விநோத ரஸ மஞ்சரி
‘‘நம்ம ஃப்ளாட், ரோட்டுல இருந்து பக்கத்துல சார். பின்னாடியே ரயில்வே டிராக். ஏர் போர்ட் அடுத்த வருஷமே வருது!’’ - நம்ம ஊரில் களை கட்டும் அதே ரியல் எஸ்டேட் ரீல்தான். ஆனால், சீனாவில் இது அடுத்த கட்டத்துக்குப் போய் விட்டது. ‘‘இந்த இடத்துல வீடு வாங்க உலக நாடுகள்ல இருந்தெல்லாம் மக்கள் போட்டி போடுறாங்க.
இதோ நம்மகிட்ட நாலு வீடு வாங்கிப் போட்டிருக்குற வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தை மீட் பண்ணுங்க!’’ என வெள்ளைக்காரர்களையே கொண்டு வந்து இறக்குகிறார்கள் அங்கே. அவர்கள் யாரும் ஒரிஜினல் அல்ல... குவார்ட்டர் - கோழி பிரியாணி ரேஞ்சுக்கு கூலி பேசி அழைத்து வரப்பட்ட வாடகை வெள்ளைக்காரர்கள்!
சீனா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுதான். சமீபத்தில் அங்கே ரியல் எஸ்டேட் பெரும் வளர்ச்சி கண்டதும் உண்மைதான். அதற்காக, குட்டி குட்டி நகரங்களில் எல்லாம் மாடி மேல் மாடி கட்டி வைத்தால் யார் வாங்குவார்கள்? அங்கே கட்டிட கம்பெனிகள் கட்டி வைத்திருக்கும் பெரும்பாலான வீடுகள் போணியாகாமல் கிடக்கின்றன. அவற்றை விற்றாக வேண்டிய பிரஷர் காரணமாகத்தான் இப்படியொரு வியாபாரத் தந்திரம்.
‘வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போல, வெள்ளைக்காரன் வந்தாலே அந்த இடம் உயர்வானதாகத்தான் இருக்கும் என்ற பிம்பம் சீனாவில் உண்டு. எனவேதான் ஐரோப்பிய தோல் கொண்டவர்களை வாடகைக்குப் பிடித்து இப்படி நிற்க வைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் துண்டு பீடி பார்ட்டியாகக் கூட இருக்கலாம்.
ஆனால், பில்டர்கள் நடத்தும் விளம்பர நிகழ்ச்சிகளில் இவர்கள் இத்தாலியைச் சேர்ந்த ஃபுட்பால் வீரராகவும், ஜெர்மனி நாட்டு பிஸினஸ் மேனாகவும் சொல்லப்படுவார்கள். நடித்து முடித்துவிட்டு ‘மாமா... பிஸ்கோத்து’ எனத் தங்கள் கூலியைக் கேட்டு வாங்கிப் போவார்கள்.
சமீபத்தில் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையைச் சேர்ந்த டேவிட் போரன்ஸ்டைன், மேற்கு சீனாவெங்கும் பயணித்து இந்தத் தகிடுதத்தங்களை ஒரு ஆவணப் படமாகவே எடுத்திருக்கிறார். யூ டியூபில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், சீனாவின் பில்டர்களை சுருக்கென்று தைத்திருக்கிறது.இங்கிருந்து அங்கே வேலைக்குப் போன காலம் போய், இன்று கிழக்கு நாடுகள் மேற்குலக மக்களை வாடகைக்கு வாங்குவது பெருமைதானே!
- ரெமோ