வீடு veedu



நாம எதிர்பார்த்த வீடு இது இல்லை.

‘‘என்னண்ணா! ஊரிலிருக்கற வீட்டை விக்கிறதா சொல்லிட்டுப் போனே... விக்கலையாமே! அண்ணி சொன்னாங்க..?’’ - விசாரணையோடு அண்ணன் ராமு வீட்டுப் படியேறினாள் தங்கை சுஜி.‘‘ஆமா சுஜி... அம்மா, அப்பா வாழ்ந்த வீடு... அதுமட்டுமில்ல! நாம அஞ்சு பேரும் எப்படியெல்லாம் அங்க வாழ்ந்தோம்! அதையெல்லாம் என்னால மறக்க முடியல! அதோட நான் ரிடையர் ஆக இன்னும் ரெண்டு மாசம்தானே இருக்கு...

அதுக்கப்புறம் திரும்ப அந்த வீட்டிலயே நாம் வாழ்ந்த விதத்திலேயே வாழ ஆசையாய் இருக்கு சுஜி... பாக்கலாம்!’’ என்றார் பாலு.சுஜிக்கும் கண்கள் கலங்கியது. ‘‘அண்ணா! அப்படி நீ அங்கே போய் செட்டில் ஆனா, நாங்க எல்லாருமே கொஞ்ச நாள் அங்க வந்து தங்குவோம். ஒரு வாரமோ, ரெண்டு வாரமோ... சேர்ந்து சந்தோஷமா பழைய மாதிரியே வாழ்ந்துட்டு வருவோம்!’’

ராமு நெகிழ்ந்துபோய் தலையசைத்தார்.ராமு ரிட்டயர் ஆகி கொஞ்ச நாள் ஆகியிருந்தது. ஊருக்கே போய்விடும் முடிவோடு அவர் கிளம்பியபோது எல்லோரும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தார்கள்.

இரண்டு வாரம் கழித்து...சொந்த ஊரில் தங்கித் திரும்பும் குதூகலத்தோடு அவர் தம்பி, தங்கைகள் நால்வரும் கிளம்பினார்கள். ஊரில் போய் இறங்கியதும் ஆசையாய் சுஜி வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். முன்பிருந்த களை இல்லை. அம்மா அப்பா இல்லாதால் அப்படி இருக்கலாம் என நினைத்தாள். பக்கத்து வீட்டுப் பாட்டி எங்கே? எதிர் வீட்டில் அந்த பிள்ளைக்காரி எங்கே? யாரும் இல்லை. எல்லாம் மாறியிருந்தது. தெரிந்த மனிதர்களே ஊரில் அகப்படவில்லை. எல்லோரும் பிழைப்பு தேடி ஏதேதோ நாடுகளில்!

ஒரு வாரம் அங்கிருப்பதே பெரும் நிர்ப்பந்தமாய் இருந்தது. அங்கிருந்த சூழல் பழைய ஞாபகங்களைக் கொண்டு வந்தனவே தவிர, பழையபடி இருக்க முடியவில்லை. விவசாய நிலங்கள் இல்லாமல் பசுமையே கண்ணில் படவில்லை. குளம் வற்றி, குளிக்க முடியாமல் பாசி நாற்றமடித்தது.

ஏதோ இனம் புரியாத வெறுமை நெஞ்சை பிசைந்தது. ராமுவே கூட கலகலப்பாக இல்லை.கிளம்பும்போது அனைவரும் ஹாலில் கூடியிருக்கையில், ‘‘அண்ணா, வீட்டை வித்துடலாம் அண்ணா!’’ என்றாள் சுஜி.ராமு ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தார்.

‘‘நீங்களே உணர்ந்திருப்பீங்க அண்ணா... வீடுங்கறது வெறும் செங்கல்லும் மண்ணும் மட்டுமில்ல. அது ஒரு கூட்டுத் தொழிற்சாலை மாதிரி! அங்க வாழுற மனிதர்கள், சூழ்நிலை, அக்கம்பக்கம் எல்லாம் சேர்ந்துதான் நம்மை சந்தோஷமாக்குது.

அதெல்லாம் மாறின பிறகு நாம் வீட்டை மட்டும் நம்பி வந்திருக்கக் கூடாது. நாம எதிர்பார்த்த வீடு இது இல்லை. அந்த வீடும் நினைவும் நம்ம மனசுல இருக்கு. இந்தச் செங்கல்லையும் சுண்ணாம்பையும் இப்போ வித்துடலாம் அண்ணா!’’ - சுஜி சொல்லி முடித்தபோது எல்லோர் கண்களிலும் குளம் கட்டியிருந்தது.

பத்மா சபேசன்