பொறியாளன்



கட்டுமானத் தொழிலில் வெறும் ஆர்வத்தோடு மட்டும் தொழிலில் இறங்கி, இரண்டு கோடி ரூபாயை ஏமாந்து விடுகிறார்கள் ஹீரோ ஹரீஷ் கல்யாணும் அவர் நண்பரும். சாமர்த்தியமாக அதை மீட்க சகல வழிகளிலும் போராடும் ஹரீஷ், அதை சாதித்தாரா என்பதே ‘பொறியாள’னின் கதை.

வாழ்க்கையில் ஏற்றம் காண தன் நண்பனோடு சேர்ந்து தனியாக நிறுவனம் தொடங்க நினைக்கிறார் ஹரீஷ். எல்லாம் சுமுகமாக நடப்பதாக மகிழ்ந்து கொண்டிருக்க, வாங்கிய இடமே அவர்களுக்கு சொந்தமில்லை என்ற விஷயம் இடியாக இறங்க... அதை மீட்டெடுப்பதில் தொடங்குகிறது படம்.

மணிமாறனின் திரைக்கதையின் பலத்தால் நிமிர்ந்து நிற்கிறது படம். பணத்தை நண்பனிடம் வாங்கிக் கொடுக்க, நண்பன் தாதாவிடம் எடுத்துத் தர, திகைப்பூட்டும் சம்பவங்களுக்கு இடம் தருகிறது திரைக்கதை.

பத்திரிகை பக்கங்களில் படித்து கிறுகிறுக்கும் மோசடிப் பின்னணியை இதிலும் வைத்திருந்தாலும், அதில் முடிந்த அளவு திருப்பங்கள் தந்து, வலிமை சேர்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தாணுகுமார். வில்லன் அச்சுதகுமாரின் விறைப்பு முறைப்புக் காட்சிகளில் பார்க்கும்போது பதற்றம் தொற்றுவது நிஜம்.

ஹரீஷ் கல்யாண்... நம்பகமான வளர்ச்சி. ஏமாந்த கதை தெரிந்தபோதும், காதலித்து உருகும்போதும், மிரட்டும் தாதாவை சமாளிக்கிற பக்குவத்திலும்... நன்றாக முன்னேறியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்டால் இளைய வரிசையில் வர கண்டிப்பாக ஹரீஷுக்கு வாய்ப்பு இருக்கிறது.அறிமுகம்தான்.

ஆனாலும் நடை, உடை, கடைக்கண் பார்வை என ரக்ஷிதா (இப்போ பெயர் ஆனந்தியாமே!)விடம் வசீகரம். பெரிய கரிய விழிகளில் மொத்தக் கவர்ச்சியும் குடிகொண்டிருக்கிறது. வீட்டை ஏமாற்றி காதலனிடம் குறும்பு செய்யும்போதும், யாருமில்லாத வீட்டில் ரொமான்ஸுக்கு தயாராகும் இயல்பிலும், ஹரீஷ் பாடலில் நெக்குருகுவதுமாக பொண்ணுக்கு நடிப்பும் கச்சிதம்!

கண்களில் கள்ளத்தனம், உடல்மொழியில் அலட்சியம், வெறும் கண்களில் மிரட்டுவது என அநியாய வட்டி கறக்கும் ரோலில் அச்சுதகுமார் செம ஃபிட். வட்டியை வசூலிக்க எந்த முன்னேற்பாடும் இல்லாமல், விறுவிறுவென வீடு தேடி வந்து நாலைந்து வார்த்தைகளில் பயமுறுத்துவது படம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது.புரோக்கர் கேரக்டர் மோகன்ராம் நச் ஸ்கெட்ச். ஆளைப் பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்ற வார்த்தை அடிக்கடி ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. இரண்டு கோடி ரூபாய் வரைக்கும் ஏமாற்றிவிட்டு, சத்தமே இல்லாமல் ஆட்டோவில் ராத்திரிகளில் பயணிக்கும் விதம் நறுவிசு.

ஜோன்ஸ் இசையில் இரண்டு பாடல்கள் விறுவிறுப்பு. பின்னணியிலும் பரபரப்பாய் தொடர்கிறது இசை. வசனங்களில் படம் பார்க்கிறவர்களுக்கும் ஏராள எச்சரிக்கை. வேல்ராஜ் கேமராவால் பரபரப்பில், வேகத்தில், பதற்றத்தில் வேண்டிய அளவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்.இரண்டு கோடி ரூபாயை இரண்டு ரூபாய் மாதிரி கொடுத்துவிட்டு ஏமாற முடியுமா, வீடு வாங்கி விற்கும் கம்பெனியில் இருக்கிறவர்களே ஏமாற வாய்ப்பு குறைவுதானே என்றெல்லாம் குறைகள் தட்டுப்படாமல் இல்லை.

 மிரட்டப்பட்ட இளைஞர்களுக்கு உதவ போலீஸ் இறங்கி வேலை செய்யாமல் இருப்பதும் ஆச்சரியம். புரோக்கர் மோகன்ராம் கெட்டவர் என்பதை விட்டு, நல்லவராக இருப்பாரோ என்ற சந்தேகத்தையும் கொண்டு வந்திருக்க வேண்டாம். முன்பகுதி பரபரப்பு... பின்பகுதி கலகலப்பில் கவர்கிறான் ‘பொறியாளன்’.

- குங்குமம் விமர்சனக் குழு