பார்சல் Parcel




என்ன பேசினாலும் தன் மகள் மனம் மாற வாய்ப்பில்லை

‘‘இன்னும் ஒரு மணி நேரத்துல இந்தப் பார்சலை காஞ்சிபுரம் வெற்றிவேலுகிட்ட சேர்த்துடணும் மணி. சீக்கிரமா கார்ல கிளம்பு’’ - தொழிலதிபர் அறிவழகன் தன் டிரைவரிடம் அந்தப் பார்சலைக் கொடுத்தார். உண்மை யில் அந்தப் பார்சல் போய்ச் சேர வேண்டிய பார்சல் அல்ல... மனிதர்களை போய்ச் சேர வைக்கும் டைம் பாம் பார்சல். டிரைவர் மணியைக் கொல்ல அவர் வைத்த பொறி!

மணி பார்சலோடு வேகமாக மாடிப்படி இறங்கினான். அவன் காரைக் கிளப்பிய சத்தம் கேட்டதும், அறிவழகன் மொபைலை எடுத்தார்... ‘‘வேலு, நீ சொன்னது மாதிரியே அந்த பார்சல்ல இருக்கிற பாம் இருபதாவது நிமிஷம் வெடிச்சிடுமா?’’

‘‘நீங்க டைமை கரெக்டா செட் பண்ணிருந்தா வெடிக்கும் சார்’’ - பதில் வந்தது.இவ்வளவு பெரிய தொழிலதிபர் தன் டிரைவரை ஏன் கொல்ல வேண்டும்? தன் மகளையே காதலித்தால் கொல்ல மாட்டாரா என்ன? மதிவதனி அவரின் ஒரே மகள்.

பல ஆண்டுகளாக தன் வீட்டிலேயே தவமாய்க் கிடக்கும் பணிவான மணியை அவளுக்குப் பிடித்துவிட்டது. விஷயம் அறிந்து அறிவழகன் துடித்துப் போனார். ரகசியமாக அவர்களைக் கண்காணித்தார். உண்மையான காதல். என்ன பேசினாலும் தன் மகள் மனம் மாற வாய்ப்பில்லை என்பது வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தது. அதனால்தான் இந்த முடிவு.

மணி மிக அவசரமாக காரை விரட்டிக்கொண்டிருந்தான். அருகில் பார்சல். வீட்டில் டைம் பார்த்தபடி அறிவழகன் காத்துக்கொண்டிருந்தார்.மணி தான் ஓட்டி வந்த காரை ஹைவே அருகில் ஒரு டீக்கடையில் நிறுத்தி, கீழிறங்கினான். டீ ஆர்டர் பண்ணிவிட்டு சிகரெட் பற்ற வைத்த படி டைம் பார்த்தான். அவன் வீட்டிலிருந்து கிளம்பி சரியாக 17 நிமிடங்கள் ஆகியிருந்தன. தன் ஏரியாக்கார நண்பன் வேலுவுக்கு போன் போட்டான். ‘‘மச்சான், நீ சொன்ன மாதிரியே அந்த பாம் இருபதாவது நிமிஷம் வெடிக்குமா?’’

‘‘ஆமாண்டா, அந்த ஆளு காரோட உன்னை சமாதி கட்ட பவர்ஃபுல்லா பாம் செய்யச் சொன்னான். நான் பில்டிங்கே பஸ்பமாகுற அளவுக்கு ஸ்ட்ராங்கா செஞ்சிருக்கேன். நீ மட்டும் நம்ம ப்ளான்படி அவர் கொடுத்த பார்சலை அவருக்கே தெரியாம வீட்டுலயே வச்சிட்டு, அதே மாதிரி நான் செட் பண்ணிக் கொடுத்த வேற பார்சலை எடுத்துக்கிட்டு வந்திருந்தீன்னா, இன்னும் மூணு நிமிஷத்துல அறிவழகன் காலி! அவர் செத்தப்புறம் மதிவதனிக்கு நீதான் எல்லாமே. அவ்வளவு சொத்தும் உன் கஸ்டடிக்கு வந்திடும். என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ மச்சி!’’ என்றான் அவன்.
மணி வெற்றிப் புன்னகை பூத்தான்.

ஏ.ஆர்.விஜயவாணன்