பிசாசு



ரோட்டில் பார்த்த அழகுப் பெண், பிசாசாகி வீட்டிற்கு வருகிறது. அதை படிப்படியாக வெளியேற்றி விடமுடியுமா எனப் பரிதவிக்கிற பையனின் கதைதான் ‘பிசாசு’. ஒரு திகில் படத்தில் இந்தளவு கருணையின் சிறகசைப்பைக் கொண்டு வரச்செய்த மிஷ்கினுக்கு முதல் பூங்கொத்து.

இந்த சினிமாவைப் பார்த்த பிறகு ‘பிசாசு’ என்ற வார்த்தையே நேசத்துக்குரியதாக மாறப்போவது நிஜம். வெறுக்கக்கூடிய அம்சங்களையும் நல்ல விதமாகக் காட்டியதற்கு நல்வரவு!

நாகா இளம் வயலினிஸ்ட். இளையராஜாவிடம் வாசிக்கிறார். திடுமென ஒரு துரித கணத்தில் விபத்து ஏற்பட, விபத்தில் அடிபட்ட அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கிறார். நாகாவின் கைபிடித்துப் பயணிக்கும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. அதற்குப் பிறகு வரிசையாக நேர்கிற சூழலின் தொடர்ச்சியே படம்.அருமையான அறிமுகம் நாகா. அமானுஷ்யமாக ஒற்றைக்கண் தெரிகிற தலைமுடியோடு வருகிற தோற்றம் புதுசு.

பாதாள சப்வேயில் பார்வையற்றவர்களோடு வயலின் வாசிக்கும் பாவனைகளில் மிளிர்கிறார். இவ்வளவு முதல்தரமான முதல்பட நடிப்புக்கு மிஷ்கின் விடாப்பிடியாக சொல்லிக்கொடுத்திருப்பார் போல... வயது அனுமதித்திருந்தால் அவரே நடித்திருப்பார். படத்தில் அற்புதமான பல கணங்கள், உணர்வுகள், புரிதல்கள் நடக்கின்றன. எந்த நகாசும் ஆடம்பரமும் இல்லாத ஒரு கதை சொல்லல் உத்தியை, மனிதனுக்கும் பிசாசிற்குமான புரிதலைக் கொண்டு போவதில் டிஸ்டிங்ஷன் தட்டுகிறார் மிஷ்கின்.

டீக்கடைப் பேச்சு, சப்வேயின் அசாதாரணத் தனிமை, சின்னச் சின்னதாக க்ளோஸப்பில் காட்டும் விவரணைகள், பிசாசு அடித்துத் துவைத்த ஆளை, பாதிக்கப்பட்ட பெண்களே தேற்றிக் கூட்டி வரும் காட்சி என கதையை உறுத்தாத ஸ்கிரீன் ப்ளேயை ஓடவிட்டிருக்கிறார்கள். நிறைய இடங்களில் ஒற்றை வரி வசனமே தன்னுள் பிரபஞ்சத்தைக் கொண்டிருக்கிறது.

பிரயாகா இதில் யோசிக்காமல் நடித்ததற்கு பாராட்டு. ஹீரோயின் இவ்வளவு குறைந்த நேரத்திற்கு ஒரு சினிமாவில் இடம் பிடித்திருப்பாரா என ஆய்வாளர்களை அணுக வேண்டும். வழக்கம் போல் இதிலும் மாற்றுத்திறனாளிகளின் உலகத்தை அதன் போக்கிலேயே அநாயாசமாகக் கடந்திருக்கிறார் இயக்குநர்.

ஆச்சரிய என்ட்ரி ராதாரவி. வழக்கமான வில்லன் வேஷங்களில் பழக்கப்பட்டவர், பாந்தமான அப்பாவாக பரிதவிப்பின் உச்சத்திற்கு செல்கிறார். ‘‘நாம் போயிடுவோம் பவானி, நம்ம வீட்டுக்கு போயிடுவோம் பவானி’’ என, பிசாசாய் அலையும் மகளை அவர் முட்டிக்கால் போட்டுப் பின்தொடர்வது துயரத்தின் கடைசி எல்லை.

அரோல் கொரோலியின் இசையில் ஒற்றைப் பாடல் - ‘நதி போகும் கூழாங்கல்...’, மனம் கரைக்கிறது. நாற்று போல் கலையாமல், எங்கோ வெறித்துப் பாடும் பாடல் வரிகளுக்காக தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆஹா! படத்தின் ஆகச்சிறந்த வயலினின் இசைக்கீற்றுகளில் ஜொலிக்கிறார் அரோல். சிறப்பான எதிர்காலம், தொலைவில் அல்ல... பக்கத்திலேயே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரவிராயின் கேமரா ஒவ்வொரு காட்சிக்கும் ஓவிய நேர்த்தி கொடுத்திருக்கிறது. ஓட்டமும் நடையுமாக சென்னை வீதிகளில் விரையும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய கிஃப்ட்! ‘படம் மொத்தமும் இவ்வளவு சீரியஸாக இயங்கியிருக்க வேண்டுமா? நாகா கொஞ்சம் மலர்ந்து சிரிக்க ஒரு இடம் இல்லையா..?’ என ஒன்றிரண்டு சின்ன விஷயங்களைக் களைந்து பார்த்தால்...
மனம் கவர்ந்த ‘பிசாசு’!

-குங்குமம் விமர்சனக் குழு