இணைய ஆபாசத்தை எப்படித் தடுப்பது?
பல இணையதளங்களில் வண்டலூர் பூங்காவில் எடுக்கப்பட்டது, மெரினா பீச்சில் எடுக்கப்பட்டது என்ற குறிப்போடு ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தடுக்க முடியாதா? இதுபற்றி யாரிடம் புகார் செய்யவேண்டும்? இரா.சற்குணம், வேலூர். பதில் சொல்கிறார் புறநகர் காவல் கூடுதல் துணை ஆணையர் ஜெயக்குமார்இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர் என்றில்லாமல் யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம். தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அனைத்து ஆணையர் அலுவலகங்களிலும் இதுபோன்ற புகார்களை விசாரிக்கும் சைபர் க்ரைம் பிரிவு இயங்குகிறது. மாவட்ட தலைநகரங்களிலும் உண்டு. அருகில் உள்ள காவல்நிலையத்தில் கூட புகார் செய்யலாம். அவர்கள் புகாரைப் பெற்று, சைபர் க்ரைம் பிரிவுக்கு அனுப்பி வைப்பார்கள். சட்டத்துக்கு உட்பட்டு அந்த இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்கமுடியும். எல்லா கம்ப்யூட்டர்களிலும் ‘இன்டர்நெட் புரோட்டகால் நம்பர்’ (ஐ.பி.) என்று ஒன்று உண்டு. ஒரு ஃபைலை இணையதளத்தில் எந்த கம்ப்யூட்டரில் இருந்து அப்லோடு செய்கிறார்கள் என்பதை இந்த எண்ணைக் கொண்டு அறியலாம். இந்தியாவின் எந்த மூலையில் இருந்து ஆபாசப்படங்களை அப்லோடு செய்திருந்தாலும் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட முடியும்.ஆனால், பெரும்பாலும் கலிபோர்னியா அல்லது லண்டனுக்கு அனுப்பி, அங்கிருந்து அப்லோடு செய்கிறார்கள். நாம் இன்டர்போல் போலீஸை அணுகி, அவர்கள் மூலமாகவே மூவ் செய்ய வேண்டியிருக்கிறது. இன்டர்நெட்டின் எல்லை உலகைத் தாண்டியும் பரந்து விரிந்திருப்பதால், இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற என்னென்ன தகுதிகள் வேண்டும்? எஸ்.ராஜகுரு, மயிலாடுதுறை. பதில் சொல்கிறார் சாகித்ய அகாடமி தமிழ்மொழி ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியன்.சாகித்ய அகாடமி என்பது 1954&ல் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது நிறுவப்பட்ட, மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிற ஒரு அமைப்பு. இந்திய மொழிகளின் இலக்கியச் செழுமையை மேம்படுத்துவதும், மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்துவதும், மொழிபெயர்ப்பு மூலம் இந்திய இலக்கியங்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதுமே இதன் நோக்கம். டெல்லி, ரவீந்திர பவனில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. இவ்வமைப்பு மூன்று முக்கிய பணிகளைச் செய்கிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 தேசிய மொழிகளில் சிறந்த எழுத்தாளர்கள் பற்றிய வரலாறுகளையும், இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகளையும் நூலாக வெளியிடுவது முதல்பணி. அடுத்தது, கருத்தரங்கம், பயிலரங்கம், நூலாசிரியர்களோடு கலந்துரையாடல், கவிதை, கதை வாசித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது. மூன்றாவது பணி, பரிசுகள் வழங்குவது. 24 மொழிகளிலும் நாவல், சிறுகதை, திறனாய்வு, வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட வகைகளில் சிறந்த படைப்பிலக்கியத்தை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். தாமிரப்பட்டயம் மற்றும் ரூ.1 லட்சம் அடங்கியது இவ்விருது. இந்த ஆண்டு தமிழில் எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு வழங்கப்பட்டது. இதுதவிர இந்திய மொழிகளுக்கு இடையிலான சிறந்த மொழிபெயர்ப்புக்கு விருது, வளர்ச்சி அடையாத மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள், வளர்ச்சி அடைந்த மொழிகளில் ஆய்வுசெய்யும் எழுத்தாளர்கள் 2 அல்லது 3 பேருக்கு மொழிவிருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுமுதல், சிறந்த குழந்தை இலக்கிய விருது, இளம் படைப்பாளர் விருது ஆகியவற்றை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருதுகளைத் தேர்வு செய்ய ஒவ்வொரு மொழியிலும் குழுக்கள் உண்டு. அவர்கள் பரிந்துரைக்கும் நூல்களில் இருந்து சிறந்த நூலை தலைவரால் அமைக்கப்படும் நடுவர் குழு தேர்வு செய்யும். இப்போது இந்த அமைப்பின் தலைவராக வங்காள எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயா, துணைத்தலைவராக பஞ்சாபி எழுத்தாளர் நூர் ஆகியோர் உள்ளனர்.
|