அழகா இருந்தா கெட் அவுட்!



விநோத ரஸ மஞ்சரி

‘அழகான பெண்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது’ என புலம்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அழகாக இருப்பதற்காக ஒரு பெண் கிட்டத்தட்ட தன் வேலையை இழக்க நேரிட்ட விநோதம் இது! செர்பியா நாட்டின் தலைநகரம் பெல்கிரேட். கால்பந்து ரசிகர்களும் கிளப்களும் நிறைந்த வழக்கமான ஐரோப்பிய நகரம் இது. இங்கு ஒரு டி.வி. சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார் கடாரினா ஸ்ரெகோவிச்.

நடிகைகளுக்கு சற்றும் குறையாத கவர்ச்சியும் அழகுமான கடாரினா, இரண்டு அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றபோது, அதை தொகுத்து வழங்கச் சென்றிருந்தார். விளையாட்டின்போது மைதானத்தின் வெளியே காத்திருந்த மாற்று வீரர்களை பேட்டி எடுக்க அவர் மைக்கை நீட்ட, கடாரினாவின் அழகில் கிறங்கிப் போய் அவர்கள் பேசத் தெரியாமல் உளறினர். பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பு.

அதைவிட மோசம் வீரர்கள்... விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் பலரும் பந்தை கவனிக்க மறந்து கடாரினாவையே பார்த்தனர். ஒரு அணியின் கேப்டன் கடுப்பாகி, ‘‘கடாரினாவின் அழகு வீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறது. அவரை இங்கிருந்து வெளியே அனுப்புங்கள்’’ என நடுவரிடம் முறையிட்டார். நடுவர் ஆட்டத்தை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு வந்து கடாரினாவிடம் பேசி அவரை அங்கிருந்து வெளியேற்றியபிறகே ஆட்டம் தொடர்ந்தது. இதனால் அவருக்கு வேலையே போகும் நிலை! ‘‘அழகாக இருப்பது என் தவறா?’’ என சோகமாகக் கேட்கிறார் கடாரினா.

செர்பிய வீரர்களின் நிலையாவது பரவாயில்லை. இத்தாலியில் பிரபல மாடலாக இருப்பவர் கிளாடியா ரொமானி. 32 வயதில் இவருக்கு மாடலிங் துறை போரடிக்கிறதாம். கால்பந்தில் ஆர்வமாக இருக்கும் கிளாடியா, மாடலிங் துறைக்கு முழுக்கு போட்டுவிட்டு, கால்பந்து நடுவராக மாறும் முடிவில் இருக்கிறார். மைதானத்துக்கு வெளியே நின்ற பெண்ணாலேயே திணறும் வீரர்கள், மைதானத்தில் தங்களோடு ஒன்றரை மணி நேரம் ஒரு அழகுப் புயல் ஓடிவந்தால் என்ன செய்வார்களோ!

-ரெமோ