அந்த பள்ளிக்கூட வளாகமே மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வாங்குவதற்கு கூட்டம் நெருங்கிப் பிதுங்கியது. அதில் பாதிப்பேர் அரசு வேலை பார்ப்பவர்கள், சகல வசதி படைத்த பணக்காரர்கள். இது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், ‘‘இவங்களுக்கு எதுக்கு இலவசம்?’’ என ஒரு கேள்வி எழவில்லை. ‘இதெல்லாம் சகஜமப்பா’ எனும் ரேஞ்சுக்கு பழகிப் போன மனங்கள்.
ஆனால் அவர்களையே கடுப்பேற்றும்படி இருந்தது சாமிநாதனின் செய்கை. அவர் மகன் நன்றாகப் படித்து வெளிநாட்டில் இருக்கிறான். நல்ல சம்பாத்தியம். பங்களா, கார். ஆனால், அவர் கூட்டத்தை அவசர அவசரமாக விலக்குவதென்ன... இடித்துத் தள்ளி கவுன்டரை நோக்கி முன்னேறுவதென்ன! ‘‘ஏம்பா, நாங்கல்லாம் வரிசையில நிக்கறது தெரியல?’’ என சீறியது ஒரு குரல்.
‘‘இவங்களுக்கெல்லாம் அப்படி என்ன பேராசையோ!’’ எனப் புலம்பியது ஒரு குரல்.எதையும் கண்டுகொள்ளாமல் முன்னேறி, தன் குடும்ப அட்டையை கவுன்டருக்குள் நீட்டினார் சாமிநாதன். ‘‘சார்... நீங்க இலவசமா குடுக்கிற எல்லாப் பொருளும் எங்க வீட்டுல இருக்கு. எனக்கு எதுவும் தேவையில்ல. நான் எதுவும்் வாங்கலைன்னு அட்டையில எழுதிக் குடுங்க..!’’ என்றார் அவர் அவசரமாக!அதன் பின் யாருக்கும் பேச நா எழவில்லை.
ஐரேனிபுரம் பால்ராசய்யா