ஜஸ்ட் அறிவிப்பாகத்தான் வெளியாகியிருக்கிறது ஐபோன் 6. அதற்குள் திருவிழாவே எடுக்கிறார்கள் இளைஞர்கள். ‘செப்டம்பர் 19 முதல் உலகமெங்கும்’ என ஆப்பிள் ரிலீஸ் தேதி சொல்லிவிட்டது.
இந்தியாவுக்கென தனி - தாமத ரிலீஸ், அக்டோபர் 17. அதற்கு முன்பே, இந்த ஸ்மார்ட் போனை அடையத் துடிப்பவர்கள், கள்ள மார்க்கெட்டில் ஒரு போனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தரத் தயார்! ‘இப்படியொரு டிமாண்ட், இந்தியாவுக்கே புதுசு’ என்கிறார்கள் வியாபாரிகள். அப்படி என்ன இருக்கு ஆப்பிளின் இந்தப் புது மாப்பிள்ளையிடம்?
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் என இந்த முறை ஆப்பிள் தந்திருப்பது டபுள் ஆக்ஷன். மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், எப்போதுமே சில சர்ப்ரைஸ் விஷயங்களை அரங்கத்தில் அறிமுகப்படுத்தும்போது, ‘மேலும் இன்னொன்று...’ (And one more thing) எனச் சொல்லி ஒரு கேப் விடுவார். அதே மாதிரி இந்த முறை கேப் விட்டு சொல்லப்பட்ட சர்ப்ரைஸ் டிரீட், ஐவாட்ச். இதயத்துடிப்பைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச், நேரம் காட்டக் கூடியது மட்டுமல்ல...
ஆப்பிள் ஹெல்த் வசதிகளோடு இணைந்து நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து நேரத்தை நல்ல நேரம் ஆக்கக் கூடியதும் கூட! கிட்டத்தட்ட ஆப்பிளின் அடுத்த அத்தியாயம் என ஐவாட்ச் புகழப்பட்டாலும், அது மார்க்கெட்டுக்கு வரப்போவது அடுத்த வருடத்தின் துவக்கத்தில்தான். ஸோ, இப்போதைக்கு டாக் ஆஃப் த டவுன், ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ்தான்.
சைஸ் நைஸ்!ஒரே கையால் இயக்க வேண்டும் என்பதற்காக ஆப்பிள் ரொம்பக் காலமாய் தனது ஸ்கிரீன் அளவை 3.5 அங்குலத்திலேயே வைத்திருந்தது. விடலைப் பையனெல்லாம் பாக்கெட்டில் அடங்காத சாம்சங் போனோடு சீன் போடும்போது, ஆப்பிள் ஓனர்கள் உள்ளுக்குள் புகைந்தது ஒரு காலம். இப்போது ஐபோன் 6, 4.7 அங்குலத்தில் ஜொலிக்கிறது. ஐபோன் 6 ப்ளஸ், 5.5 அங்குலத்தில் பளிச்சிடுகிறது.
வாவ் வடிவமைப்புஇந்த முறையும் ஹாலிவுட் நடிகை போல செம ஸ்லிம்மாகத்தான் தன் படைப்புகளைத் தந்திருக்கிறது ஆப்பிள். எப்போதும் கட்டம் போட்ட மாதிரி இருக்கும் விளிம்புகளில் மட்டும் கொஞ்சம் வளைவுகள் தரப்பட்டுள்ளன. ஆனால், ஸ்கிரீன் தவிர மேலேயும் கீழேயும் விரியும் பகுதியும் ஹோம் பட்டனும் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்காததால் சில இளசுகளுக்கு மட்டும் செல்லக் கோபம்!
செம செயல்திறன்ஆண்ட்ராய்டு போன்களைப் போல ஆப்பிள் தனது உள்கட்டமைப்பை வெளிப்படையாய்ச் சொல்லி விளம்பரப்படுத்துவதில்லை. ஆக, ப்ராசஸர் வேகம், ராம் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை.
ஆனால் ஐபோன் 6க்காகவே பிரத்யேகமாகக் கட்டமைக்கப்பட்ட ‘ஏ8 சிப்’ ப்ராசஸர், மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகத்தைத் தரும் என சத்தியம் செய்திருக்கிறது ஆப்பிள். இருப்பினும் என்ன பயன்? ஆண்ட்ராய்டில், ‘ஆக்டோகோர் எல்லாம் வந்துவிட்ட இந்தக் காலத்தில் ஐபோன் 6க்கு வெறும் டியூவல் கோர் ப்ராசஸர்தானாம்’ என்ற அக்கப்போருக்குக் குறைவில்லை.
பேட்டரி பெருசு
மனித மந்தையில் ஒருவர் மட்டும் மசமசவென எந்நேரமும் சார்ஜர் தேடிக் கொண்டிருந்தால் அவர் ஆப்பிள் யூஸர் என்பார்கள். பேட்டரி பேக்கப்பில் ஆப்பிளுக்கு அப்படியொரு நல்ல பெயர். இப்போது ஐபோன் 6 கொஞ்சம் அகன்று விரிந்திருப்பதால் ஆஜானுபாகுவாய் ஒரு பேட்டரியை இணைத்து, 24 மணி நேரம் நிற்கும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆப்பிள் ஆர்வலர்களுக்கு அந்த நைட்டெல்லாம் பார்ட்டியாம்!
ஆப்பிள் பேஇவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் புரட்சிகரமான புது விஷயம் இந்த ஐபோன் அப்டேட்டில் உண்டு. அதுதான் என்.எஃப்.சி சிப். அதாவது, நமது கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு, தேவையான இடங்களில் பணத்தை தாமாகவே செலுத்திவிடும் வசதி.
கடந்த ஆண்ட்ராய்டு கிட்கேட் பதிப்பில் இந்த வசதி செய்யப்பட்டிருந்தது. நெக்சஸ், சியோமி உள்ளிட்ட சில ஆண்ட்ராய்டு போன்கள் என்.எஃப்.சி வசதியோடு வந்துவிட்டன. அந்த ஹைவேயில் ஆப்பிளும் இப்போது இணைந்திருக்கிறது. ‘‘கடைகளிலும் பார்க்கிங்கிலும் நாம் பணம் செலுத்தும் முறையே முற்றிலும் மாறப் போகிறது. அதற்கு, ‘ஆப்பிள் பே’ அறிமுகமே அத்தாட்சி’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இந்திய விலை (உத்தேசமானது) ஐபோன் 6 ஐபோன் 6 ப்ளஸ்
16 ஜிபி ரூ. 50,000 ரூ. 56,000
64 ஜிபி ரூ. 56,000 ரூ. 62,000
128 ஜிபி ரூ. 62,000 ரூ. 70,000
-நவநீதன்