இந்தியா பாகிஸ்தான்



இந்தியா - பாகிஸ்தானாக மாறி விஜய் ஆன்டனியும், சுஷ்மாவும் போட்டுக்கொள்ளும் ரகளை, சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே ‘இந்தியா பாகிஸ்தான்’.போலி என்கவுன்டரை படம் பிடிக்கும் பத்திரிகையாளரை கையோடு பிடித்து ஆதாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் தோற்றுப்போகிறார் போலீஸ் அதிகாரி.

பத்திரிகையாளர் ஒரு கடையில் நுழைந்து அந்த ஆதார சி.டி.யை சினிமா பட சி.டி.யில் வைத்துவிட, அதுவும் ஹீரோவின் கையில் சிக்கிவிட, அதன் பின் ஆரம்பிக்கும் துரத்தல் படலம்தான் காமெடியில் போய் முடிகிறது. ஆரம்பக் காதல் ப்ளஸ் மோதலுக்குப் பிறகு விஜய் ஆன்டனி, சுஷ்மா காதல் கடைசி வரையில் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.

அனைத்து ஹீரோக்களும் இப்போது ஆசைப்படுவது போல் விஜய் ஆன்டனியும் காமெடியில் இறங்கி அடிக்க விரும்பியிருக்கிறார். ஆனால், கூட நடிக்கும் எல்லோருக்கும் அந்தப் பொறுப்பை விட்டுக்கொடுத்து விட்டு, ஒதுங்கி நின்று பெருந்தன்மையாக ரசிக்கிறார். இந்த மனசு எந்த ஹீரோவுக்காவது வருமா என்பது சந்தேகமே. விஜய் ஆன்டனி வைத்த நம்பிக்கையை சற்றும் பொய்க்காமல் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் அண்டு கோ ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கலகலப்பாக்கி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நொண்டியடித்தாலும், படம் பின்பாதியில் பறக்கிறது!

விஜய் ஆன்டனி சுஷ்மாவோடு போடும் சண்டையிலாகட்டும், ‘எனக்கு கேஸ் கிடைச்சா ரூமை காலி பண்ணிடணும்’ என சலம்புவதிலாகட்டும்… பலே! ஆனால், ஒரே மாதிரி ரீயாக்‌ஷனாக அதே வீட்டில் வைத்து கொடுக்கும்போதுதான் கொஞ்சம் இழுக்கிறது. ஆரம்ப அரை மணி நேரத்தின் நீளத்தைக் கூட உணர விடாமல் செய்ததே பின்பகுதி காமெடியின் வெற்றி!

பசுபதி இதற்கு முன்னால் வில்லன் நடிகராக இருந்தார் என்பது கிட்டத்தட்ட மறந்து போய்விட்டது. இப்போதெல்லாம் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதில் இந்தப் `பசு’, ‘புலி’யாகிவிட்டது. சட்... சட்... என மாறுகிற முகபாவங்களில் மனிதர் நெஞ்சை அள்ளி சிரிக்க வைக்கிறார்.

தமாஷாக சண்டை போட்டுக்கொள்ளும் படம், என்கவுன்டரில் திகில் திருப்பமாகத் தொடரும்போது, கதை வேகம் பிடிக்கிறது. அதுவும் கிராமத்து எதிரிகளான பசுபதியும், எம்.எஸ்.பாஸ்கரும் வந்தபிறகு இன்னும் கலகல. எதுவொன்றுக்கும் அம்மனின் அருள் கேட்கும் பாஸ்கரின் சேட்டைகள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவில்லை. அந்த வகையில் முதல் படத்திலேயே கலகல காமெடியை உயர்த்திப் பிடித்திருக்கும் அறிமுக இயக்குநர் என்.ஆனந், ரசிக்க வைக்கிறார்.

ஆறடி உயரத்தில் சுஷ்மா அழகு முகம்! சுடிதார், சேலை என எதில் வந்தாலும் அழகும் பாலீஷும் ததும்ப, ஆஹா! ஆனால், காமெடிக் கூட்டம் பாதிக்கும் மேல் படத்தைக் கைப்பற்றிக் கொண்டதில் சுஷ்மாவின் திறமைகள் வெளிப்படவில்லை. பழைய திரைக்கதை ஆங்காங்கே தரைதட்டி நிற்கும்போதெல்லாம் காமெடி ‘பன்ச்’களை அடித்து முடித்து வைக்கிற சாமர்த்தியம் படம் முழுவதும் இருக்கிறது. என்றாலும், விஜய் ஆன்டனி-சுஷ்மா சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பை நம்மில் உருவாக்க மெனக்கெடவே இல்லை.

தீனா தேவராஜனின் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் சோபிக்கிறார். அண்ணன் எடுத்த படத்திற்கு, தம்பி ஓம் ஒளிப்பதிவு… ஒத்துழைப்பு. குறிப்பாக பாலைவனக் காதல் பாடலில் கேமரா கோணங்கள் படு ஈர்ப்பு. முடிவு தெரிந்த ஹைலைட்ஸில் கூட, ‘இந்தியா பாகிஸ்தான்’ ஆட்டம் விறுவிறுப்புதானே!

- குங்குமம் விமர்சனக் குழு