தனிமை



என்னம்மா கதை எழுதி முடிச்சாச்சா? கொண்டாங்க நான் படிக்கிறேன்!’’ - அம்மா தாரணியிடமிருந்து அந்த நோட்டைப் பறித்தாள் கல்லூரி மாணவி அனுஷா. தாரணி ஓர் எழுத்தாளர். அவள் எழுதும் கதைகளுக்கு முதல் வாசகி மகள்தான். அன்று அவள் எழுதிய கதையின் பெயர் ‘தனிமை’. கணவனை இழந்த ஒரு கைம்பெண்ணின் தனிமை சோகங்களை அற்புதமாக வடித்திருந்தாள் தாரணி.

‘‘கதை சூப்பர்மா! ஒரு சின்ன வேலை... போயிட்டு உடனே வர்றேன்!’’ என்று வெளியே கிளம்பினாள் அனுஷா. சற்று நேரத்தில் திரும்பி வந்தவள், கையில் ஒரு கேரி பேக்... அதில் அழகாய் ஒரு கோல்டு ஃபிஷ்!‘‘எதுக்கும்மா இப்ப மீன்?  நம்ம தொட்டியில ஏற்கனவே ஒரு கோல்டு ஃபிஷ் போட்டிருக்கறோமே!’’ - மகளை வினவினாள் தாரணி.

‘‘அம்மா, தனிமை மிகவும் கொடியதுன்னு எழுதின நீங்களா இப்படி கேட்கிறீங்க? நம்ம தொட்டியில ஒத்தையா சுத்துற மீனைப் பார்க்கும்போது உங்களோட கதாநாயகிதான் என் மனசுல வந்தா. மனுஷன்னாலும், மற்ற ஜீவராசின்னாலும் தனிமை கஷ்டம்தானம்மா? அதனாலதான் இந்த ஒத்தை மீனுக்கு ஜோடி, இன்னொரு மீன்!’’ என்றாள் அனுஷா.மகளின் நல்ல மனம் கண்டு உச்சி குளிர்ந்தது தாய்க்கு.

வி.சகிதா முருகன்