குட்டிச் சுவர் சிந்தனைகள்



யாரு சாமி நீங்கள்லாம்? எங்க இருந்து வர்றீங்க? ஒரு வருஷம், ரெண்டு வருஷம் உழைப்ப கொடுத்து படமெடுத்து வெளிய விட்டா, பொறுப்பில்லாம விமர்சனம் செஞ்சு, கடுப்பு ஏற்படுற மாதிரி கலாய்ப்பு தர்றீங்களே, யாருய்யா நீங்க? குடிகாரன நம்பி தேர் வடத்த விட்டுடலாம்; கயிற நம்பி கேணிக்குள்ள குடத்த விட்டுடலாம்; ஆனா, உங்கள நம்பி நிம்மதியா ஒரு படத்த விட முடில. விமர்சனம்ங்கிற பேருல ‘பில்லா’, ‘ஜில்லா’, ஹாலிவுட் ‘காட்ஜில்லா’ வரை குப்புறப் போட்டு சலிப்பு தட்டாம கலாய்க்கிறீங்க... யாரு சாமி நீங்கள்லாம்?

அப்போ ஜாக்கெட் போடாத பாட்டிகளின் பேத்திகள், இப்போ ஸ்லீவ்லெஸ்ல அலையுற மாதிரி... அப்போ மந்தையில மொக்க போட்டுக்கிட்டு இருந்த தாத்தாக்களின் பேரன்கள், இப்போ ட்விட்டர், ஃபேஸ்புக்ல கத்தி போட்டுக்கிட்டு இருக்கீங்க.

பக்கம் பக்கமா கலாய்க்க ஙிறீஷீரீக்கு, பத்தி பத்தியா கலாய்க்க ஃபேஸ்புக்கு, பத்து வார்த்தைல கலாய்க்க ட்விட்டருன்னு பிரிச்சு வச்சுக்கிட்டு, கேப்டனோட அறிக்கை, சிம்ரனோட ரவிக்கை, பன்னீர் அண்ணே குனியறது, பவர்ஸ்டார் உளறுறது, கோபிநாத் கோட்டு, த்ரிஷா டேட்டூ, சிம்பு பிக்கப்பு, சோலார் ஸ்டார் மேக்கப்பு, காங்கிரஸ் கசகசா, கம்யூனிஸ்ட் கசமுசான்னு fulltimeñமா கலாய்ச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கீங்களே...

அப்புறம் எதுக்குய்யா பார்ட் டைமா சினிமாவை கலாய்க்கறீங்க? நல்லா யோசிச்சு பாருங்கப்பா... நீங்க கலாய்ச்சு சந்தோஷமா இருக்க சோறு போட்டு சாம்பார் ஊத்துறதே சினிமாதானே? ‘வட போச் சே’ல ஆரம்பிச்சு ‘வரும், ஆனா வராது’ வரை டயலாக்க நாங்கதானே டெய்லி டெலிவரி பண்றோம். அப்புறம் அந்த சினிமாவையே கலாய்க்கலாமா ராஜா? கைய எடுத்து மீசையில வைக்கலாம்... ஆனா, கால எடுத்து தோசையில வைக்கலாமாய்யா?

பல மாசம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு, ஃபாரீன் போயி பாட்டுப் போட்டு, பல கோடி பணத்தப் போட்டு எடுத்த படம்டா கண்ணா. படம் முடிஞ்சு பைக் ஸ்டாண்ட் வர்றதுக்குள்ள படத்தோட விமர்சனத்த ஃபேஸ்புக்ல போட்டுடுறீங்க, எப்படிப்பா? மேரேஜ் பண்ணக்கூட மூணு மணி நேரம் வேணும்டா, ஆனா மூணே நிமிஷத்துல மொத்த படத்தையும் டேமேஜ் பண்ணிடுறீங்களே.

‘கேமராவ அங்க வச்சிருக்கக் கூடாது... இங்க வச்சிருக்கணும்!’, ‘இங்க வச்சிருக்கக் கூடாது... அங்க வச்சிருக்கணும்’னு அடகுக் கடைய தவிர எல்லா இடத்துலயும் வைக்கச் சொல்றீங்களேய்யா! ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட போட்டோ ஸ்டூடியோ போகாதவங்கல்லாம் சேர்ந்து, ஒரு ஸ்டூடியோவையே புரட்டி சினிமா எடுக்குற டைரக்டருக்கு பாடம் எடுக்கறீங்களே... முடியலப்பா!  3 கோடி ரூபா கொடுத்து ஹீரோயின புக் பண்ணினா, ‘தர்பூசணிக்கு தாவணி போட்ட மாதிரி இருக்கு’,

‘சொரக்காவுக்கு சுடிதார் போட்ட மாதிரி இருக்கு’, ‘சிலிண்டருக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு’ன்னு விமர்சிக்கிறீங்க. நமீதாவுக்கு ஷேப்பு சரியில்லன்னாலோ, நயன்தாராவுக்கு மூக்கு சரியில்லன்னாலோ, ஐயங்கார் பேக்கரில கடன் சொல்லி கேக்கு திங்குற நமக்கென்ன ராஜா? கண்ணு அழகா இருந்தா ஸ்ரீவித்யா, பொண்ணு அழகா இருந்தா ஸ்ரீதிவ்யான்னு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தானேப்பா.

கொட்டாவி விடுற மாதிரி சீன வச்சாக்கூட அது கொரிய படத்துல இருந்து சுட்டதுன்னு எழுதுறீங்களே, அது என்னய்யா நியாயம்? ஏன், கொரியாக்காரங்கதான் கொட்டாவியும் குறட்டையும் விடுவாங்களா?

கோயம்புத்தூர்காரங்க விட மாட்டாங்களா? கிஸ்ஸடிக்கிற ஸீன எடுத்தாலும் பிஸ்ஸடிக்கிற ஸீன எடுத்தாலும் ஹாலிவுட் காப்பிங்கிறீங்க... எதைத்தான்யா எடுக்கிறது?   Guy ritchie, மொளகா பஜ்ஜி, குவாண்டின் டராண்டினோ, ரோமன் போலான்ஸ்கி, ஸ்காட்ச் விஸ்கின்னு பல டைரக்டரோட பேரே நீங்க சொல்லித்தான்யா தெரியும். இந்த லட்சணத்துல கதைய சுட்டோம், வடைய சுட்டோம்னு ஏன்யா படுத்தறீங்க?

‘2016ல பாமக ஆட்சி, ஒபாமா வீட்டுல கூட இதான் பேச்சு’ங்கிற கதையா, இதுல வீடியோ விமர்சனம் வேற. உங்க இம்சை தாங்க முடியாமதான்யா, சுகன்யா வயிற விளையாட்டு ஸ்டேடியமாக்கி, இருட்டுல கண்ண சிவப்பு கலர் ரேடியமாக்கி, தீவிரவாதி டயலாக்க கூட தமிழ் மீடியமாக்கி நடிச்ச கேப்டன் இப்பல்லாம் நடிக்கிறதே இல்ல!

நீங்க படத்தை விமர்சனம் பண்றதுதான் தாங்க முடியலைன்னா, படமெடுக்கிறவங்கள விமர்சனம் பண்றதைப் பார்த்தா தூங்க முடியல. சினிமாக்காரங்க விடுற அறிக்கையையும் தர்ற பேட்டியையும் கூட கலாய்க்கிறீங்களேப்பா.

அடுத்த படத்துக்காக அஜித் அஞ்சு கிலோ எடை குறைத்தாருன்னு செய்தி வந்தா, ‘ஏன், கோட்ட கழட்டி வச்சுட்டாரா?’ன்னு டீஸ் பண்றீங்க. ‘கத்தி’ கதையை கோர்ட்டுல சமர்ப்பிக்க முடியாது’ன்னு முருகதாஸ் சொன்னா, ‘சரி, பரவாயில்ல... கத்தாம கதைய சமர்ப்பிங்க’ன்னு ஃப்யூஸ புடுங்குறீங்க.

30 ரூபா கொடுத்து 3 மணி நேர படத்த பார்த்துட்டு, 300 பக்கத்துக்கு தப்ப தேடித் தேடி எழுதறீங்களே... குடத்துல ஓட்டை இருந்தாக்கூட ஈயம் பூசலாம்; படத்துல ஓட்டை இருந்தா இப்ப என்ன பூச முடியும்? உங்க விமர்சனத்தால வசூலு குறையப் போறதில்ல... நீங்க விமர்சனம் எழுதி உங்க வயிறும் நிறையப் போறதில்ல.

ஆனா, விமர்சனம் எழுதறேன்னு படத்தோட ஒட்டுமொத்த ஸ்கிரிப்ட்டையும் துகிலுரித்து தெருவுல விடுறீங்களே... உங்களுக்கெல்லாம் பெருச்சாளிய எடுத்து பாக்கெட்டுல விடணும்யா. சில சமயம் எங்க படத்தோட கதையென்னனு நீங்க நண்டு புடிச்சத வச்சுத்தான்யா கண்டே புடிக்கிறோம்.

‘ஓகே ஓகே’ படத்துல ஹாரிஸ் ஜெயராஜ் மியூஸிக்குக்கு பொண்ணுங்க கூட தம்மடிக்க எந்திரிச்சுப் போகுது’ன்னு எழுதறீங்க. குட்நைட் மட்டும் கொண்டு போயிட்டா, ‘கடல்’ படத்துல நிம்மதியா தூங்கிட்டு வரலாம்னு எழுதறீங்க. ‘சிங்கம்’ படத்த மியூட் பண்ணி பார்த்தாலே சவுண்ட் கேட்குதுன்னு எழுதறீங்க.

‘அலெக்ஸ் பாண்டியன்’ ஓடுற தியேட்டர்ல ஆளில்ல, தீவிரவாதிங்க ஒளிஞ்சுக்க சிறந்த இடம்னு கோவம் வர்ற மாதிரி காமெடி பண்றீங்க. படத்துக்குத்தான் விமர்சனம்னா, ‘சண்டமாருதம்’ டிரெய்லர் பார்த்துட்டு, ஓவியாவுக்கு சுப்ரீம் ஸ்டார் சித்தப்பா மாதிரி இருக்காருன்னு பட்டாசு கொளுத்தறீங்க. மூணு வேளையும் சாப்பிட்டா அது சோறு, மூணு நாளைக்கு ஒரு தடவை சாப்பிட்டா அது பீரு. அதே மாதிரி, எப்பவாவது படங்களை விமர்சனம் பண்ணினாதான் மதிப்பு, எப்பவுமே நக்கலும் நையாண்டியும் பண்ணினா, அது அதப்பு.

இப்போ சவால் விடுறோம்ய்யா, ஒரு நாள், ஒரே ஒரு நாள், ஒரு சென்டிமென்ட் காட்சிக்கு டைரக்ஷன் செஞ்சு பாருங்கய்யா. இவங்கள அழ வைக்கிறதுக்குள்ள நாங்க எவ்வளவு அழறோம்னு உங்களுக்கு புரியும்யா. தம்பி, கிணறு வெட்டுனா தண்ணீர் வரும்; ஆனா கைய வெட்டுனா கண்ணீர்தான் வரும்.          

ஆல்தோட்ட பூபதி