சாதாரண மாலைப் பொழுதாகட்டும், பெரிய பார்ட்டி கொண்டாட்டம் ஆகட்டும்... ஒரு சமோசாவும் ஒரு கப் காபியும் இருந்தாலே நிறைவாக அமையும். தினந்தோறும் சாப்பிட்டாலும் அலுக்காத, சலிக்காத அயிட்டம் சமோசா.
'தினம் சமோசாவா? கடைல எந்த எண்ணெய்ல பண்றாங்களோ? எப்படிப் பண்றாங்களோ?’ எனக் கவலைப்படுகிறவர்கள் அதை வீட்டிலேயே சுலபமாகச் செய்யலாம்; பிசினஸாகவும் தொடரலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த சையது அலி பாத்திமா.
‘‘அஞ்சாவதுக்கு மேல படிக்கலை. கல்யாணத்துக்கு முன்னாடி என் கணவருக்கு சமோசா வியாபாரம்தான். ஒரு கட்டத்துக்கு மேல செய்ய முடியாம நிறுத்திட்டார். கல்யாணத்துக்குப் பிறகு, வருமானம் பத்தலை. மூணு பொம்பிளைப் பிள்ளைங்களாயிடுச்சு... கணவர்கிட்டருந்து கத்துக்கிட்டு மறுபடி நான் சமோசா பிசினஸை தொடர்ந்தேன். இன்னிக்கு பிறந்த நாள் உள்பட பல வித பார்ட்டிகள், கம்பெனி மீட்டிங்குகளுக்கெல்லாம் ஆர்டர் எடுத்துச் செய்யற அளவுக்கு பிசி...’’ என்கிற பாத்திமா, கற்றுக்கொண்டு தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை... முதலீடு?‘‘ஆரம்பத்துல வீட்ல உள்ள கடாய், பாத்திரங்களே போதும். மைதா, எண்ணெய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி, மசாலா பொருள்கள்தான் முக்கியம். 500&லேர்ந்து 1000 ரூபாய் முதலீடு போதும். ரெண்டு விதமான சமோசா செய்யலாம். பெரிய சைஸ்தான் மீட்டிங், பார்ட்டிகளுக்கு விரும்புவாங்க. குட்டிக்குட்டியா வெறும் வெங்காயம் மட்டும் வச்சு செய்யறதை, பாக்கெட் போட்டு கடைகளுக்குக் கொடுக்கலாம்.’’
என்ன ஸ்பெஷல்?‘‘வீட்ல செய்யறதால சுத்தத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம். பல கடைகள்ல ஒரே எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கிறாங்க. அது ஆபத்தானது. ஆர்டர்
எடுத்துச் செய்யறதால, என்ன மாதிரி ருசில கேட்கறாங்களோ அப்படி செய்து கொடுக்கவும் முடியும்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘எந்த ஒரு பொருளையும் முதல் நாளே எல்லாரையும் வாங்க வச்சிட முடியாது. முதல்ல நஷ்டத்தைப் பார்க்காம, சாம்பிள் கொடுத்துத்தான் ஆர்டர் பிடிக்கணும். அக்கம்பக்கத்து வீடுகளுக்குத் தந்து, பிறந்த நாளைக்கு ஆர்டர் எடுக்கலாம். வீட்டுக்குப் பக்கத்துல உள்ள கடைகளுக்கு சப்ளை பண்ணலாம். தெரிஞ்சவங்க, நண்பர்களோட ஆபீஸ் மீட்டிங்ல சப்ளை பண்ண ஆர்டர் பிடிக்கலாம். தியேட்டர் மாதிரி இடங்களையும் அணுகலாம். சின்ன சைஸ் 2 ரூபாய்க்கும், பெரிசு 5 ரூபாய்க்கும் கொடுக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?‘‘சமோசா செய்யறது என்ன வித்தையா? அதுக்கென்ன பயிற்சின்னு சிலர் நினைக்கலாம். ஆனா, மேல் மாவு பிசையறது, அதை மடிக்கிறது, சரியான பக்குவத்துல பொரிக்கிறதுன்னு மூணுமே ரொம்ப முக்கியம். இதுல கொஞ்சம் மாறினாலும் ருசி மாறிடும். ஒரே நாள் பயிற்சில எல்லாம் கத்துக்க கட்டணம் 150 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்