த்ரிஷா என்னோட ரோல் மாடல்!



ஓவியா ஓப்பன் Talk!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில் க்ரிஸ்பி சிக்கன் ரோல் போல சிக்க்க்க் காஸ்ட்யூமில் ஓவியா. `` `மஞ்சப்பை’ படத்தோட கன்னட ரீமேக்ல நான்தான் ஹீரோயின். அதுக்காக பெங்களூரு வந்தேன். சென்னை மாதிரி இங்கேயும் வெயில் பின்னியெடுக்குது.   நிறைய தண்ணீர், இளநீர் குடிங்க... அப்போதான் சம்மரை சமாளிக்க முடியும்..’’

 - ஹெல்த் டிப்ஸோடு பேச ஆரம்பிக்கிறார் ஓவியா. பேட்டிக்கு சம்பந்தமே இல்லை என்றாலும், அழகான பொண்ணு கொடுக்கற டிப்ஸை நாம ஏன் எடிட் பண்றோம்!``நீங்க சென்னையில செட்டில் ஆகிட்டீங்களாமே?’’

``இல்லீங்க. பேரன்ட்ஸ் இன்னும் கேரளாவில்தான் இருக்காங்க. ரெண்டு, மூணு மாசத்துக்கு நடுவில ஒரு இடைவெளி கிடைச்சாலும் உடனே அங்கே போயிடுறேன். ஏப்ரல் 29 என் பர்த் டே. இந்த தடவை அதை வீட்ல செலிபரேட் பண்ண முடியல. பெங்களூரு ஷூட்டிங்ல யூனிட்டே என் பர்த் டேவை கொண்டாடினது சந்தோஷம்தான்.

இந்தப் படம் தவிர, சுந்தர்.சி தயாரிப்பில் வைபவ் நடிக்கும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன். அதுக்கு இன்னும் டைட்டில் வைக்கலை. அடுத்து, மிர்ச்சி சிவா, அசோக் செல்வனோட `144’, த்ரிஷா, பூனம் பஜ்வா வோட தெலுங்கு, தமிழில் ரெடியாகும் `போகி’... இந்த நான்கு படங்களால இப்போ நான் கொஞ்சம் பிஸி கேர்ள்!’’

``சேர்ந்து நடிக்கிறீங்க... என்ன சொல்றாங்க த்ரிஷா?’’``த்ரிஷா ரொம்ப ப்ரொபஷனல். ஃப்ரெண்ட்லியா, எளிமையா பழகுறாங்க. என்னோட ரோல் மாடல்னு கூட த்ரிஷாவை சொல்லலாம். பூனம் பஜ்வாவும் ரொம்ப ஸ்வீட் பர்சன். `ப்ரியம்’ படத்தை இயக்கிய பாண்டியன் சாரோட படம் ‘போகி’. இதில் ஹீரோவே கிடையாது. த்ரிஷா, நான், பூனம் பஜ்வான்னு எங்க ராஜ்ஜியம்தான். பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கற வித்தியாசமான ஸ்கிரிப்ட்!’’

‘‘வாட்ஸ் அப்ல இப்ப நடிகைகளோட பாத்ரூம், பெட்ரூம்னு...  வீடியோக்கள் ரவுண்ட் கட்டி அடிக்குதே..?’’``ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்ல எல்லாம் கவனம் செலுத்துறதுக்கு முதல்ல எனக்கு நேரம் இல்லை. வாட்ஸ் அப்ல வீடியோக்கள் டவுன்லோட் பண்ணி பார்க்குற பொறுமையும் எனக்கு இல்லை. பாத்ரூம்ல குளிக்கற வீடியோக்கள் வந்தது பத்தி பேப்பர்லதான் படிச்சு தெரிஞ்சுகிட்டேன். வக்கிர சிந்தனை உள்ளவங்களும் டெக்னாலஜியை மிஸ்யூஸ் பண்றவங்களும் அதிகரிச்சுட்டாங்க. ஸோ, நாமதான் கவனமா இருக்கணும்!’’

``ராதிகா ஆப்தே நிர்வாணமா நடிப்பதாக நியூஸ்... இந்தியில ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குற `அகிரா’ படத்துலயும் நிர்வாணக் காட்சி இருக்குனு சொல்றாங்க. அப்படிப்பட்ட ஆஃபர் வந்தா நீங்க ரெடியா?’’``ஐயையோ... நியூடா நடிக்கற ஐடியாவே மொதல்ல எனக்கு கிடையாது. சினிமாங்கறது கிளாமர் ஃபீல்ட்தான்.

ஸோ, கதைக்குத் தேவைன்னா நீச்சல் உடை, பாட்டு சீன்ஸ்ல கொஞ்சம் கிளாமரா நடிக்கறதெல்லாம் தப்பில்லை. அதான் என் பாலிஸி. எனக்கு நான் நிர்ணயிச்சிருக்கற எல்லையும் இதுதான். அதைத் தாண்டி இந்த மாதிரி நடிக்கிற அளவுக்கெல்லாம் சத்தியமா எனக்கு கட்ஸ் இல்லீங்க!’’‘‘கண்டிப்பா கேட்டே ஆகணும்... உங்க மேரேஜ் எப்போ?’’

``நானும் கண்டிப்பா சொல்லியே ஆகணும். மேரேஜ் பத்தி இன்னும் ப்ளான் பண்ணலீங்க. ஐயெம் ஸோ யங். நான் என்ன ஐம்பது, அறுபது படங்களா பண்ணிட்டேன்? இல்ல, ரசிகர்களுக்குத்தான் அலுத்துப் போயிட்டேனா? அது நடக்கும்போது நடக்கட்டும். அதுவரை நடிப்போம்..!’’ (மைண்ட் வாய்ஸ்: அது ஏன் என்னப் பார்த்து இந்தக் கேள்வியக் கேட்டே!)``ஓவியாவோட லட்சியம்?’’

‘‘நல்ல  படங்கள் நிறைய பண்ணணும். அது தவிர, எனக்கு ட்ராவலிங்  ரொம்பப் பிடிக்கும். தாய்லாந்து, சிங்கப்பூர், துபாய், கனடான்னு நிறைய  நாடுகள் போயிருக்கேன். போதாது! இன்னும் வேர்ல்ட் முழுக்க டூர் அடிக்கணும். அதுக்கு முன்னாடி இந்தியா  முழுக்க சுத்திப் பார்த்திடணும்!’’

- மை.பாரதிராஜா