மனதைக் கண்ணாடி போல பிரதிபலிக்கிறது தம்பிச்சோழனின் சிரிப்பு. கூத்துப்பட்டறையில் தட்டித் தட்டி வார்க்கப்பட்ட கலைஞர். புதிய சினிமாக்காரர்களை தயாரிக்கும் ஆக்டிங் கோச். உலகளாவிய யுக்திகளைக் கையாண்டு அரங்கக்கலையின் திசையில் இளம் தலைமுறையை ஈர்க்கும் இயல்புக் கலைஞன்.
இலக்கியப் பிரதிகளை அரங்க வடிவமாக மாற்றும் புதிய கலை வடிவத்தின் முன்னோடி. அண்மையில் இவர் வெளியிட்டுள்ள ‘நீங்களும் நடிக்கலாம்’ என்ற புத்தகம், அரங்கக்கலையின் போக்கையும், அரசியலையும், வளர்ச்சியையும் வெளிப்படையாகப் பேசுகிறது. தம்பிச்சோழனைப் பற்றிச் சொல்ல இப்படி நிறைய இருக்கிறது. கூடவே ஒரு இனிய காதலும்!
தேன்கனிக்கோட்டைக்கு அருகில் உள்ள உச்சனப்பள்ளியைச் சேர்ந்த தம்பிச்சோழன் படித்தது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில். புறக்கணிப்பையும் ஏக்கத்தையுமே எதிர்கொண்ட இளம்பருவம். காலம் அலையாக அடித்துக் கரை சேர்த்திருக்கிறது. இவரின் காதல் மனைவி ஷீலாவுக்கு ஜெயங்கொண்டம் சொந்த ஊர்.
இவரது பால்யமும், தம்பிச்சோழனைப் போலவே இறுக்கமானது. இளவரசன்-திவ்யா காதல் பற்றி தம்பிச்சோழன் ஒரு குறும்படத்தை இயக்கினார். அதில் நாயகியாக நடிக்க வந்த ஷீலா, தம்பிச்சோழனின் நாயகியாகிப் போனார். அந்தக் காதலர்களைப் போலவே இந்தக் காதலர்களையும் ஊர் ஊராகத் துரத்தியது எதிர்ப்பு. சிறை, மிரட்டல் என அனைத்தையும் கடந்து கைகூடியிருக்கிறது காதல்.
‘‘20 வயது வரைக்கும் இறுக்கமும் தவிப்புமா கிடந்த மனசு இது. பளீர்னு வெளிப்படுற இந்த சிரிப்பெல்லாம் எங்கோ ஆழத்துல வத்திப் போய்க் கிடந்துச்சு. கோபம், விரோதம், வன்மம், தனிமைன்னு சிடுக்கு நிறைஞ்ச வாழ்க்கை. கூத்துப்பட்டறை முத்துசாமிதான் தட்டித் தட்டி என்னை இலகுவாக்கினார்.
அப்பாவுக்கு மூணு மனைவிங்க. அம்மா, மூணாவது மனைவி. அவங்களுக்குப் பொறந்தது 9 பிள்ளைங்க. ஆனா அடுத்தடுத்து ஆறு புள்ளைங்க செத்துப் போச்சு. நான், அக்கா, தங்கைதான் மிச்சம். பிறந்த புள்ளைகள்லாம் வரிசையா செத்து விழவே, அம்மாவுக்கு மனப்பிரச்னை வந்திடுச்சு. அப்பா, பொறுப்பில்லாத மனுஷன்.
அம்மாவோட அன்பு, அப்பாவோட ஆதரவு எதுவுமே கிடைக்காத ஏக்கத்தோட மனம்போன திசையில வளர்ந்தேன். நாலாம் வகுப்பு போகும்போது அம்மா தற்கொலை செஞ்சுக்குச்சு. அதுக்கு காரணம் அப்பாதான்னு மனசுல அழுத்தமா பதிஞ்சுபோச்சு. ‘உன்கூட இருக்கவே பிடிக்கலே. என்னை ஹாஸ்டல்ல சேத்து விட்டுடு’ன்னு அழுதேன். மனுஷன் தர்மபுரியில இருந்த கூர்நோக்கு இல்லத்துல சேத்து விட்டுட்டார்.
கூர்நோக்கு இல்லம்னா, இளம் குற்றவாளிகளைப் பராமரிக்கிற சிறை. அவங்களை தனியா வச்சிருப்பாங்க. பெற்றோரால கைவிடப்பட்ட, வசதியில்லாத பிள்ளைகளும் அங்கே தங்கிப் படிக்கலாம். விசாரணையில இருக்கிற பசங்க, சந்தேக கேஸ்ல பிடிக்கப்படுற பசங்களை எங்களோட வச்சிருப்பாங்க. அந்த சூழ்நிலையிலதான் பத்தாம் வகுப்பைத் தொட்டேன். உதயகுமார்னு ஒரு வார்டன் இருந்தார்.
அவர்தான் எனக்கு பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பை அறிமுகம் செஞ்சவர். பள்ளிக்காலத்துலயே இலக்கியம் அறிமுகமாயிடுச்சு. நிறைய புத்தகங்கள் வாசிக்கக் கிடைச்சுச்சு. எழுதவும் ஆரம்பிச்சேன். வாசிக்கிறதும், எழுதுறதும் எனக்கு ஆறுதலா இருந்துச்சு. அதேநேரம் அதுவே என் படிப்புக்குத் தடையாவும் மாறுச்சு. என்னைப் பிடிக்காத ஒரு ஆசிரியர், நான் எழுதின நாடகத்தைப் படிச்சுட்டு என்னை அவமானப்படுத்தினார். படிப்பே வேணாம்னு வெளியில வந்துட்டேன்.
அப்பாவுக்கும் எனக்கும் ஒத்துப் போகவே இல்லை. ‘நான் வச்ச பேரைக்கூட இனி நீ வச்சுக்கக் கூடாது. நமக்குள்ள எந்த உறவும் இல்லை...’ன்னு திட்டினார். எனக்கும் அவர் வச்ச பேரு சுமையாத்தான் இருந்துச்சு. ராஜ்குமார்ங்கிற நான் தம்பிச்சோழன் ஆனது அப்போதான். சினிமா கனவோட சென்னைக்கு வந்தேன். எந்தக் கதவும் திறக்கலே.
ஆவடியில ஒரு ஹோட்டல் கதவுதான் திறந்துச்சு. பாத்திரம் கழுவுற வேலை... காலையில தண்ணிக்குள்ள கால் வச்சா ராத்திரி 11 மணி வரைக்கும் துலக்கி துலக்கி கை தேஞ்சிடும். நேரத்தை திங்காத ஒரு வேலையை தேடத் தொடங்குனேன். ஒரு கேன்டீன்ல பகுதி நேரமா வேலை கிடைச்சுச்சு. 2 வருஷத்தில சமையல் மாஸ்டராகிட்டேன். அப்படியே யுகபாரதியோட நட்பு கிடைச்சுச்சு. யுகபாரதி அப்போ ‘படித்துறை’ இதழ் நடத்திக்கிட்டிருந்தார். அந்த இதழுக்காகவும் கொஞ்சம் வேலைகள் செஞ்சேன்.
‘படித்துறை’ பதிப்பாளர் விஜயராகவன் சார், கூத்துப்பட்டறையில ஒரு அறங்காவலர். கூத்துப்பட்டறைக்கு ஒரு சமையல்காரர் தேவைப்பட்டப்போ என்னை பரிந்துரைச்சார். சமையல்காரனா அங்க நுழைஞ்சேன். மனசு முழுக்க சினிமாதான் நிரம்பியிருந்துச்சு. சமையல் வேலை முடிச்சதும், பயிற்சியில ஒட்டிக்குவேன். வாசிப்பும் எழுத்தும் இருந்ததால முத்துசாமி சார்கிட்ட தனிக்கவனம் கிடைச்சுச்சு. வாசிக்க, பேச, பாட, எழுத, நடக்க, நடிக்க... நிறைய என்னை செம்மைப்படுத்தினார்.
நிறைய அரங்கப் பயிற்சிகளுக்கு என்னை அனுப்பினார். டாடா நிறுவனத்தோட இணைஞ்சு உருவாக்கின ஒரு தியேட்டர் ப்ராஜெக்ட்ல என்னை முக்கிய பயிற்சியாளனா நியமிச்சார். அந்த தருணத்துல சினிமாவை விட நாடகம் மேல ஆர்வம் அதிகமா இருந்துச்சு. சினிமாவில கிடைச்ச வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்தேன்.
கூத்துப்பட்டறை என்னை வளர்த்தாலும் அது மேல எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கு. முத்துசாமி ஆர்வமும் உத்வேகமும் நிரம்பின நடிகர்களை மேலேற்றிவிட தன்னாலான எல்லா வேலைகளையும் செய்வார். ஆனா கூத்துப்பட்டறை நிறுவனம் எளிய மனிதர்களா ஆர்வத்தோட வர்றவங்க மேல கொஞ்சமும் அக்கறை காட்டுறதில்லைன்னு தோணுச்சு.
ஒரு கசப்புல அங்கிருந்து வெளியே வந்து, ‘சன்னதம்’ அரங்கக்குழுவை ஆரம்பிச்சேன். நிறைய இலக்கியப் பிரதிகளை நாடகமாக்க முயற்சி செஞ்சேன். நிழல் அமைப்போட சேர்ந்து நடிகர்களுக்குப் பயிற்சி கொடுத்தேன். அந்தத் தருணத்தில, விஜய் ஆண்டனி அவரோட படத்துக்காக ஒர்க் பண்ணக் கூப்பிட்டார். அடுத்து ‘பீட்சா’ படத்துக்காக விஜய்சேதுபதி அழைச்சார். ஒரு கட்டத்துல அதுவே பிரதான வேலையாப் போச்சு. தங்கர்பச்சான், ஜேடி-ஜெர்ரிகிட்ட வேலை செஞ்சிருக்கேன். அடுத்து ஒரு படம் இயக்குறதுக்கான வேலைகள்ல தீவிரமாகியிருக்கேன்...’’ - உற்சாகமாகப் பேசுகிறார் தம்பிச்சோழன்.
ஷீலா, திருச்சி கலைக்காவேரியில் பரதம் படித்தவர். இப்போது பிரளயனின் சென்னைக் கலைக்குழுவில் இருக்கிறார். “சோழன் போல அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் ஏங்கியபடிதான் நானும் வளர்ந்தேன். படிப்பை முடிக்கிறதுக்கு முன்பே வீட்டில திருமண ஏற்பாடு செஞ்சாங்க. நிறைய கனவுகளோட இருந்த என்னால அந்த வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்கமுடியலே. சோழன்கிட்ட வந்துட்டேன். நிறைய பிரச்னை. பல மாதங்கள் தலைமறைவா இருந்தோம். சோழன் சிறைக்குப் போனார். என்னை ஹோமுக்கு அனுப்பினாங்க. நல்ல நண்பர்கள் துணை நின்னாங்க.
மன உளைச்சலும் துயரமும் ரொம்ப நாள் துரத்துச்சு. எல்லாத்தையும் தாங்கிக்கிட்டோம். அன்பு, கோபம், காதல், உண்மை, அறிவு எல்லாம் நிறைஞ்ச காதலன் சோழன். வரம் வாங்கிட்டு வந்த வாழ்க்கை மாதிரி இருக்கு...” - சோழனின் கரம் கோர்த்து புன்னகைக்கிறார் ஷீலா.காற்று ரசனையாக மெல்லத் தலையாட்ட, மரம் பூக்களை உதிர்த்து ஆசீர்வதிக்கிறது தம்பிச்சோழனையும் ஷீலாவையும். சினிமா கனவோட சென்னைக்கு வந்தேன். எந்தக் கதவும் திறக்கலே. ஆவடியில ஒரு ஹோட்டல் கதவுதான் திறந்துச்சு. பாத்திரம் கழுவுற வேலை...
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்