கைம்மண் அளவு



நாகர்கோயில் போயிருந்தேன் அண்மையில். நாகர்கோயிலா அல்லது நாகர்கோவிலா என்றொரு வழக்குண்டு இன்னமும். அதைத் தமிழறிஞர் தீர்க்கட்டும். ‘நாஞ்சில் நாடன் நாகர்கோயில் போவது அதிசயமா? என்னவோ சுவிட்சர்லாந்து போனதுபோல் சொல்கிறாரே’ என்பார் எமை அறிந்தார். அதுவும் சரிதான். என் 87 வயதுத் தாய் வாழும் ஊர்,  சகோதர சகோதரிகளும் சுற்றமும் வாழும் ஊர்.

காரணம் வந்து கொண்டே இருக்கும். நிச்சயதார்த்தம், கல்யாணம், சீமந்தம், பிள்ளைப்பேறு, காது குத்து, சாமத்தியம், யார் கணக்கிலும் அடங்காத இழவு, கோயில் கொடைகள்...1972ல் புலம் பெயர்ந்த பிறகு, 1974ல் முதல்முறையாக பம்பாயிலிருந்து ஊருக்குப் போனேன். அப்பொழுது எல்லாம் திருத்தணி தாண்டியதும் ஏற்படும் மனக்கிளர்ச்சி சொல்லில் அடங்காது. கால் நூற்றாண்டுக்கு முன்பு கோவைக்குப் புலம் பெயர, அதன்பின் மாதம் ஒருமுறை ஊருக்குப் போவது தவறாது. சில சமயம் இரண்டு முறையும்! உத்தேசக் கணக்காகக் கொண்டாலும் 300 முறைகள்.

நாகர்கோயில்  போக நான் ரயிலில் முன்பதிவு செய்வதில்லை. சொகுசுப் பேருந்துகள் அல்லது அரசுப் பேருந்துகள். சொகுசுக்கு எதிர்ப்பதம் அரசு என்று கொண்டாலும் எனக்கு அதில் வழக்கில்லை! ஒற்றைப் பயணக் கட்டணம் சராசரியாக ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும், கடந்த 25 ஆண்டுகளில் பேருந்துக்கு மாத்திரம் மூன்று லட்ச ரூபாய் செலவிட்டிருப்பேன். ஈதெல்லாம் பசித்தவன் பழம் கணக்குப் பார்ப்பது. எதுவானாலும் மதுரை வந்துவிட்டால் ஊருக்குப் போகிறோம் என்ற உணர்ச்சியும், திருநெல்வேலி தாண்டியதும் உடலிலும் உயிரிலும் பரவசமும் ஏறிவிடும். மின்பொறி தட்டியதுபோல் மொழியில் ஒரு மாற்றமும்!

ஒரு காலத்தில் வீரநாராயண மங்கலத்தின் மேற்கே பாயும் பழையாற்றின் மேற்குக்கரைச் சுடுகாட்டில்தான் எனது ஈமப்புகை எழும்பும் என்று விரும்பி இருந்தேன். இன்று அந்த மூர்க்கம் இல்லை. கோவையில் ஏதோஓர் மின் மயானம் காத்திருப்பதாகவே தோன்றுகிறது. நாமென்ன மாவீரன் செண்பகராமனா, ஜெர்மனியில் இருந்து கொண்டு வந்து சிதைச் சாம்பரை நாஞ்சில் நாட்டு வயல்வெளிகளில் தூவ?என்றாலும் எவர் பேரேட்டை எவர் பேணி விட இயலும்?

சொல்ல வந்த சம்பவம் வேறு!இப்போதெல்லாம் நாகர்கோயிலில் அதிகாலையில் இறங்கி, பதறி அடித்து ஊருக்கு ஓடுவதில்லை. வடிவீசுவரத்தில் தம்பி வீடு இருந்தது, நகருக்குள். தேரோடும் வீதியில் இருந்து நேராக முதல் மாடி அறைக்குப் போக வசதியுண்டு. முன்தினமே தகவல் சொல்லிவிட்டால், அறை சுத்தமாக்கப்பட்டு, தயாராக இருக்கும். நள்ளென்ற யாமத்தும் உறங்கும் வீட்டாரை எழுப்பாமல் நேராக அறைக்குப் போய்விடலாம். பிறகு குளித்து, உடை மாற்றி, காலை உணவு உண்டு, அம்மாவைப் பார்க்க கிராமத்துக்குப் போவேன்.

ஏப்ரல் 24ம் நாள் காலை, எமது நண்பர் ஆரியபவன் சைவ உணவு விடுதி ரமேஷ், தனது இரண்டாவது நவீனமான கிளையை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே திறந்தார். புகழ்பெற்ற ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, அண்ணா சௌந்தர் வல்லத்தரசு, கவிஞர் அறிவுமதியுடன் நானும் கலந்துகொண்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் காலை உணவு உண்டு நாகர்கோயில் நகரப்ேபருந்து நிலையம் போனேன்.

எங்கள் ஊருக்குப் போக, அறுபது ஆண்டுகளாக ஓடும் தேரூர் - தாழக்குடி என்ற வழித்தடப் பேருந்து உண்டு. நாகர்கோயில் - ஆரல்வாய்மொழி என்று இறச்சகுளம், தாழக்குடி வழியாக ஒன்று. அதன் பின்னால் - நம்மாழ்வாரின் தாயார் காரிப்பிள்ளை பிறந்த, நூற்றெட்டு வைணவத் தலங்களில் ஒன்றான - திருவண்பரிசாரம் என்று நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும், திருப்பதி சாரம் என்று தோராயமான பிரபந்தங்களும் விளிக்கும் ஊரைத் தொட்டு, தாழக்குடி வழியாக ஆரல்வாய்மொழி போகும் பேருந்து ஒன்று.

மழை தூறிக்கொண்டிருந்தது. மழையின் தன்மை போல் சொற்கள் உண்டு நாஞ்சில் மொழியில். பொசுங்கல், சாரல், தூறல், தூற்றல், பெருமழை, அடைமழை என்றெல்லாம்! அன்று சிணுசிணுவென, சவலைப் பிள்ளை அழுவதைப் போலத் தூற்றல். வேட்டி நனையப் போதும். எனக்கு வடசேரி, இறச்சகுளம், தாழக்குடி வழியாக ஆரல்வாய்மொழி பேருந்து கிடைத்தது.

பேருந்து என்றும் அதைச் சொல்லலாம்தான். இருவர் அமரும் இருக்கையில் இளைஞன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். சற்று உள்ளே தள்ளி உட்காரச் சொன்னேன். என்னை உள்ளே போக ஆற்றுப்படுத் தினான். வடசேரியில் இறங்குவான் போலும் என்றெண்ணி முன்னெச்சரிக்கை புரிந்தது.

இருக்கைத் துணி கிழிந்து தொங்கிற்று. சற்று நேரத்தில் எனது மூலாதாரப் பிரதேசத்தில் தண்ணீர் கொவர்ந்து குளிர்ந்தது. பேன்டில் கறை ஏறாமல் இருக்க வேண்டுமே எனக் கவலை கொண்டது மனம். எனது வலது கைப் பக்கம், சன்னல். மழை, வெயில், காற்று, தூசுக்கு எந்தத் தடுப்பானும் இல்லை. மழை சற்றே வலுத்தது.

 பேருந்துக் கூரையில் இருந்து மழைநீர் வழிந்து இருக்கைப் பக்கம் வடிந்து கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தால், சன்னலோரக் கம்பிகள், தகரத் தடுப்புப் பகுதி யாவும் பல போர்க்களங்கள் கண்ட தளவாடங்கள் போலிருந்தன. தொட்டால் கை கிழியும்; பட்டால் மேல் கிழியும். தமிழ்ப்பாடல் வரி சொன்னால், ‘முள் பட்டாலும் முள்ளிலிட்டாலும்  முதலில் கிழிவது துணிதான்’.

எனது பரிதவிப்பைக் கண்ட இளைஞன் சொன்னான், ‘மழை பெலமாப் பெஞ்சா, ஒழுகும் சார்’ என்று. நேரடியாகக் காயலான் கடையில் இருந்து பழைய விலைக்குப் பேரீச்சம்பழம் கொடுத்து வாங்கி இருக்கும் போல அரசு. எனக்கும் பல காலமாக சந்தேகம் உண்டு. அதெப்படி தனியார் கட்டும் கட்டிடம் நூறு ஆண்டு நிற்கிறது... அரசாங்கம் கட்டும் வீடு இருபது ஆண்டுகளில் விழுகிறது?

அரசாங்கம்  தொட்டால் எந்தத் தொழிலும் அப்படித்தான் துலங்குமோ? நான் அமர்ந்திருந்ததைப்  போன்ற பேருந்தை மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் கிராமப் பயணங்களில் கண்டதில்லை. நமதோ, தேனிருந்து மழை பொழியும் தீந்தமிழ் தேசம். அது போன்றதோர் பேருந்து சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரையிலும் கண்டதில்லை. இளைஞனிடம் கேட்டேன், ‘‘ஏந் தம்பி!  உங்க மாவட்டத்துக்குள்ளே ஒட்டுப் பொறுக்கிய உதிரிப் பாகங்களை வைத்து பஸ் பாடி கெட்டுவாங்களா?’’

‘‘இல்ல சார்! முப்பது வருசத்துக்கு மிந்தி மெட்ராஸ்லே எறக்கினபோது பஸ் புதுசாத்தான் இருந்திருக்கும். அது அங்க ஓடி, விழுப்புரத்திலே ஓடி, சேலத்துல ஓடி, மதுரையிலே ஓடி, கடைசியாத் தெக்க வந்து சேரச்சிலே அதுக்கு ஊப்பாடு பத்திப் போகு! பஸ்சை எப்படிக் கொற சொல்ல முடியும் சார்?’’

‘‘சென்னையிலே ஒரு கிலோமீட்டர் பயணத்துக்கு வாங்கப்பட்ட பயணக் கட்டணம்தானே இங்கேயும் வாங்குகான்! இல்லே, இங்க விலையில்லாப் பயணமா?’’
அதற்குள் எனது வலப்புறம் சட்டைத் தோள்பாகம், கை எல்லாம் நனைந்து சொட்டியது. ஒவ்வொரு சாலை நொடியிலும் வண்டி இறங்கி ஏறும்போது, உட்கார்ந்திருந்த இருக்கையின் கம்பிகள் அசைந்து குலுங்கி, சிறுவயதின் எருமை சவாரியை நினைவுறுத்தியது.

அன்று காலை தம்பி வீட்டில் இருந்து நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் வீட்டுக்கு ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன். சாலைகளின் தரம் எனக்கு குஜராத் சுரேந்திர நகர் ஒட்டகச் சவாரியை நினைவு படுத்துவதாக இருந்தது. அநேகமாக அனைத்துச் சாலைகளுமே! நாகர்கோயில் ஒரு மாவட்டத்தின் தலைநகரம் என்பதை நினைவில் கொள்க!

பம்பாயில் முன்பு நான் வாழ்ந்திருந்தபோது, டைம்ஸ் ஆஃப் இந்தியா எனும் ஆங்கிலத் தினசரியில் கார்ட்டூனிஸ்ட் மேதை ஆர்.கே.லக்ஷ்மண் கேலிச்சித்திரங்கள் வரைவார்.  ஒருநாள் கார்ட்டூனில் திருவாளர் பொதுஜனம், பக்கத்தில் நிற்பவரிடம் சொல்வார், ‘‘இந்தச் சாலைகளின் பள்ளங்களைத் தூர்ப்பதற்குப் பதிலாக, பள்ளங்களின்  குறுக்கே பாலம் கட்டுவது எளிதான, செலவு குறைந்த வேலை’’ என்று. நமக்கோ, பாதை பல்லாங்குழி போலிருந்தது. பாலம் கட்டுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு.

ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டேன்... ‘‘ரெம்ப நாளா ரோடு இப்படித்தான இருக்கு?’’‘‘ரோடு போடுவானுக சார்... அதுக்கு முன்னே அவுனுகளுக்கு வீடு கெட்டாண்டாமா?’’ என்றார் பரிகாசமாக.‘‘வண்டி ஓட்ட ரெம்ப சாமர்த்தியம் வேணும்!’’ என்றேன்.‘‘விழுந்து செத்தா தலைக்கு மூணு லட்சம் சார்... எவன் ஆண்டாலும்  இங்க நம்ம நெலமை இதுதான்!’’ என்று கசந்து பேசினார்.நகைப்பதா, கரைவதா நாம்?

ஒருவேளை தர்மபுரி, விருத்தாசலம், கோவில்பட்டி, சிவகங்கை, மானாமதுரை நிலைமை இதைவிட மோசமாக இருக்கக்கூடும்.மாட்டு வண்டிகூட நுழையாத ஊர்களுக்குள் எல்லாம் தங்கள் பாட்டு வண்டி போனதுண்டு என்பார் இசைஞானி இளையராஜா. இன்று மாட்டு வண்டிகள் போகாத ஊருக்கெல்லாம் சிற்றுந்துகள் ஓடுகின்றன.

அந்த சிற்றுந்துகளின் நிலை அரசுப் பேருந்துகளின் நிலையைவிட மேலாக இருக்கின்றன. ஒரு காலத்தில் எனக்கு இவ்விதப் பேருந்துப் பயணங்களின்போது, ஓட்டுனர் - நடத்துனர் மேல் பகை தோன்றி வெறியும் ஏறும். கண்மணி குணசேகரனின் ‘நெடுஞ்சாலை’ நாவல் வாசித்த பிறகு அவர்கள் மேல் தயையும் கருணையுமே தோன்றுகிறது.

தோட்டத்தில் பாதி கிணறு என்றால் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? இன்றெவனும் அமைச்சனின் அல்லது மேலதிகாரியின் தாங்கொணாத் துன்பம் காரணமாகத் தற்கொலை முயல வேண்டாம். இவ்வித ஓட்டை உடைசல் மேளதாள குத்தாட்ட ஊர்ப்புறப் பேருந்தில் பயணம் செய்தாலே போதுமானது.இதை எல்லாம் எழுதுவதால் என்ன பயன் என்றும் தோன்றுகிறது. பழமொழி நானூறு கூறுகிறது, ‘அறுமோ நரி நக்கின் நென்று கடல்?’ என்று. ‘நரி நக்கியது என்பதால் கடல் நீர் குறைந்து போகுமா?’ என்றாலும் நமக்குச் சொல்லாமல் தீராது.

பல முறை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம், அரசு நஷ்ட ஈடு வழங்காமல் போனதினால் அரசுப் பேருந்தைப் பறிமுதல் செய்தார்கள் என்று! நான் பயணம் செய்த பேருந்துகள் போல பறிமுதல் செய்ய நேர்ந்தால், அவை துருப்பிடித்த இரும்பு விலைக்குத்தான் போகும் என்பதால், ஒரு லட்சம் ரூபாய் வசூலாக வேண்டுமானால் இருபத்தைந்து பேருந்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டியதிருக்கும்!

மழை பொய்த்தாலோ, காற்று கனக்க வீசினாலோ மத்திய அரசாங்கத்துக்கு லிகிதம் எழுதும் அரசியல் பாரம்பரியம் நமது. நாட்டில், ஊர்ப்புறங்களுக்கு என்று ஓடும் அரசுப் பேருந்துகள் கோளாறாகி நின்றால் யாருக்குக் கடிதம் எழுதுவார்கள்? பராக் ஒபாமாவுக்கா?

எனக்கொரு யோசனை தோன்றுகிறது. கற்றவர் அறிவுரையைக் கவர்ன்மென்ட் ஏற்றுக்கொள்வது பாவம் அன்று, ‘கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்’ என்பான் கம்பன். ‘கடிக்க வரும் கொடிய பாம்புகூட சொல்லுக்குக் கட்டுப்படும்’. ஆள்பவர்கள் நன்மதியாளர்களின் சொல்லுக்குக் கட்டுப்படாவிட்டால் என்னஆகும்? வெளியே இருந்து எவரும் கெடுக்க வேண்டும் என்று இல்லை. தாமே  கெட்டழிந்து போவார்கள். நான் சொல்லவில்லை. வள்ளுவம் சொல்கிறது:‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார் இலானும் கெடும்’

எமது ஆலோசனை, எதற்காக வம்புக்கு சாலைப் பராமரிப்பு? பேருந்துப் பராமரிப்பு? மாற்றாக, கிராமத்துப் போக்குவரத்துக்கு என வான்வழிச் சேவை தொடங்குவது சாலவும் நன்று. மூலதனச் செலவு பெரியதாகவே இருக்கும். ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பதுதானே ஆன்றோர் வாக்கு. செலவு பெரிதானால், வரவும் பெரிதுதானே! வரவு எதில் அதிகம், ஆயிரம் ரூபாய் செலவு செய்வதிலா? ஆயிரம் கோடி செலவு செய்வதிலா?

வழக்குகள் வரக்கூடும்!  எவர் ஆண்டாலும் பாரத கண்டத்தில், வழக்கென்று வந்துவிட்டால் தீர்ப்பென்று ஒன்று வர முப்பது ஆண்டுகளாவது ஆகாதா?பிறகென்ன, பெருக வாங்கிப் பெருவாழ்வு வாழ்க! ஆனால், ஆங்காரத்துடன் தலைகீழாய்ச் சொல்கிறார் ஒளவை மூதாட்டி: ‘எள்ளளவும் கைக்கூலி தான் வாங்கும் காலறுவான், தன் கிளையும் எச்சம் இறும்’. என்ன கடும் சாபம் பாருங்கள்... எள் அளவுகூட லஞ்சம் வாங்குபவன் சுற்றம் மிச்சம் மீதி இல்லாமல் அழியும் என்று.

‘அழியுமா? என்ற கேள்வி உங்களைப் போல எனக்கும் உண்டு. எனினும், கண்ணதாசன் சொன்னது போல், ‘நம்பிக்கை என்னும் நந்தா விளக்கு, உள்ளவரையில் உலகம் நமக்கு!’

அதெப்படி தனியார் கட்டும் கட்டிடம் நூறு ஆண்டு நிற்கிறது... அரசாங்கம் கட்டும் வீடு இருபது ஆண்டுகளில் விழுகிறது?சன்னலோரக் கம்பிகள், தகரத் தடுப்புப்  பகுதி யாவும் பல போர்க்களங்கள் கண்ட தளவாடங்கள் போலிருந்தன. தொட்டால் கை  கிழியும்; பட்டால் மேல்
கிழியும்.ஆங்காரத் துடன் சொல்கிறார்  ஒளவை... ‘எள்ளளவும் கைக்கூலிதான் வாங்கும் காலறுவான், தன் கிளையும்  எச்சம் இறும்’. என்ன கடும் சாபம் பாருங்கள்!

(கற்போம்...)

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது