கவிதைக்காரர்கள் வீதி




➣கண்ணில் படுவோரையெல்லாம்
வரைந்துகொண்டேயிருக்கிறது
வெயில்

➣கீழேயும் இறங்காமல்
உள்ளேயும் ஏறாமல்
வழி மறைக்கும் படிக்கட்டுவாசியாக
காதலைச் சொல்லாத நட்பு

➣பலசரக்குக் கடைக்காரச் சிறுவனின்
அழுக்கேறிய பனியனில்
ஏதோ ஒரு சோப்பின் விளம்பரம்

➣யாருக்கும் தெரியாமல்
யாரோ எடுத்துச் செல்கிறார்
யாரோ தெரியாமல்
தவறவிட்ட ரூபாய் நோட்டை
➣சில நிமிடப் பழக்கத்திலேயே
ஒட்டிக் கொண்டது
கடற்கரை மணல்

➣எண்ணற்ற ராகங்கள்
வழி தெரியாது
அலைந்து கொண்டிருக்கின்றன
துளையிடப்படாத
மூங்கில் காட்டினுள்!

➣அத்தனை பறவைகளையும்
தூங்க வைக்க
வெகுநேரமாகும்
அந்த அரச மரத்திற்கு

வத்திராயிருப்பு
தெ.சு.கவுதமன்