அந்தச் சாலையில் கடைகளோ, தெருவிளக்குகளோ இல்லை... கும்மிருட்டு. அவ்வப்போது கிராஸ் செய்யும் லாரிகளின் ஹெட்லைட் வெளிச்சத்தை வைத்து குத்துமதிப்பாக மேடு பள்ளங்களைக் கணித்தபடி மெல்ல போய்க்கொண்டிருந்தாள் ராகினி.
இந்த நேரத்தில் இந்த ரூட்டில் கணவனும் இல்லாமல் தனியே வந்திருக்கக் கூடாதுதான். ராகினி தன்னையே நொந்துகொண்டாள்.
திடீரென முதுகில் பளீரென ஹெட்லைட் வெளிச்சம். பயத்துடன் திரும்பிப் பார்த்தாள். பின்னால், மிக அருகில், ஒரு மாருதி மெல்ல அவளை ஃபாலோ செய்தது. உள்ளிருந்தவன் சிநேகமாய்ப் புன்னகைத்தான்.பயம் குறைந்து சாலையைப் பார்த்தாள். அந்த வெளிச்சத்தில் சாலை தெளிவாய்த் தெரிந்தது.
வேகம் கூட்டி நடந்தாள். பின்னாலேயே உதவுவது போல மாருதி வந்துகொண்டேயிருந்தது. வீடு போய்ச் சேர்ந்ததும் திரும்பிப் பார்த்தாள். மாருதி பதில் எதிர்பார்க்காமல் பறந்துவிட்டது.
இரவு. கணவனிடம் நடந்ததைச் சொல்லி, ‘‘இப்படி நாலு பேரு இருக்கறதுனாலதான் மழை பெய்யுதுங்க!’’ என்றாள் ராகினி பெருமையாக!மாருதியை ஓட்டி வந்த குமார், டாஸ்மாக்கில் தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான்... ‘‘என்னா ஸ்ட்ரக்சர்டா! சும்மா சிலை மாதிரி உடம்பு. பார்த்துக்கிட்டே இருக்கலாம். அதான் லைட் அடிச்சி ரசிச்சிக்கிட்டே வந்தேன். அவளும் ஒண்ணுமே சொல்லல!’’
எஸ்.கார்த்திகேயன்