றுத் தருகிறது குழந்தை,
தன்னை எப்படி
வளர்க்க வேண்டுமென்ற
பாடத்தை!
 வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.