மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

ஓர் அறையைத் துடைப்பது, கழுவுவது போன்ற மிகச் சாதாரண வேலையைச் செய்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலையை முழுமையாய்ச் செய்ய வேண்டும் என்கிற ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் செய்.

அப்படிச் செய்தால் அந்த வேலையின் மூலமாகவே மிக உயர்ந்த, ஆழமான ஆன்மிக உணர்வை அடைய முடியும்.மாறாக கல்வி, இலக்கியப்பணி, கலைப்படைப்பு போன்ற உயர்ந்த வேலைகள் என்று கருதப்படும் வேலைகளை பொருள் லாபம் கருதியோ, புகழுக்காகவோ, தற்பெருமைக்காகவோ செய்தால், அதன் மூலம் நீ துளிகூட ஆன்மிக முன்னேற்றம் அடைய முடியாது.

ஒருவனுக்கு வேலை செய்வதில் விருப்பமில்லை என்றால் அவன் வாழ்க்கையில்  எப்போதும் சந்தோஷத்தை அடைய முடியாது. வாழ்க்கையில் உண்மையாகவே ஒருவனுக்கு மகிழ்ச்சி வேண்டுமென்றால் அவன் வேலையை விரும்ப வேண்டும். அதை நேசித்துச் செய்ய வேண்டும். அதுவே ஆன்மிகத்தில் உயர்ந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றுவிடும்!-  அன்னை

யுவதி டோரதி ஹக்ஜசன் யார்?
அவளுக்கு அப்படி என்ன சோகம்?
அழகிய நதி.
அதில் நகரும் நிலா.

மெல்லிதாய் தூரத்தில் யாரோ வாசிக்கும் குழலோசை.ரம்மியமான அந்த முன்னிரவு அழகில் நதியில் மிதக்கும் படகு. அதில் ஒரு ஜோடி உலகை மறந்து காதலில்
கரைந்துகொண்டிருக்கிறது.

மெல்ல மிதந்து நகர்ந்த  அந்த படகு திடீரென ஒரு சுழலில் சிக்கி, ஆண் மட்டும் இறந்து போனால் எப்படி இருக்கும் அந்தப் பெண்ணுக்கு?

அப்படித்தான் இருந்தாள் டோரதி.டோரதி காதல் வயப்பட்டிருந்தாள். காதலன் அழகன். ‘‘இப்படி ஒரு ஜோடி இல்லை’’ என்று உறவுகள் கொண்டாடித் தீர்த்தன. திருமணத்திற்கு நாள் குறித்து முடித்தாயிற்று; காலன்  காதலனுக்கு நாள் குறித்ததை அவள் அறிந்திருக்கவில்லை.

கல்யாணக் கனவுகளுடன் சுற்றித் திரிந்த அந்த ஜோடியை காலம் பிரித்துப் போட்டது. திருமணத்திற்கு நெருக்கமான ஒரு நாளில் வந்தது அவன் இறந்த செய்தி. கேட்ட நிமிடத்தில் உறைந்து போனாள் டோரதி. முந்தின நொடி வரை இருந்த சந்தோஷம் எப்படித் தொலைந்து போனது? தவித்தாள். யார் கொள்ளை கொண்டு போனார்கள்? விடை தேடினாள். சோகம் அவளை தனிமைப்படுத்தியது. தனிமை யோசிக்கத் தூண்டியது. யோசனை உலகின் நிலையாமையை உணர்த்தியது.

உலகில் எதுவும் நிலை இல்லை என்றால் எது நிலையானது? கேள்வி நீண்டு, அது ‘கடவுள்’ என்கிற இடத்திற்கு அழைத்துச் செல்ல, கடவுளின் கர்ப்பக்கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் வாயிலான ஆன்மிகத்தில் அடி எடுத்து வைத்தாள் டோரதி.கண்ணை மூடிக் கொண்டு ஒரு சடங்கில்  ஈடுபட்டுக் கொண்டு, இதுதான் ஆன்மிகம்... இப்படித்தான் செல்ல வேண்டும் என்கிற குருட்டாம் போக்கான எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

எது செய்வதானாலும் அதை நான் ஏன் செய்ய வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பி, அதில் திருப்தியான பதில் கிடைத்தால் மாத்திரமே செய்தாள்... தொடர்ந்தாள்.இத்தகைய தெளிவான தீவிர ஆன்மிகத் தேடலே மிராவை அவளுக்கு நட்பாக்கி இருந்தது.மிரா-டோரதி இருவரும் ஆன்மிகத்தில் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணித்தார்கள். பரஸ்பரம் அனுபவங்களைப் பகிர்ந்து தீர்த்தார்கள்.

மிரா தியானத்தை தீவிரமாக்கினாள். புதிது புதிதாய் அனுபவங்கள் பூத்தன. அரவிந்தருக்கு சிறையில் விவேகானந்தர் தோன்றி ஆன்மிக அனுபவங்களை - அறிவுரைகளை வழங்கி வழிநடத்தியது போலவே மிராவுக்கும் பல துறவிகள், மகான்கள் தோன்றி ஆன்மிக ரகசியங்களை சொல்லிக் கொடுத்தார்கள். அது மிராவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. பாதை சரிதான் என்கிற நம்பிக்கையை விதைத்தது.

மிரா, ஆன்மிக உலகின் உச்ச இடத்தை அடைய வேண்டும் என்கிற தீவிர தேடலில் இருந்த போது அதை நோக்கி நகர்த்தும் ஒரு சம்பவம் நடந்தது.
ஒருநாள் மிரா தன் வீட்டில் படுத்திருந்தார். அப்போது ஒரு கரிய புகை உருவம் அவரை நோக்கி வருவதைக் கண்டார். அதன் வருகையில் ஒரு கொடூரம் தெரிந்தது. அது தீய சக்தி தன்னை தாக்க வருகிறது என்பதை உணர்ந்த மிரா, ஆன்மிக சக்திகளை மனம் குவித்து துணைக்கு அழைத்தார்.

மிரா தெய்வீக சக்தியை அழைத்த உடனே அந்தக் கரிய உருவம் பின்வாங்கியது. அவரை விட்டு தூர நகரத் தொடங்கியது.ஆனால், வெகு தூரத்தில் மக்களின் அழுகை ஓலம்.  என்ன என மிரா கவனித்தார். அந்த தீய சக்தி ஒரு மிகபெரிய தீ விபத்தை நிகழ்த்தி மக்களை துயரத்தில் ஆழ்த்தி இருந்ததை அறிந்து துடித்தார்.இறை சக்திகளின் துணை கொண்டு, பாதுகாப்பு கவசமாய் அருள் சக்தியை பெற்று மக்கள்  தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளை அறியாது பாதிக்கப்படுவதை எண்ணி வருந்தினார்.

இந்த உலகையும் மக்களையும் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றி உலக வளத்தை எல்லாம் அவர்களுக்குப் பெற்றுத் தந்து மக்கள் சந்தோஷமாக வாழ வழி செய்ய வேண்டும் என்று விரும்பினார் மிரா.அதற்காகவே தாம் படைக்கப்பட்டுள்ளதாய் நினைத்தார்.அதற்கு ஆன்மிகத்தில் இன்னும் தீவிரமாய் ஈடுபட வேண்டும்... அரவிந்தரின் திவ்யமான யோகத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தீவிரமானது.கணவரிடம் தன் விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டார். பால் ரிச்சர்டும் பாண்டிச்சேரி செல்ல சம்மதித்தார்.

தோழி டோரதியும் அரவிந்தரை தரிசிக்க விரும்புவதாகச் சொன்னாள்.1920, ஏப்ரல் 24. மிரா தன் கணவர் மற்றும் தோழியுடன் மீண்டும் பாண்டிச்சேரி மண்ணில் பாதம் பதித்தார்.தன் சொந்த இடத்திற்கு வந்துவிட்ட உணர்வு அவருள் நிரம்பி வழிந்தது. இனி இதுதான் என் இடம் என மனதுள் முடிவு செய்தும் கொண்டார்.

கணவர் சம்மதிப்பாரா? கேள்வி எழுந்தாலும் சின்னதாய் வருத்தம் பூத்தாலும் ஆன்மிக சாதனை மட்டுமே இனி லட்சியம் என முடிவெடுத்துக் கொண்டார்.மூவரும் அரவிந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார்கள். அரவிந்தரின் முகத்தில் ஆனந்தப் புன்னகை. ‘இனி இந்த இடம் எப்படி மாறப் போகிறது’ என மனதுள் பார்த்து பெருமிதப்பட்டார்.

டோரதிக்கு தத்தா என புதிய தீட்சைப் பெயர் சூட்டிய அரவிந்தர், அவளை கனிவாக தம் ஆன்மிக வட்டத்துக்குள் அரவணைத்துக் கொண்டார்.

தினமும் தொடர்ந்த சத்சங்கம் மிராவின் மனதில், அரவிந்தரே... அவர் மட்டுமே என் குரு. அவரால் மாத்திரமே மிகச் சரியாக தன்னை வழிநடத்த முடியும்  என்கிற நம்பிக்கையின் மகத்தான உச்ச இடத்திற்கு நகர்த்தியது. அரவிந்தரிடம் பிரகாசித்த அறிவுச் சூரியன் மிராவின் ஞானத் தாமரையை மலர்த்தியது.

ஆனால் பால் ரிச்சர்ட் அந்த அளவுக்கு அரவிந்தரிடம் ஈடுபாடு கொள்ளவில்லை. அரவிந்தர் ஒரு மகான். அவரைப் பிடிக்கும். ஆனால் அவரே சகலமும் என்கிற அளவுக்கு முடிவெடுக்க ரிச்சர்டால் முடியவில்லை.

‘‘ஆன்மிகப் பயிற்சியின் பொருட்டு நான் பாண்டிச்சேரி யிலேயே தங்கப் போகிறேன்’’ என மிரா சொன்னபோது அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடன் சேர்ந்து தானும் தங்க முடியாதே எனத் தவித்தார். இடைவெளி அதிகமானாலும் மிராவை ரிச்சர்ட் நேசித்தார். அதனாலேயே அவரது பக்தியில், நம்பிக்கையில், ஆன்மிகத் தேடலில் தனது ஆளுமையை, ஆதிக்கத்தை செலுத்த விரும்பவில்லை. தனியாகவே தாய் நாடு புறப்பட்டார்.கணவரின் பிரிவு மிராவுக்கு வருத்தத்தைத் தந்தாலும் ஆன்மிக வாழ்க்கைக்கான முதல் தியாகமாக இதை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பாண்டிச்சேரியில் கடும் மழை. புயல். பல வீடுகள் சூறைக்காற்றுக்கு இரையாகின. மிராவும் டோரதியும் தங்கி இருந்த வீடும் பாதிக்கப்பட்டால் என்னாவது! இந்த மண்ணையும் ஆன்மிகத்திற்காக தம்மையும் நம்பி வந்தவர்களைக் காக்க வேண்டியது தம் கடமை அல்லவா? என சிந்தித்தார்
அரவிந்தர்.

மிராவையும் டோரதியையும் தாம் இருக்கும் இடத்திலேயே தங்கிக்கொள்ளும்படி பணித்தார். குரு வார்த்தை. மீற மனமில்லை. மேலும் அரவிந்தரின் ஆன்மிக வழிகாட்டல் இன்னும் அதிகம் கிடைக்கும் என்கிற வாய்ப்பையும் கருத்தில் கொண்டு இருவரும் அரவிந்தர் தங்கி இருந்த வீட்டிலேயே தங்கத் தொடங்கினார்கள்.

இதுவரை ஆண்கள் மாத்திரமே தங்கியிருந்த அந்த வீட்டில் தற்போது இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் என்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; எதிர்க்கவும் முடியாது. அமைதியாக இருந்தார்கள். ஆனால் மிரா-டோரதி இருவரும் தங்களது குரு சேவையால், பழகும் தன்மையால் அனைவரது மனதையும் வென்றார்கள்.
ஒரு நாள் அதிகாலை.

அரவிந்தர் வீட்டின் தோட்டத்தில் தியானத்தில் இருந்தார். அவரது தியானக் கோலத்தை பக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தார் மிரா. தியானம் முடித்த அரவிந்தர் மெல்ல எழுந்து நடந்தார். மெல்லிய புன்னகையோடு அதை ரசித்துக் கொண்டிருந்த மிராவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

ஆம்... நீண்ட  கேசமும், தாடியுமாய் வெள்ளை ஆடை பூமியை வருட நடந்த அரவிந்தரைத் தொடர்ந்து கிருஷ்ணனும் நடந்து கொண்டிருந்தான். அவன் கைகளில் இருக்கும் புல்லாங்குழல் மதுரமாய் இசையைப் பொழிந்து கொண்டிருந்தது. மிரா தன்னை மறந்திருந்தார். அதைக் கண்டு அங்கிருந்த வேப்பமரக் குயில் கூவியது. கிருஷ்ணன் மிராவைப் பார்த்து புன்னகைத்தான். அந்த புன்னகை மிராவுக்குள் ஏதேதோ செய்தது? என்ன செய்தது?

அன்னையின் அற்புதம் “அன்னை தந்த வாழ்க்கை!’’

‘‘இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கு அன்னையைப் பற்றி எதுவும் தெரியாது. என் மகனுக்கு பிளஸ் டூ ரிசல்ட் வந்திருந்தது. சான்றிதழ்களை எல்லாம் ஜெராக்ஸ் எடுக்கப் போன இடத்தில் தொலைத்துவிட்டான். வாழ்க்கையே அதில்தான் இருக்கிறது. என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போனோம். இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. தன் நண்பன் வீட்டில் அரவிந்த அன்னைக்கு புஷ்பாஞ்சலி செய்கிறார்கள் என்று என் மகன் அழைத்தான். நானும் கலந்துகொண்டேன். மனம் முழுக்க ‘தொலைந்த சான்றிதழ்கள் கிடைக்க வேண்டுமே’ என்கிற கவலை சூழ்ந்திருந்தது.

பிரார்த்தனை முடிந்து வீட்டுக்கு வந்தபோது எங்கள் உறவுக்காரர்  வாசலில் நின்றார்.  அவர் கையில் என் மகன் தவறவிட்ட சான்றிதழ் அடங்கிய பை. என் கண்களில் என்னையும் அறியாமல் நீர். கேட்காமலேயே ஓடி வந்து அருளும் அற்புதத்தாய் அன்னை எனும் நன்றிக் கண்ணீர். அன்று முதல் எங்கள் வீட்டில் சகலமும் அன்னையின் அருளால்தான் நடக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். என் மகன் இன்று குடும்பத்துடன் வசதியாக அமெரிக்காவில் வாழ்கிறான்.  இது அன்னை தந்த வாழ்க்கை!’’ எனக் கண் கலங்குகிறார், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சுசீலா ஜம்புநாதன்.

விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்க... வரம் தரும் மலர்

தென்னம்பூ வளர்ச்சியின் அடையாளம். மங்களமானதும் கூட! ‘‘இது பல வகை நன்மைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்’’ என்கிறார் அன்னை. விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் விரும்பிய பிரிவு-இடம் கிடைக்க தவிக்கிறீர்களா? அரவிந்த அன்னைக்கு தென்னம்பூ சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, அந்த விருப்பம் நிறைவேறும்.

(பூ மலரும்)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்
ஓவியம்:மணியம் செல்வன்