மர்மத் தொடர் 19
‘‘ ‘சிலப்பதிகாரத்து மணிமேகலை வசமிருந்த அமுதசுரபி பொய்யா? மெய்யா?’ என்று கேட்ட அந்த அன்பரை நான் ஆழ்ந்து பார்த்தேன். அவரோ ‘பதில் கூறுங்கள்... பொய்யா? மெய்யா?’ என்று திரும்பவும் கேட்டார்.எனக்கு எப்படித் தெரியும்..? சிலப்பதிகாரம் ஒரு சமண இலக்கிய நூல் என்பதுதான் எனக்குத் தெரியும். இளங்கோவடிகள் எழுதியது என்பதும் தெரியும். அது உண்மையா, பொய்யா என்று கேட்டால் என்ன சொல்ல?
இதே கேள்வியை ராமாயணம், மகாபாரதம் பற்றியும் கேட்கலாம். இதிகாசங்களை, புராணங்களை பொய் என்று கூறுபவர்கள் ஒருபுறம்; ‘இல்லையில்லை... மெய்’ என்று நம்புபவர்கள் மறுபுறம்... இதில் நான் எந்தப் பக்கம்? எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். என் சிந்தனையை உசுப்பியும் விட்டேன். ஒரு ஆய்வாளனாக அரிய பல தடயங்களைக் கண்டவன் என்ற முறையிலும், பூகோள ரீதியாக நிலப்பரப்புகளை இன்று துல்லியமாக அளந்து பார்க்க முடிந்ததை வைத்தும் பார்த்தால் நிச்சயம் இவை கற்பனையாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. மெய்யாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிற முடிவுக்கும் வந்தேன்.
என் முடிவை சரியானது என்று நான் நிரூபிக்கவும் வேண்டும். அதற்கான தடயங்கள் மற்றும் என் வாதங்களே அதை நிரூபிக்கும். தடயங்கள் என்று பார்த்தால் கண்ணகி வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறது. இன்றும் தமிழக எல்லையில் ஒரு மலை மேல் அவளுக்கான கோயில் வழிபாட்டில் உள்ளது. சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டிய ஊர்கள் எல்லாமும் இன்றும் உள்ளன. பாண்டிய மண்ணும் சரி, சோழ மண்ணும் சரி, மற்றுமுள்ள பல்லவ ராஜ்யமும், சேர மண்ணும் பௌத்த, சமண சமயத்தவர்களால் அவ்வப்போது ஆளப்பட்டவை என்பதற்கான தடயங்கள் மிகவே உள்ளன.
காலத்தை வென்று நிற்பவை சிற்பங்களும் அதன் கூடங்களும்தான். அழியாத எழுத்துக்கள் என்றால் அவை கல்வெட்டுக்கள்தான்! இவற்றில் எல்லாம் ஆதாரங்கள் நிரம்பியுள்ளன.அடுத்து காகிதம் என்கிற ஒன்று கண்டறியப்படாத நிலையில் பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு கற்பனையான ஒன்றைப் படைக்க அன்று தேவை இருந்ததா என்பது எனது பிரதான கேள்வி.
கற்பனையான ஒன்றை ஒருவன் படைப்பதன் நோக்கமே, அந்தக் கற்பனை ஊரில் எல்லோரையும் அடைந்து அவர்கள் அவனைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான்! அப்படி இருக்க ஒரு பனை ஓலைக்கட்டை எப்படி ஊர் முழுக்க ஒருவர் வாசிக்கத் தர முடியும்? எனவே கற்பனைப் படைப்பு என்பது அடிபட்டுப் போகிறது. வரலாறாக இருந்தாலே, கட்டாயம் இதைப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதினாலே, ஏடுகள் உருவாகும். எனவே சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஏனைய காப்பியங்களும் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களே என்று முடிவு செய்த நான் அமுதசுரபியும் நிச்சயம் இருக்க வேண்டும் என்றும் நம்புகிறேன். என்றால் இப்போது அது எங்குள்ளது?”
- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அலறல் சப்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்தனர். அதில் அந்த எலெக்ட்ரீஷியனும் இருந்தான். அவர்கள் எதிரில் முத்தழகு கரிக்கட்டையாக துடித்துக் கொண்டிருந்தாள். எலெக்ட்ரீஷியன் உடனேயே பின்னங்கால் பிடரியில் பட வாசல்புறம் ஓடினான். அங்கே மெயின் ஸ்விட்ச்சை ஒட்டுமொத்தமாக அணைத்தான்.
அணைத்துவிட்டு வந்தவனை அனந்தகிருஷ்ணன் அசாத்யமாக வெறித்தார்.‘‘ஏய்யா... நீ வேலை பாக்கற லட்சணம் இதானா? இப்பப் பார்...’’ என்று வெடித்தார்.
பத்மாசினிக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது.‘‘குடுகுடுப்பைக்காரன் சொன்ன மாதிரியே ஆயிடுச்சே... ஐய்யோ!’’ என்றாள்.
‘‘வாய மூடு... ஏய், இவ உடம்புல இன்னும் உயிர் இருக்கு. முதல்ல ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகற வழியைப் பாரு...’’ - என்று கணபதி சுப்ர
மணியன் எலெக்ட்ரீஷியனைப் பார்த்தார்.
அவனிடம் முத்தழகுவை தொட்டுத் தூக்க தயக்கம். ‘‘என்ன பாக்கறே... நீதான் இவ இப்படி ஆக காரணம். இவளைக் காப்பாத்தியே தீரணும். இல்லன்னா கொலை கேஸ் ஆயிடும்...’’ என்று அனந்த கிருஷ்ணனும் சேர்ந்து அலற, அவன் அவளை நெருங்கித் தொட்டான். உடம்பின் ஒரு பாகம் தோசை போல வெந்து விரல்கள் தீய்ந்து விட்டிருந்தன. வாட்ச்மேன் தங்கவேலுவும் வந்து வாயைப் பிளந்துகொண்டு நின்றான்.
‘‘தங்கவேலு... அவனுக்கு ஹெல்ப் பண்ணு. அனந்தா காரை எடு. நேரா ஜி.ெஹச்சுக்கு போயிடுங்க. ஷாக்குங்கறதால பெருசா என்கொயரி இருக்காது. நீ போறதுக்குள்ள நான் சீஃப் டாக்டருக்கு போன் பண்ணி பேசிடறேன். அநாவசிய தொந்தரவோ தேக்கமோ எதுவும் இருக்காது!’’ - என்றபடியே கணபதி சுப்ரமணியன் ஒதுங்கினார்.
பத்மாசினியின் அகண்ட விழிகள் மட்டும் சுருங்கவேயில்லை.வள்ளுவரின் ஓட்டுக் கூரை வீடு!வெளியே அவர் பேரன் விளையாடிக் கொண்டிருந்தான். உள்ளே வள்ளுவரின் மனைவி, மகன் மற்றும் மருமகள். வள்ளுவர் வரவும் அவர் மனைவி தாட்சாயிணி நெற்றி யில் தெரிந்த பெரிய சைஸ் பொட்டோடு ‘வந்துட்டீங்களா?’ என்பது போல பார்த்தாள்.வள்ளுவரும் அந்த வீட்டைப் புதிதாய்ப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்தார்.
‘‘நீங்க இப்படி திரும்பி வருவீங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டாங்க... இல்ல..?’’ - என்று கேட்டாள் ப்ரியா. அது வள்ளுவரின் மனைவியை உசுப்பிவிட்டது.
‘‘ஐயோ... என்ன சொல்லுதுங்க இந்தப் பொண்ணு..? யாருங்க இது? எதுக்காக எங்களை அவசரமா மலையை விட்டு வரச் சொன்னீங்க..?’’ - என்று ஒரு கேள்விக்கு மூன்று கேள்விகளைக் கேட்டாள்.
‘‘சொல்றேன் தாட்சா... நீ அநாவசியமா பதற்றப்படாதே!’’ என்றவர், அவர் எதிரில் வந்து நின்று சிரித்த பேரனைப் பார்த்தார். அவன் வெறித்தான்.
‘‘வாடா இங்க... முட்ட முழிப் பயலே!’’ என்று அவன் பெரிய விழிகளை ரசித்தபடியே அழைத்தார். அப்போது அவர் மருமகளின் பழங்கால நோக்கியா செல்போனில் ‘தோத்திரம் பாடிடுவேன்’ எனும் ரிங்டோன் ஒலித்திட, பேரனே ஓடிப் போய் எடுத்து ஆன் செய்து, ‘‘ஹலோ... யார் வேணும்?’’ எனக் கேட்டான்.
அவனது வேகம், நடை, நிற்கும் விதம் என்று சகலத்திலும் பால்யத்துக்கே உண்டான லாவண்யங்கள்.
‘‘யாருடா?’’ என்று கேட்டபடி அவனிடமிருந்து போனை கொஞ்சம் வேகத்தோடு வாங்கினாள் அவர் மருமகள். காதையும் கொடுத்தாள். பின் பேசினாள்.
‘‘நாங்க நாளைக்கே வந்துடுவோம். எல்லாரும் வேதாகம வகுப்புக்கு கட்டாயம் வந்துடணும். யாரும் விடுபடக் கூடாது. ஆமா சர்ச்சோட ஸ்பீக்கரை ரிப்பேர் பண்ணிட்டாங்களா?’’ என்று அவள் பேச்சில் ப்ரியாவுக்கும் ஒரு பதில் இருந்தது.
‘‘நீங்க கட்டாயம் வரணும்னு சொல்லவும் போட்டது போட்டபடி வந்தோம். ஜெயமணிக்கு பைபிள் வகுப்பு வேற இருக்குது. அதை சூசை மாணிக்கத்துகிட்ட ஒப்படைச்சிட்டு வந்துருக்கோம்’’ - என்றாள் தாட்சாயிணி. ‘‘சரிம்மா... நீங்க எப்ப கிளம்பணுமோ கிளம்புங்க. நான் முடிஞ்சு போயிட்டதா நினைச்சுட்டேன். அதான் உங்கள தொந்தரவு பண்ணிட்டேன். இனி எனக்கு எதுவுமில்லை. கண்டம் கடந்தா குண்டம்னு சொல்வாங்க.
குண்டம்னா 12 வருஷம்னு ஒரு கணக்கு உண்டு. நான் நிச்சயம் 12 வருஷம் நல்ல படியா இருப்பேன்..!’’ வள்ளுவரின் பதிலைத் தொடர்ந்து மருமகள் முகத்தில் ஒரு கோப உணர்வு உருவானது தெரிந்தது.‘‘இந்த ஜோசியத்தை மூட்டை கட்டுங்கன்னா கேக்கறீங்களா? நமக்கு எப்ப எதைத் தரணும்னு கர்த்தருக்கு தெரியும். ‘உன் முடிவு என்னால் முன்பே தீர்மானிக்கப்பட்டது. அதை நீ அறிய முற்படுவது தகாது’னு வேதத்துல சொல்லப்பட்டிருக்கு. அப்படி இருக்க எதுக்கு இந்த வேண்டாத வேலை?’’ என்றாள் ஜெயமணி என்கிற அவள்.
வள்ளுவர் அவர் கேள்வி முன் அசமந்தமாய் சிரித்தார்.வார்த்தைகளில் பதில் சொல்ல அவர் முனையவேயில்லை. ப்ரியா கவனித்தபடியே இருந்தாள். வள்ளுவர் எப்போதெல்லாம் இது போல சிரித்தார் என்று வேகமாய் ரீவைண்ட் செய்தும் பார்த்தாள்.‘இவர்களிடம் பேசுவதால் பயனில்லை’ என்கிற எண்ணம் ஏற்படும்போதெல்லாம் அதை சிரிப்பில் அவர் வெளிப்படுத்து கிறார் என்பது அவளுக்கும் புரிந்தது.
‘‘சரிம்மா... நீ கிளம்பு!’’ - என்று ப்ரியா பக்கம் திரும்பியவரை ப்ரியாவும் சிரித்தபடி பார்த்தாள்.‘‘நீ வழக்கமான பொண்ணு இல்லம்மா. சில விசேஷங்கள் உங்கிட்ட இருக்கு’’ என்றார் அவள் சிரிப்பை ரசித்தபடி..!‘‘விசேஷம்னு நீங்க எதைச் சொல்றீங்க அங்கிள்’’ - என்று ப்ரியாவும் கேட்க, அவள் தோள் மேல் வாஞ்சையாக கை போட்டவராக வாசற்புரம் நடந்தபடியே பேசினார் வள்ளுவர்.
‘‘அம்மாடி... நீ உன் அடிமனசை ரொம்பவே நம்பறே. அது எப்பவும் ஆத்மாவோட தொடர்புலயே இருக்கற ஒண்ணு. அதோட தொடர்புல நீ இருக்கறது ரொம்ப நல்ல
விஷயம்!’’‘‘அப்ப ஆத்மாங்கறது உண்மையா அங்கிள்!’’ - வெடுக்கென்று கேட்டாள் ப்ரியா.
‘‘அப்ப நீ சந்தேகப்படறியா?’’‘‘நிறையவே...’’
‘‘உண்மை பேசறே! அதுவரையில் சந்தோஷம்! சரி... சந்தேகப்பட்டுக்கிட்டே இரு. ஒருநாள் அதுக்கு விடை கிடைச்சு தெளிவு ஏற்பட்டுடும்...’’
‘‘தெளிவை உங்களால ஏற்படுத்த முடியாதா?’’‘‘முடியவே முடியாது... ஒரு விடை மௌனத்துல இருக்கும்போது, வார்த்தைகள்ங்கற சப்தத்தால எப்படி பதில் கூற முடியும்?’’‘‘மெளனம்ங்கறது ஒண்ணுமில்லாதது. அது எப்படி பதிலாகும்?’’‘‘இருக்கற ஒன்றாலதாம்மா இல்லாம போக முடியும். இல்லவே இல்லாததை நாம ஒருக்காலும் உணர மாட்டோம். உணராதது மனசுல எந்த வகையிலும் பதிவே ஆகாது!’’
‘‘உங்க பதில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு...’’‘‘கீதைல கிருஷ்ணன் சொல்வான். நான் இருக்கிறேன் - இல்லாமலும் இருக்கிறேன்னு... முடிஞ்சா அதைப் படி!’’‘‘பாக்கறேன்... உங்களை இன்னொண்ணு கேக்கலாமா?’’‘‘தாராளமா கேள்...’’
‘‘நீங்க கிறிஸ்தவரா?’’
‘‘இல்லம்மா... ஆனா என் மருமக கிறிஸ்தவ வழில நடக்கறவ...’’
‘‘அப்ப உங்க மகனுக்கு காதல் திருமணமா?’’
‘‘ஆமாம்...’’‘‘நீங்க எதிர்ப்பு தெரிவிக்கலையா?’’
‘‘இல்லம்மா...’’
‘‘ஆச்சரியமா இருக்கு. அப்ப உங்க வரைல ஜாதி, மதம்லாம்?’’‘‘அது ஒரு வழிமுறைம்மா!’’‘‘வழி மாற அப்ப சம்மதிக்கிறீங்களா?’’
‘‘ஒரு ஊருக்கு போக ஒரே ஒரு வழித்தடம்தான் இருக்குன்னும்போது, அந்த வழித்தடம் ரொம்ப நெருக்கடியானதா இருக்கும். நெருக்கடி வந்த உடனேயே மனுஷனுக்கு வலி ஏற்படும். வலிச்ச உடனேயே அதைத் தவிர்க்க வழி என்னனு பாக்க ஆரம்பிச்சிடுவான். இங்கதான் விதிகள் உருவாகுது. அந்த ஒரு வழித்தடத்தை ரெண்டா பிரிச்சி... ‘ஒரு பக்கம் போறவங்க போங்க... மறுபக்கம் வாரவங்க வாங்க’ம்பான்... இல்லியா?’’
‘‘எக்ஸாக்ட்லி... அப்படித்தானே நடந்துக்க முடியும். அப்பதானே நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும்?’’‘‘சரியா சொன்னே... இப்ப இந்த ஒருவழிப்பாதையோட பக்கத்துலயே இன்னொரு பாதையும் உருவானா?’’‘‘உருவானா என்ன உருவானா? உருவாகியே தீரும். அதானே வளர்ச்சி?’’‘‘ரொம்ப சரியா சொன்னே... பக்கத்துல ஒரு வழி உருவான மாதிரி, தண்ணில ஒரு வழி, ஆகாயத்துல ஒரு வழின்னும் உருவாகும்போது இன்னமும் நெருக்கடி குறையுமில்லியா?’’
‘‘நிச்சயமா?’’
‘‘அப்ப அதுல எல்லாமும் பயணிக்கிறதுதானே புத்திசாலித்தனம்..?’’‘‘ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு போறதுக்கு நீங்க சொல்ற இந்த விஷயம்லாம் சரி... ஜாதி, மதம்ங்கறது ரொம்ப சென்டிமென்டான, நம்பிக்கை சார்ந்த உணர்வுபூர்வமான விஷயங்களாச்சே அங்கிள்!’’
‘‘எதுவா இருந்தாலும் மனுஷன் தன் ஆறாவது அறிவால ‘வலி இல்லாத வாழ்க்கைக்கு என்ன வழி’ன்னுதான்மா யோசிப்பான். அதன்படிதான் நடந்துக்குவான். அதற்கேற்ப நியாயங்களும் அவனால உருவாகிடும்!’’
‘‘அப்படின்னா?’’‘‘மனித இனம் சிறு அளவுல இருக்கும்போதுதான் இனம், மொழி, ஜாதிக்கெல்லாம் பலம். இப்ப இந்த நாட்டுல மிகப்
பெரிய சக்தியே மனித சக்திதான். இந்த சக்தி அதிகமாகிட்டதால ஒரு பாதுகாப்பு அடிப்படைல உருவான இனம், மொழி, ஜாதியெல்லாம் தேவையற்றுப் போயிடும்மா. இது ரொம்ப இயற்கையான விஷயம்!’’‘‘இந்த தெளிவுதான் நீங்க உங்க மகனோட காதலை ஆதரிக்கக் காரணமா?’’
‘‘நீ தெளிவுன்னு சொல்ற விஷயத்தை நான் கொஞ்சம் மாத்தி விதின்னும் சொல்வேன்!’’
வெளியே கார் அருகே நின்று கொண்டு ‘இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை’ என்கிற மாதிரி கார் கதவைத் திறந்து, ‘புறப்படுங்கள்’ என்பது போல பார்த்தார் வள்ளுவர்.
புரிந்துகொண்டு வர்ஷன் காரை எடுத்தான். எப்போதும் இக்கட்டான வேளையில்தான் மறைவான இடங்களில் அரிப்பு ஏற்படும். அதேபோல் டிரைவிங் தொடங்கும்போதும் யாராவது செல்போனில் அழைப்பார்கள். அப்படி ஒரு அழைப்பு வர்ஷனுக்கும்... டிரைவ் செய்தபடி செல்போன் இயர் போனை காதில் பொருத்திக்கொண்டு ‘‘ஹலோ’’ என்றான்.
‘‘உனக்கு ஒரு மணி நேரம் அவகாசம் தர்றோம். அந்தப் பெட்டியை எடுத்துக்கிட்டு வந்து தர்றே... உனக்குப் பேசின ெதாகையும் வந்து சேரும். இல்லன்னா உன் தங்கை அனுஷா வீடு வந்து சேர மாட்டா!’’ என்றது அந்தக் குரல்.
‘‘தலைவர் ஏன் கோபமா இருக்காரு?’’‘‘எதிர்க்கட்சிக்காரங்க நம்ம கட்சியிலேருந்து எத்தனை பேர் அவங்க கட்சிக்கு தாவ தயாரா இருக்காங்கன்னு
தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி கேட்டு இருக்காங்களாம்!’’
‘உன் முடிவு என்னால் முன்பே தீர்மானிக்கப்பட்டது. அதை நீ அறிய முற்படுவது தகாது’னு வேதத்துல சொல்லப்பட்டிருக்கு.
‘‘டாக்டர்! இன்னைக்கு ஏன்
இவ்வளவு மாத்திரை எழுதித் தர்றீங்க?’’
‘‘இன்னைக்கு இங்கே வேலை செய்யிறவங்களுக்கு சம்பளம்
போடணும்... அதான்!’’
‘‘கம்ப்யூட்டர் ரிப்பேர் பண்ண வந்தவர்
முன்னாடி தலைவர்
நம்ம மானத்தை
வாங்கிட்டார்!’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘நம்ம கட்சியோட கூகுள் அக்கவுன்ட்ல எவ்வளவு பணம் இருக்குன்னு கேட்கிறாரு!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்