மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
யாருமற்றவன்...
இது என்ன மாதிரியான நிலை.
இது தானாக உருவாவதா?
விரும்பி ஏற்றுக்கொள்வதா?

தானாக உருவாகி இருந்தால் அவன் அனாதை; விதி. விரும்பி ஏற்றுக்கொள்வதானால் அது உறவுக்கும் விருப்பத்திற்கும் இடையிலான போராட்டம். உறவுகள் எப்போதும் எதன் பொருட்டோ ஏதோ ஒர் இழையில் இறுக்கிக் கட்டிப் போடவே எத்தனிக்கிறது. அதன் அன்பு, தேவையின் நீட்சி. ‘நீ என் தாய், தகப்பன், என் மகன், என்னவன், இது உன் கடமை... இத்யாதி, இத்யாதி என மாய இழைகளின் இறுக்கம் மூச்சு முட்ட வைக்கும்.

உறவுக்கு இருக்கும் அளவுக்கு எப்போதும் விருப்பத்திற்கு உரிமை இல்லாமல் இருக்கலாம். அதே சமயம் விருப்பத்திற்கு இருக்கும் ஈர்ப்பு, வலிமை... உறவு தொட முடியாத உச்சம். அது பூவிதழ் மீது நிற்கும் பனித்துளி போல, இலகுவான சுகம். ஒரு அணுவுக்குள் இருக்கும் மூலக்கூறுகள் போல அடர்த்தியான பிணைப்பு. பனித்துளி குமரகுருதாசர்; முருகன் பூவிதழ். வலிக்காமல் கலந்துகொண்டிருந்தார்கள்.

காகத்தின் வாயிலிருக்கும் மீன் துண்டுகளுக்காக துரத்தும் பருந்துகள் போல உறவுகள் எதன் பொருட்டோ விரட்டிக்கொண்டே இருக்கும். அந்த மீனை காகம் போட்டுவிடும்போது, ‘இதனிடம் எதுவும் இல்லை’ என்கிற தருணத்தில் பருந்துகளின் துரத்தல் முடிவுக்கு வரும். காகம் எதுவுமற்று விடுதலையாய் பறக்கும்.

இந்த எதுவுமற்றதில் யாருமற்றவனும் அடங்கும்.
ஆனால், ‘யாருமற்றவன்’ என்கிற இடத்தின் வலி சொல்ல வார்த்தை இருக்கிறதா? சொன்னால் வார்த்தைக்கே வலிக்கும். எல்லாவற்றையும் உதறி விட்ட அவர், முருகனை மட்டும் சிக்கெனப் பிடித்துக்கொண்டார்.

‘‘சென்னை செல்’’ என்று முருகன் கட்டளையாய் சொன்னதைச் செயலாக்க முடிவெடுத்தார். ‘‘முருகா... நீ என்னோடதானே இருக்க! என்னை விட்டுட மாட்டியே... உன்னை நம்பித்தான் இதோ புறப்படுகிறேன்’’ என உறவை உறுதிப்படுத்த மானசீகமாய் கெஞ்சினார், குமரகுருதாசர்.தூரத்து கோயில் மணி ஒலித்து ‘நானிருக்கேன்’ என்று சொன்னது. ரயிலேறினார்.

மறுநாள் காலை. ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது. வெளியே வந்தார். ஒரு அன்பர் குமரகுருதாசரிடம் வந்து, ‘‘சுவாமி, நீங்கதானே பாம்பனில் இருந்து வருவது? பாம்பன் சுவாமிகள் நீங்கதானே?’’ என்று கேட்டார்.

அப்பாவு, அப்பாவு சுவாமியாகி.... குமரகுருதாசராகி... இப்போது பாம்பன் சுவாமியாகிவிட்டார். எந்த பாம்பன் மண்ணை இனி மிதிக்க மாட்டேன் என சபதமெடுத்துவிட்டு வந்தாரோ, அந்த ஊர் அழுது அடம் பிடித்து தன் பெயரை அவர் பெயரோடு நிரந்தரமாய் இணைத்துக்கொண்டது. ‘‘ஐயா... பாம்பன் சுவாமிகள்தானே’’ என அந்த அன்பர் கேட்டபோது, பாம்பன் மண் நிச்சயம் ஒரு முறை சிலிர்த்திருக்கும். ‘நீ உதறிவிட்டால் போதுமா?

உன்னை என்னால் உதற முடியுமா? கடைசி துளி மண்ணைக் கூட உதறி விட்டு நீ புறப்பட்டபோது நான் அனுபவித்தது உயிர்வலி. என் வேதனை வேலவன் அறிந்தான். உன் மீதான என் அன்பும் தவிப்பும் தவமும் வீண் போகவில்லை.

இதோ, இனி உன் பெயரோடு பயணிக்கப் போகிறேன். உன்னோடு இணைத்து என் பெயர் சொல்லும்போதெல்லாம் உன்னை என் நினைவுகள் நெகிழ்த்தும்’ - சுவாமிகளின் மனதில் சொந்த ஊர் பேசியது புரிந்தது. முறுவலித்தார். ‘எவ்வளவு தூரம் ஒன்றை விட்டு விலக பிரயத்தனப்படுகிறோமோ, அது அதைவிட வேகமாக வந்து ஒட்டிக்கொள்ளும் போலும்’ என்றெண்ணிச் சிரித்தார்.

‘‘ஆமாம் அப்பா’’ என்றார் குமரகுருதாசர். பாம்பன் மண் நன்றி சொன்னது.‘‘ஐயா! இன்று நீங்கள் வருவீர்கள் என்று உணர்த்தப்பட்டது. உங்களை அழைத்துச் சென்று குறிப்பிட்ட முகவரியில் சேர்க்கச் சொல்லி குமரக் கடவுள் கட்டளை இட்டுள்ளார்’’ என்ற அந்த அன்பர், சுவாமிகளை குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.வண்டி ஏழுகிணறு பகுதியில் உள்ள வைத்தியநாத முதலி தெருவில் 41ம் எண் வீட்டின் முன்னால் நின்றது.

அந்த வீட்டிலிருந்த முதிர்ந்த பெண்மணி - பங்காரு அம்மாள் - வெளியே வந்தார். அமைதியான முகம். அகவழிப் பயணத்தில் ஆர்வமுள்ளவர் என்பதைக் கண்கள் கூறின. சுவாமிகளை வணங்கி வரவேற்றவர், அவரை வீட்டின் மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். ஆசனம் தந்து அமரச் சொன்னார். பங்காரு அம்மாளின் எல்லா உறவுகளும் வந்து வணங்கினார்கள்.

தனது உறவினர்கள் அனைவரையும் பார்த்த பங்காரு அம்மாள், ‘‘நேற்று இவர் என் கனவில் வந்தார். ‘எனக்கு ஆகாரம் அளியுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டார். ஆகவே, இவருக்குத் தேவையானது அத்தனையையும் செய்ய வேண்டியது என் கடமை’’ எனக் கூறினார். பங்காரு அம்மாளே எல்லா பணிவிடைகளையும் செய்தார்.

அன்று இரவு. மொட்டை மாடியில் தனியே ஒற்றைத் துண்டை விரித்துப் படுத்திருந்தார் பாம்பன் சுவாமிகள். தென்னங்கீற்றுக்கு இடையில் ஒளிர்ந்த நிலா வெளிச்சம், அவர் மனதை உள்ளே நகர்த்திவிட்டது.முருகனின் நினைவு வலைக்குள் நகரத் தொடங்கினார். கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய்ப் பொங்கியது. யாருமற்றவனாய் வந்தவனுக்கு யாதுமாகி நிற்கும் முருகனின் அன்பு அவரை குலுங்கிக் குலுங்கி அழ வைத்தது. என்ன மாதிரியான உறவு நம்முடையது என்கிற கேள்வி எழுந்தபோதே மெல்லிய காற்று அவரை ஸ்பரிசித்தது.

உருவமற்ற ஒரு கரம் நெற்றி வருடியது. ஆதரவாய் கை கோர்த்துக்கொண்டது. மெல்ல காதில் பேசத் தொடங்கியது. ‘எப்பொழுது உறவுகளை எல்லாம் உதறிவிட்டு, நானே கதி என வந்துவிட்டாயோ, அப்போதே நீ வேறில்லை; நான் வேறில்லை. இதோ மெல்ல மெல்ல நீ, நானாய் மாறிக் கொண்டிருக்கிறாய். நான்தான் உன் உயிர் என்றான பிறகு... நான்தான் எல்லாம் உனக்கு என்று நகர்ந்து வந்த பிறகு... நமக்குள் பிரிவென்று எதுவுமில்லை. இது உனது இன்றைய நிலை என்றா நினைக்கிறாய்?

ஆசை ஆசையாய் கோடி கோடி யுகமாய் என்னை நோக்கி தவமாய் தவமிருந்து நகர்ந்து வந்து கொண்டிருக்கும் நீ யாரென்று எனக்குத் தெரியும். ஓசையே இல்லாமல் என்னை நோக்கி வரும் உனக்குச் சேவை செய்வதை விட எனக்கு வேறென்ன வேலை? இந்த தெய்வீக பந்தம் முழுமையாகும் வேளை வரும். அந்த முக்தி நிலைக்கு முன்பாக உனக்கென சில வேலைகள் இருக்கின்றன. அதை மட்டும் கவனமாய்ச் செய். இதோ இந்தக் காற்று போல எப்போதும் உன்னோடு இருப்பேன்’ என்று நம்பிக்கை தந்தது அந்தக் குரல்.

குகனின் மதுர வார்த்தையில் தன்னை மறந்த பாம்பன் சுவாமிகள், தேம்பித் தேம்பி அழுதார். முருகன் அணைத்துக்கொண்டான். அழுகை புன்னகையானது. அப்படியே தூங்கிப் போனார்.
பொழுது புலர்ந்தது. பங்காரு அம்மாள் பாம்பன் சுவாமிகளுக்கு உணவு பரிமாறினார். ‘‘சுவாமி நேற்று பார்த்ததை விட இன்று உங்கள் முகம் கூடுதல் பிரகாசமாய் இருக்கிறது. உங்களைக் காணும்போதே மனசு மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறது. எனக்கு உபதேசமும் தீட்சையும் தந்து அருள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

பாம்பன் சுவாமிகளும் ஒரு நல்ல நாளில் நியமப்படி மந்திர உபதேசம் அருளினார். ‘குமரானந்தம்மாள்’ என தீட்சா நாமம் சூட்டினார். அந்த வீட்டில் இருந்த அத்தனை பேரும் குமரக் கடவுளின் பாதத்தைப் பற்றிக்கொண்டார்கள்.நல்ல குருவால் கிடைத்த மந்திரம் வீரியம் மிக்கது. குமரானந்தம்மாளுக்கு மந்திரம் சித்தி ஆனது. முருகனின் திருமுக தரிசனம் பெற்றார். இதையடுத்து, பாம்பன் சுவாமிகளிடம் வேண்டி காவியுடை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் சுவாமிகளுக்கு அடிக்கடி ராமேஸ்வரம் கோயிலின் நினைவு வந்து போனது. உடனே ‘கார் கொள்வானும்’ எனத் தொடங்கும் பதிகம் பாடி ராமேஸ்வரம் குமரப்
பெருமானுக்கு அர்ப்பணித்தார். திருவலங்கல் திரட்டில் முதலாம் கண்டத்தில் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது மனதில் ஆடலரசன் அருளாட்சி செய்யும் தில்லை தலம் தோன்றியது. ‘சிதம்பரம் செல்’ என குறிப்பால் உணர்த்தப்பட்டது. தில்லைக்கு எதற்கு அழைக்கிறான் திருக்குமரன்?

பாம்பன் சுவாமிகள் தரிசனம்-திருச்சி

திருச்சியில் பாம்பன் சுவாமிகள் அருள் நெறிச் சபை ஆரம்பித்தவுடன், ஸ்ரீசாரதாம்பாள் ஆலய வளாகத்தில் பாம்பன் சுவாமிகளுக்கு தனி சந்நதி அமைத்து வழிபட ஆரம்பித்தார்கள். இன்று அப்பகுதி மக்களின் குறை தீர்க்கும் கோயிலாக பாம்பன் சுவாமிகள் ஆலயம் திகழ்கிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.  ஆலய முகவரி: ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில், 13, சாஸ்திரி ரோடு, திருச்சி - 620 017. தொடர்புக்கு: 94433 99666 / 94434 21968.

பைலட் ஆக்கிய பாம்பன் அருள்!

‘‘என் அம்மா பல் மருத்துவர். சின்ன வயசுல இருந்தே பாம்பன் சுவாமிகளோட பக்தை. அதனால இயல்பாவே நானும் பாம்பன் சுவாமி பக்தனானேன். அப்பா, பிரான்ஸ் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பைலட் ஆகணும்ங்கிறது என் சின்ன வயசு ஆசை. பாம்பன் சுவாமிகளோட அருளால பிரெஞ்சு ராணுவத்துல கோ-பைலட் வேலைக்கு தேர்வானேன். ஆனா, பயிற்சிக் காலத்துல கடுமையான கால் வலி வந்து சோதிச்சுது. மூணு மாசம் ஸ்பெஷல் லீவ் கொடுத்து அனுப்பினாங்க.

வலி சரியாகாட்டி தகுதி இல்லைன்னு வேலைக்கு எடுக்க மாட்டாங்க. தீவிர சிகிச்சை எடுத்துக்கிட்டேன். மூணு மாச லீவ் முடிஞ்சு திரும்ப ராணுவ முகாமுக்கு வந்து சேர்ந்த காலை வரை வலி இருந்தது. ‘உனக்காக நான் சண்முக கவசம் படிக்கிறேன். கவலைப்படாதே’ன்னு அம்மா சொல்லி அனுப்பினாங்க. நானும் சுவாமி மேல பாரத்தைப் போட்டுட்டு பயிற்சியில கலந்துக்கிட்டேன். மூணு மாசமா பாடா படுத்தின வலி மாயமா மறைஞ்சிடுச்சு. எல்லாம் அவர் அருள்!’’ என்று நெகிழும் திருக்குமரன், பிரான்ஸ் ராணுவத்தில் இப்போதும் பயிற்சியில் இருக்கிறார்.

துயரங்களைத் துரத்தும் மந்திரம்!

தேன்பா யிழுதுகண்டு தித்திக்கு மக்காரம்
ஆன்பா லெலாமெள்ளு மானந்தத் தேன்பாகுண்
டும்பரின் மீயிருப்பா ரொண்கந்த கோட்டமமர்
தம்பிரா னின்னன்பர் தாம்
- பாம்பன் சுவாமிகள் அருளிய, ‘கந்தக் கோட்ட மும்
மணிக்கோவை’ என்ற இந்தப் பதிகத்தை தினமும் 12 முறை பாட,
துயரங்கள் மறைந்து இனிய வாழ்வு அமையும்.

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்