பழங்காலப் புதுமைக் கவிஞர்
‘‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது...’’ - ‘ரத்தக் கண்ணீர்’‘‘எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா...’’ - ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ - கிராமபோன் தலைமுறை தொடங்கி, ஸ்மார்ட் போன் தலைமுறை வரை ரீச் ஆன பாடல்கள் இவை.
யார் எழுதியதென்று நினைக்கிறீர்கள்? பட்டுக்கோட்டை..? மருதகாசி..? கண்ணதாசன்..? ஹிட் பாடல் என்றால், திரையுலகின் அப்போதைய ஸ்டார் பாடலாசிரியர்தான் எழுதியிருப்பார் என நினைத்துக்கொள்வது நமக்குப் பழக்கம்தானே. ஆனால், தத்துவம் தாண்டவமாடும் இந்தப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. சுருக்கமாக ‘குசாகி’!
‘‘இது ‘குசாகி’ அய்யாவின் நூற்றாண்டு. அந்தக் காலத்திலேயே இப்படியொரு படைப்பாளியா என இன்றைய தலைமுறையே வியக்கும் ஆளுமை அவர். எனவேதான், அய்யா ‘குசாகி’யின் நினைவு விழாக்களை இந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறோம்!’’ என்கிறார் ப.வெங்கட்ராமன். விழா ஏற்பாடுகளை கவனித்து வரும் இவர், ‘குசாகி’ பற்றிய தகவல்களையும் நிறைய பகிர்கிறார்...
‘‘1923 வாக்கில், ஒன்பது வயதுச் சிறுவனாக நாடக உலகில் கால் வைத்த ‘குசாகி’, ஆரம்பக் கல்வி மட்டுமே முடித்தவர். சபாக்கள் பலவற்றிலும் பட்டை தீட்டப்பட்டவர். 1935ல் ‘குசாகி’யை ‘சந்திரகாந்தா’ படம் மூலம் பாடலாசிரியராக அன்றைய சூப்பர் ஸ்டார் பி.யு.சின்னப்பா அறிமுகப்படுத்தினார்.
உவமைக்கவிஞர் சுரதாவையும், நடிகர் ஏவி.எம்.ராஜனையும் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் ‘குசாகி’. இவ்வளவு ஏன்..? ‘குசாகி’யின் ‘கலைவாணன்’ திரைப்படத்தில் நடித்த பிறகுதான் என்.எஸ்.கிருஷ்ணன், ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணனாக மாறினார்.
‘அந்தமான் கைதி’ என்ற நாடகத்தை எழுதி புத்தகமாக வெளியிட்டார் ‘குசாகி’. அது பரவலாகப் பேசப்பட, ஔவை டி.கே.சண்முகம் சகோதரர்கள் அந்த நாடகத்தை மேடையேற்றினார்கள். மேடையில் சூப்பர் ஹிட் ஆனபிறகுதான் அது திரைப்படமானது. அப்போது மேடை நாடகங்களில் ‘ராம்சந்தராக’ வலம் வந்த எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம், ‘அந்தமான் கைதி.’
புதுக்கோட்டைக்காரரான ‘குசாகி’, நாற்பதுகளின் திரையுலகில் கவிஞர், பாடலாசிரியர், தமிழிசை விற்பன்னர், கதாசிரியர், வசனகர்த்தா, நாடக படைப்பாளர் என்று பல முகங்களோடு வலம் வந்தவர். பல மைல்கல் பாடல்களை எழுதினார்.
‘அஞ்சு ரூபா நோட்டை கொஞ்ச முன்னே மாத்திமிச்சமில்லை காசு மிச்சமில்லை’ என ‘அந்தமான் கைதி’யில் வரும் பாடல், அன்று மெகா ஹிட். ஐந்து ரூபாயை மட்டும் ஐந்நூறு ரூபாய் என்று மாற்றிவிட்டால், இது இன்றைக்கும் அப்படியே பொருந்தும் பாருங்கள்! அதே பாடலில், ‘பத்து அவுன்ஸ் எட்டு அவுன்ஸ் ஏழு அவுன்சாய் ஆச்சுதுபாதி கல்லு மண்ணு... இப்போ பதருமாப் போச்சுது’ என்று வரும்.
அன்றைய தேசிய கட்சி அரசு, ஆரம்பத்தில் நியாயவிலைக் கடை மூலம் ஆளுக்கு 10 அவுன்ஸ் ‘பாழ்’ அரிசி வழங்கி வந்தது. பிறகு அதுவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஆறு அவுன்ஸ் அரிசியானது. சமூக உணர்வோடு எழுதப்பட்ட இந்தப் பாடலில் அந்தக் கால சரித்திரமே இருப்பது, ஆச்சரியம்.‘குசாகி’யின் பாடல்களில் சிகரமே ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் பாடிய ‘குற்றம் புரிந்தவன்...’
பாடல்தான். எம்.ஆர்.ராதாவுக்கும் அடையாளம் தந்த இந்தப் பாடல், உண்மையில் அந்தப் படத்திற்காக எழுதப்படவில்லை. நாடகம் ஒன்றிற்கு ‘குசாகி’ எழுதிய இந்தப் பாடலைக் கேட்டு அசந்து போய் உடனடியாக விலைக்கு வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 1952ல் இந்தப் பாடலுக்கு சன்மானமாக ரூபாய் ஐயாயிரம் ‘குசாகி’க்கு வழங்கப்பட்டதாம்!
வெறும் சினிமா பிரபலமாகவே வாழ்ந்துவிட நினைக்காமல், ‘குசாகி’ தமிழ் இலக்கியத்திற்கு தனது பங்களிப்பாக, ‘தமிழ் நாடக வரலாறு’ எழுதினார். அரசியலில் பெரியார், கலைஞர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி ஆகியோரிடம் ‘குசாகி’க்கு நெருங்கிய தொடர்பிருந்தது. தமிழகத்துடன் திருத்தணி, நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசமும் செய்தவர் அவர்’’ என்கிறார் வெங்கட்ராமன் பெருமிதமாக.
வெறும் வார்த்தைகளாக நின்றுவிடாமல், ‘குசாகி’யின் படைப்புகளைத் தொகுத்து வீடியோவாக்கி, இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்த நூற்றாண்டு விழாக்குழு.
‘‘கடந்த ஆகஸ்ட் 19 அன்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடந்த நூற்றாண்டு விழாவில், அந்த ஒலி - ஒளி தொகுப்புக்கு இளைஞர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சாகித்திய அகாடமியும் எதிர்வரும் செப்டம்பர் 19ல் புதுக்கோட்டையில் பெரிய அளவில் ‘குசாகி’ நூற்றாண்டைக் கொண்டாட உள்ளது’’ என்ற தகவலோடு நமக்கு விடை தந்தார் வெங்கட்ராமன். பழமை என்றும் இனிமைதானே!
கிழவியைக் காதலியடா!நாகர்கோவிலில் ‘குசாகி’யின் நாடகம் ஒன்றைப் பார்க்க வந்திருந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திகைத்துப் போனாராம். காரணம், ‘கிழவியைக் காதலியடா’ என அதில் வந்த பாடல். ஒவ்வொரு முறையும் இந்த முதல் வரி பாடப்பட்டதும் நாடகம் பார்க்க வந்த கூட்டம், ‘என்னய்யா... கிழவியை காதலிக்கச் சொல்றான்....
யாரய்யா இப்படி எழுதினது...’ என்று சலசலக்குமாம். ஆனால், அடுத்த நொடியே, ‘கிழவியைக் காதலியடா... ஔவைக் கிழவியைக் காதலியடா...’ என முழுப் பாடலும் வர, கூட்டம் ஆர்ப்பரிக்கும். இந்தப் புதுமை முயற்சிக்காக ‘குசாகி’யைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினாராம் கவிமணி!
பிஸ்மி பரிணாமன்