பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

ஜமாணிக்கமும் ஊரிஸ் கல்லூரியில இருந்து வந்துட்டார். பாளையங்கோட்டையில அவருக்கு வேலை கிடைச்சிருச்சு. நான் அமெரிக்கன் கல்லூரிக்குப் போயிட்டேன். உள்ளூர்லயே, நான் நேசிக்கிற ஒரு கல்லூரியிலயே வேலை கிடைச்சதுல நிம்மதி. ஆனா, அந்த நிம்மதி நீடிக்கலே... ‘நீ ஹாஸ்டல்லதான் தங்கணும்’னு பேராசிரியர் சவுரிராயன் உறுதியா சொல்லிட்டார்.

அப்போ அவர் மேல வருத்தம் இருந்தாலும், அவர் ஏன் அப்படிச் சொன்னாருங்கிற காரணம் தெரிஞ்ச பிறகு, அவர் மேல மரியாதை அதிகமாயிடுச்சு. டியூட்டர் வேலைங்கிறது ஒப்பந்தப் பணி. ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ வேலை பாத்த பின்னாடி, ‘வெளியே போ’ன்னு அனுப்பி வச்சிருவாங்க. ஆனா, வாய்ப்பு வரும்போது தனித்தகுதிகள், திறமைகளை முன்னிறுத்தி, முதல்வர் பரிந்துரை செஞ்சா, லெக்சரரா பணி உயர்வு கிடைச்சிரும். அது நிரந்தரப்பணி. ஹாஸ்டல்லயே தங்கியிருந்து டியூட்டரா வேலை செய்றது, கூடுதல் தகுதிகள்ல ஒண்ணு. எப்படியும் எனக்கு ஒரு வழி அமைச்சுக் கொடுக்கணுங்கிற பொறுப்புணர்வோடதான் ஹாஸ்டல்லயே தங்கச் சொல்லியிருக்கார்.

தமிழக அரசியல் சூழல் திராவிட இயக்கத்துக்கு சாதகமா இருந்த காலகட்டம் அது. உள்ளூர் மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் குடுத்துச்சு திராவிட இயக்கம். மிகச்சிறந்த பேச்சாளர்கள் உருவானாங்க. உணர்ச்சிகரமா பேசி மக்களோட உணர்வுகளைத் தட்டி எழுப்பினாங்க. அதுமட்டும் இல்லாம, சினிமா மாதிரி பிரசார ஊடகங்களையும் தங்களுக்கு சாதகமா கையில எடுத்துக்கிட்டாங்க.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine1961&62 காலகட்டம். இந்த அரசியல் சூழ்நிலையில நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், ஜெயகாந்தன், எம்.எஸ்.நாடார், மதுரை எஸ்.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு மாதிரி பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து அறிஞர் ஜீவாவை தலைவரா வச்சு, ‘கலை இலக்கியப் பெருமன்றம்’னு ஒரு அமைப்பைத் தொடங்கினாங்க. பாரதியை முதன்மைப்படுத்தி கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம்னு ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினாங்க.

அப்படி ஒரு இலக்கிய விழா புதுக்கோட்டைல நடந்துச்சு. அந்த விழாவில, ‘பாரதி & வேதாந்தக் கவிஞனா? புதுக்கவிஞனா?’ங்கிற தலைப்பில பட்டிமன்றம். ஏற்கனவே, ஊரிஸ் கல்லூரியில நடந்த முத்தமிழ் கலைவிழாவில தா.பாண்டியன் என் பேச்சைக் கேட்டிருக்கார். அதை நினைவு வச்சிருந்து கூப்பிட்டார்.

எனக்கு பட்டிமன்றம் பேசி அனுபவமில்லை. உண்மையைச் சொல்லணும்னா, நான் பாத்தது கூட இல்லை. அதனால நானே ஒரு வடிவத்தை மனசுக்குள்ள உருவாக்கிக்கிட்டேன். அப்பவெல்லாம் என் பேச்சுல அனல் பறக்கும். நகைச்சுவை இருக்காது. உரைநடைத் தமிழ்ல ரொம்ப வேகமாவும் உணர்ச்சிகரமாவும் பேசக்கூடிய ஆளு நான். திராவிட இயக்கத்தோட பாதிப்போ என்னவோ!

‘பாரதி புதுக்கவிஞனே’ங்கிற தலைப்பு எனக்கு. பள்ளிக்காலத்தில பரிசா வாங்கின பாரதியோட கவிதை நூல்கள் இருந்துச்சு. அதை வச்சு நிதானமா பாரதியை உள்வாங்க ஆரம்பிச்சேன். அந்த முதல் பட்டிமன்ற மேடை இப்பவும் பசுமையா நினைவில இருக்கு. 1961 செப்டம்பர் 24ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. கலை இலக்கியப் பெருமன்றத்தோட தொடர்புடைய, ‘புதுகை இலக்கிய மன்றம்’ங்கிற அமைப்பு பாரதிக்கும் தாகூருக்கும் நடத்தின விழா.

பட்டிமன்றத்துக்கு நடுவரா இருந்தவர் பேராசிரியர் எம்.எஸ்.நாடார். மிகச்சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்தில பெரும் புலமை உள்ளவர். உணர்ச்சிபூர்வமா பேசக்கூடியவர். திருச்சியில ஒரு தனிப்பயிற்சிக் கல்லூரி நடத்திக்கிட்டிருந்தார். ‘பாரதி வேதாந்தக் கவிஞனே’ன்னு பேசினவங்க, பேராசிரியர் குழந்தைநாதன், பா.நமச்சிவாயம், வே.சரஸ்வதி, புலவர் அரசப்பனார். அப்போ இருந்த தமிழ்ப் பேராசிரியர்கள்ல குறிப்பிடத்தகுந்த பேச்சாளர் குழந்தைநாதன். ஆழமா பேசுவார். அண்ணன் நமச்சிவாயத்தைப் பத்தி அறிமுகம் தேவையில்லை. நாடறிந்த பேச்சாளர். மத்த ரெண்டு பேரைப்பத்தி சரியா நினைவில்லே.

‘புதுமைக்கவிஞரே’ங்கிற தலைப்பில தொ.மு.சி.ரகுநாதன், சிவகாமசுந்தரி, நான், அறவாண்டி. தொ.மு.சி.ரகுநாதன் பெரிய எழுத்தாளர் மட்டுமில்லே... சிறந்த பேச்சாளரும் கூட. சிவகாமசுந்தரியும் நன்றாக பேசக்கூடியவர். அரவாண்டியைப் பத்தின ஞாபகம் இல்லே.

அந்த நிகழ்ச்சியை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு. எழுத்தாளர் ஜெயகாந்தன், சோவியத் ரஷ்யாவைப் பத்தி பேசி எல்லோரையும் அசரவைத்த பி.ஆர்.மீனாட்சிசுந்தரம், ஜீவா, பாரதியோட நண்பர் சீனிவாச வரதன்னு கலந்துக்கிட்ட எல்லோரும் பெரிய ஆட்கள். அவங்க முன்னாடி பேசுறதை நினைச்சாவே தடுமாற்றமா இருக்கு. இருந்தாலும் ஆவேசமா என்னோட வாதத்தை எடுத்து வச்சேன். எதிர்த்தரப்பில சுட்டிக்காட்டுன விஷயங்களை, அப்ப தெரிஞ்ச ஆதாரங்களால மறுத்தேன். அது எனக்கு நம்பிக்கை தந்த மேடையா அமைஞ்சது. எம்.எஸ்.நாடார் தீர்ப்பு சொல்றப்போ, நான் பேசின சில விஷயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார். நிகழ்ச்சி முடிஞ்சு கீழே இறங்கினதும், என்னைக் கூர்ந்து பார்த்த ஜீவா, லேசா சிரிச்சார். ரொம்ப உற்சாகமா இருந்துச்சு.

இதேபோல இன்னொரு பாரதி விழா அனுபவத்தையும் மறக்க முடியாது. அந்த நிகழ்ச்சி 1962 செப்டம்பர் மாதம். எட்டையபுரத்தில நடந்த பாரதிவிழா. அதுவும் கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடுதான். ரெண்டு நாள் நிகழ்ச்சிலயும் என்னைப் பேசக் கூப்பிட்டிருந்தாங்க. முதல்நாள், ‘பாரதியின் பார்வையில் மனிதன்’ங்கிற தலைப்பில தனிச்சொற்பொழிவு. மறுநாள், புதுக்கோட்டையில் கொடுத்த தலைப்பிலேயே பட்டிமன்றம். எனக்கு ‘பாரதி வேதாந்தக் கவிஞனே’ங்கிற தலைப்பு. நடுவர், கே.டி.கே. தங்கமணி. தா.பாண்டியன், சிவகாமசுந்தரி, வ.உ.சி.இளங்கோ, நல்லக்கண்ணு எல்லாரும் பேசினாங்க.

இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதை நினைச்சா, என்னையறியாம சிரிப்பு வரும். எட்டையபுரம் போக காசில்லே. அய்யாகிட்டப் போயி கேட்டேன். ‘ஒரு விழாவுக்கும் போகவேணாம்... போயி வேலையைப் பாருடா’ன்னு திட்டிட்டார். நண்பர்களிட்ட நிலைமையைச் சொல்லி கடன் வாங்கிக்கிட்டு கிளம்பிட்டேன். சட்டைத்துணியில ‘புஷ்சட்டை’ன்னு ஒரு ரகம் உண்டு. காடாத்துணி மாதிரி இருக்கும். அந்தத்துணியில காவிக்கலர் சட்டை. அழுக்கு படிஞ்ச வெள்ளை வேட்டி. ஒரு பழைய துண்டு. ஒரு மஞ்சப்பையில ஒரு வேட்டி. ஒரு பாரதி கவிதைப்புத்தகம். கற்பனை பண்ணிப்பாத்தா நகைச்சுவையா இருக்கு!

பாரதி வீட்டுக்கு அருகிலேயே மேடை. நல்ல கூட்டம். மேடைகிட்டயே போக முடியலே. என்னையப் பாத்தா பேச்சாளரா யாரும் நம்ப மாட்டாங்க. ஒடிசலா எப்போ விழுவோங்கிற மாதிரி உடல்வாகு. வித்தியாசமான உடைக்கோலம் வேற. ‘வழி விடுங்கய்யா... உள்ளே போயி பேசணும்யா’ன்னு சொன்னா, ‘யோய்... இவுரு போயி பேசப் போறாராமுய்யா’ன்னு நக்கல் பண்ணுறாக. நெல்லை குசும்புய்யா அது!

ஒருவழியா என் பேரை அறிவிக்கிறதுக்குள்ள, அடிச்சுப்புடிச்சு மேடையேறிட்டேன். 40 நிமிஷம் பேச்சு... ‘‘கிரேக்க நாட்டில ஒருத்தன், பகல்ல விளக்கைக் கொளுத்திக்கிட்டு யாரையோ தேடிப்போனானாம். ‘யாரடா தேடுறே’ன்னு கேட்டா, ‘மனுஷனைத் தேடுறேன்’னு சொன்னானாம். அதேமாதிரி ஞானி ஒருத்தர் வீதியில அம்மணமாவே உக்காந்திருந்தாராம்... எல்லாரும் திட்டுறாங்க, ‘என்னடா, இந்த ஆளு இப்படி உக்காந்திருக்காரு’ன்னு. ‘அடப்போங்கப்பா... இங்கே, எங்கே மனுஷன் இருக்கான்... நாயி இருக்கு... நரி இருக்கு... மனுஷன் எங்கேய்யா இருக்கான்’னு சொல்லிட்டு அவர் போக்கிலயே இருந்திருக்காரு. ஒருநாள் வள்ளலார் பெருமான் அந்தப்பக்கமா வந்திருக்கார்... அவரைப் பாத்த ஞானி, ‘இதோ ஒரு மனிதன் வருகிறான்’னு சொல்லிட்டு மானத்தை மறைச்சுக்கிட்டு ஓடினாராம்...’’ & இந்த விஷயங்களை எல்லாம் சொல்லி, ‘‘பலபேர் மனிதர்களைத் தேடியிருக்காங்க... பாரதியும் மனிதர்களைத் தேடியிருக்கான். வேடிக்கை மனிதன், விந்தை மனிதன்னு பலவகை மனிதர்களைப் பாரதி பாடுறான்’’னு ஆவேசமாப் பேசி நிறுத்துனேன். ‘‘நிறுத்தாதே... பேசு, பேசு’’ன்னு ஒரே கூச்சல்... தலைவர்கள் மத்தியிலயும் நல்ல வரவேற்பு கிடைச்சுச்சு!

அதே மாதிரி இதே காலகட்டத்தில் நடந்த இன்னொரு பட்டிமன்றம் பற்றியும் சொல்லணும். அதுவும் கலை இலக்கியப் பெருமன்ற ஏற்பாடுதான். ‘பாரதி பாடல்கள் கால வெள்ளத்தில அழியும்’னு எனக்குத் தலைப்பு. உடன்பாடு இல்லாட்டாலும், குடுத்த தலைப்புக்கு பேசியாகணுமே. பாரதி பாடின ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே...’ பாட்டைச் சொல்லி, ‘சிந்து நதி இப்போ நம்மகிட்டயா இருக்கு? பாகிஸ்தான் கையில போயிருச்சுய்யா’னு சொன்னேன். அதேபோல, ‘இந்திரன், வஜ்ஜிரம் ஒருபால், எங்கள் துருக்கர் இளம்பிறை ஒருபால்’னு பாடியிருக்கார். ஒரு காலத்தில காங்கிரஸ் கொடியில இந்துக்களைக் குறிக்கிறதுக்காக இந்திரனோட ஆயுதமான வஜ்ஜிரத்தையும், இஸ்லாமியர்களோட பிறை வடிவத்தையும் போட்டிருந்தாங்க. காலப்போக்கில அதை மாத்தி, ராட்டையை கொண்டு வந்துட்டாங்க. இங்கேயும் பாரதியோட பாடல்கள் நிக்கலே... நிலைமை மாறிப்போச்சே.. அதனால காலப்போக்கில எல்லா இலக்கியங்களும் அடிபடத்தான் செய்யும்’னு பேசுனேன்.

உண்மையைச் சொல்லணும்னா, கலை இலக்கியப் பெருமன்ற மேடையிலதான் நிறைவான பேச்சாளனா நான் அங்கீகரிக்கப்பட்டேன். என்னை முழுமைப்படுத்தினது அந்த அமைப்புதான். ‘பாரதி விழாக்கள்’லதான் என் பேச்சை நான் கூர் தீட்டிக்கிட்டேன். என்னைக்கும், நான் நன்றியோட அதை நினைவு கூறக் கடமைப்பட்டிருக்கேன்.
‘பாரதி பாடல்கள் கால வெள்ளத்தில அழியும்’னு சும்மா வல்லடி வழக்காப் பேசுனதுதான். சில தலைவர்கள், ‘என்ன இவ்வளவு ஆணித்தரமா பாரதி பாடல்கள் அழிஞ்சு போயிரும்னு பேசுறான்’னு வருத்தப்பட்டாங்களாம். எனக்கும் வருத்தமாத்தான் இருந்துச்சு. ஆனா, கொடுத்த தலைப்புக்கு பங்கமில்லாமப் பேசணுமே... அதுதானே பட்டிமன்ற தர்மம்!
பாரதி விழாக்கள்ல நான் பேசின பேச்சை பாராட்டவும் செஞ்சாங்க. குறிப்பா, எட்டையபுரம் பாரதி விழா நிகழ்ச்சியைப் பாக்க வந்திருந்த கல்கத்தா தமிழ்ச்சங்க மாணவர்கள் என்னைச் சந்திச்சு, ‘உங்க பேச்சு ரொம்ப சிறப்பா இருந்துச்சு. கல்கத்தா வந்து எங்க தமிழ்ச்சங்கத்தில பேசமுடியுமா’ன்னு கேட்டாங்க. வெளியில தெரியாம என்னையே நான் கிள்ளி ‘இது உண்மைதானா’ன்னு பாத்துக்கிட்டேன்!

அடுத்த வாரம் சந்திப்போமா!
 சாலமன் பாப்பையா