துருத்திக் கொண்டிருக்கும்
கம்பிகளோடு
எழும்பிக் கொண்டிருக்கும்
கட்டிடத்தை
வலியோடு கடக்கும் காற்று!
இருட்டான மயானத்தில்
யாரோ ஒருவர்
எரிந்து கொண்டிருந்தார்
வெளிச்சமாக
அலைகளற்ற அமைதியான ஏரி
போராடிக்கொண்டேயிருக்கிறது
தண்ணீரை இழுத்துப் பிடித்தபடி
திருமணத்தில்
தலையைக் காட்ட வந்தவர்போல்
அவசர அவசரமாய்
மொய் எழுதிச் செல்கிறது மழை!
ஓடிப் பிடித்து விளையாடும்
அணில்களுக்காக
நீட்டிய கரம் மடக்காமல்
நிற்கும் மரம்
வரும் வழியில்
உறவினரைத் தவறவிட்ட
மழலையென
பரிதவித்து நிற்கும்
தபால்பெட்டி
சூடான சுண்டலை
சிந்தாமல் சுவைக்க
கூம்பாகச் சுருட்டி
கொட்டிக் கொடுத்த காகிதத்தில்
யாரோ ஒரு எழுத்தாளரின்
சிந்தனை வெந்து கொண்டிருக்கிறது...
வத்திராயிருப்பு
தெ.சு.கவுதமன்