அழிந்துவரும் தமிழர் இசைக்கருவிகள் தக்கை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

பேரகத்தியம், செய்யுட்டுரைக் கோவை, சிற்றிசை, பேரிசை, பஞ்சமரபு, பதினாறு படலம், பெறுநாரை, பெருங்குருவு, வாய்ப்பியம்... இவையெல்லாம் பழங்கால இசை இலக்கண நூல்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எண்ணற்ற இசைநூல்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இசைக்கவும் இசை வளர்க்கவும் பாணர் என்றொரு வாணர் கூட்டமே பண்டைத் தமிழகத்தில் உண்டு.

தமிழர் கண்டறிந்த இசைக்கருவிகள் எண்ணிக்கையில் அடங்காதவை. சிலப்பதிகாரம் மட்டும், ஆறெறிபரை, நிசாளம், சூசிகம் என புழக்கத்தில் இருந்த 32 தோற்கருவிகளை அடையாளம் காட்டுகிறது. 100க்கும் அதிக தாய் ராகங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராகங்களும் கொண்ட தமிழிசையின் சீரும் சிறப்பும் இடைக்காலத்தில் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்பால் நசிந்து போனது ஒரு சோக வரலாறு. அந்த தாக்குதலைத் தாண்டியும் நிலைத்திருக்கும் சொற்பக் கருவிகளும் இன்று கொள்வார் இல்லாமல் அழிந்து கொண்டுள்ளன. தக்கை அவ்விதமான ஒரு தோல் இசைக்கருவி.

காரைக்கால் அம்மையார், ‘சட்ஜரி, கொக்கறை, தக்கையோடு துந்துபி ஒலிக்க நடராஜர் நடனம் புரிந்த’தாகக் குறிப்பிடுகிறார். கம்ப ராமாயணத்திலும் பல்வேறு இடங்களில் இக்கருவியின் பெயர் ஒலிக்கிறது. குறிஞ்சி நிலத்தின் தலைவனான முருகனுக்கும், பாலை நிலத் தலைவியான கொற்றவைக்கும் உகந்த இசைக்கருவியாக இது அடையாளம் காட்டப்படுகிறது. பைரவரும் தக்கையின் இசையில் மயங்கக் கூடியவராம்.

தோலிசைக் கருவிகளை அக முழவு, புறமுழவு என இருவகைப்படுத்துகிறது பஞ்சமரபு என்ற பழந்தமிழ் இசைநூல். அகமுழவு என்பது அரங்கக்கருவி. புறமுழவு வீதிக்கருவி. தக்கை இரண்டுவிதமாகவும் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது துடி என்ற இசைக்கருவியின் தொடர்நிலைக் கருவியாக இருக்கலாம் என்பது இசையறிஞர் கணிப்பு. உடுக்கையை ஒத்த வடிவமைப்போடு, அதைவிட சற்று பெரிதான, இடையில் சுருங்கி, இருபுறமும் விரிந்த  உடலமைப்பு கொண்டது. இருமுகக் கருவியாக இருந்தாலும், ஒரு முகத்தில் மட்டுமே வாசிக்கப்படும். அரளிக்குச்சியால் வாசிப்பது வழக்கம். மற்ற குச்சிகள் தோலைத் தின்றுவிடும் என்பதால் பால்தன்மை மிக்க அரளிக்குச்சி கொண்டு இசைப்பதாகச் சொல்கிறார் ஸ்ரீரங்கம்
ரங்கநாதர் கோயிலின் தக்கைக் கலைஞர் கேசவன். இரண்டுமாத ஆட்டுக்குட்டியின் தோல் கொண்டு வார்க்கப்படும் இக்கருவி, ‘தக் தக்’ என்று ஒலியெழுப்புவதால் ‘தக்கை’
எனப் பெயர் பெற்றது.

இப்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மட்டும் வைகுண்ட ஏகாதசியன்று இக்கருவி வாசிக்கப்படுகிறது. பெரிய உடல், வீரவண்டி, சேமங்கலம், வெள்ளி எக்காளம், டோலக், மிருதங்கம், நாதஸ்வரம், சங்கு உள்ளிட்ட 17 இசைக¢கருவிகளோடு சேர்த்து தக்கையும் வாசிக்கப்படும். நம்பெருமானுக்கு பகல்பத்து, ராப்பத்து பூஜை நிகழும்போது இக்கருவியை வாசிப்பது மரபு. கருவறையிலிருந்து பெருமாள் வெளிப்பட்டு அரையர்கள் சேவிக்கும்போது, சுத்தமத்தளம், தவளை மத்தளத்தோடு தக்கையும் வாசிக்கப்படுகிறது. அரையர் சேவிப்பு முடிந்து கிளிமண்டபம் வரும்போதும் தக்கை வாசிக்கப்படும். பெருமாளை சேவிக்க வரும் தேவதைகளை வரவேற்கவே இக்கருவி வாசிக்கப்படுவதாகச் சொல்கிறார் கேசவன்.

கொங்கு மண்டலத்தில் மங்கள நிகழ்ச்சிகள் அனைத்திலும் தக்கை வாசிப்பது மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டது. இதை வாசித்தபடி கதைகளைச் சொல்வது வழக்காக இருந்துள்ளது. ‘தக்கை ராமாயணம்’ என்றொரு கதைப்பாடல் வடிவமும் இங்குண்டு. வில்லுப்பாட்டில் கதைசொல்லிகள் உடுக்கையைப் பயன்படுத்துவது போல, ராமனின் கதையை தக்கையை அடித்தபடி பாடும் இக்கலை இப்போது வழக்கொழிந்து விட்டது. சங்ககிரி நல்லதம்பி காங்கேயன் என்ற புரவலரின் வேண்டுகோளுக்கு இணங்க, இக்கதைப்பாடலை வடிவமைத்தவர் எம்பெருமான் கவிராயர். இவரது காலம் கி.பி.1600. கம்ப ராமாயணத்தின் சுருங்கிய வடிவமான இப்பாடல்கள் கற்பனை அழகும் கவிமயமும் பொருந்தியவை. சுமார் 3250 பாடல்களைக் கொண்ட இது இன்னும் ஏட்டுவடிவம் பெறவில்லை என்பது பேரிழப்பு.
 வெ.நீலகண்டன்
படங்கள்: கே.எம்.சந்திரசேகரன்