ரிமோட் பொம்மையல்ல குழந்தைகள்!



கலைகளை மீட்டெடுக்கும் கிராமம்

டோரா, புஜ்ஜி, சோட்டா பீம், ஜெட்டிக்ஸ், ஜாக்கி, ஸ்பைடர்மேன், டாம் அண்ட் ஜெர்ரி... இன்றைய குழந்தைகளின் டி.வி நண்பர்களான இவர்களின் செல்வாக்கு இந்த கிராமத்திலும் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் டி.வி., டி.டி.எச்., அண்ணன் அக்கா மூலமாய் ஒரு கவர்ன்மென்ட் லேப்டாப், அதில் வீடியோ கேம்ஸ் என கிராமங்கள் இப்போது நிறைய மாறிவிட்டன. அதிலும் இழுத்துப் பிடித்து பாரம்பரியம் காக்கும் இந்த கிராமம் ஓர் அழகிய விதிவிலக்கு!

கீழமட்டையான்... மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். அடர்ந்த தென்னந்தோப்பிற்கு பின்புறம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் இந்த ஊரின் மத்தியில் வீற்றிருக்கிறார் வாலகுருநாதசுவாமி. இக்கோயிலின் முன்பிருக்கும் வேப்பமரத்தடி தான் குழந்தைகளின் விளையாட்டுத் திடல். ‘பூப்பறிக்க வருகிறோம்... பூப்பறிக்க வருகிறோம்...’, ‘காலாட்டு மணி, கையாட்டு மணி...’,  ‘கொடுக்கு... கொடுக்கு... வெத்தலை... வெத்தலை...’, ‘உ ஒண்ணு... உ ரெண்டு... உ மூணு...’

- ஏதோ பூர்வஜென்ம நினைவுகள் போல, நம் பால்யத்தைத் தட்டி எழுப்புகின்றன இந்தக் குரல்கள். ‘‘ஓடியாடி விளையாட வேண்டிய வயசுல. ரிமோட் கன்ட்ரோல் ஆட்டி வைக்கிற பொம்மைகள் மாதிரி நம்ம குழந்தைகள் ஆகிடக் கூடாதில்லையா? அதனாலதான் எங்க கிராமமே முயற்சி எடுத்து இந்த விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்கறோம்’’ என்கிறார் பூங்கோதை. இப்போதைக்கு இவர்தான் இங்கே... ‘தட்டாங்கல்’, ‘உப்பு கும்மி’, ‘கண்ணாமூச்சி’ கோச்!

‘‘எங்க சின்ன வயசுல டி.வி யெல்லாம் கிடையாது. இதே இடத்துலதான் எல்லாம் ஒண்ணா சேர்ந்து விளையாடிட்டிருப்போம். ஆனா, இப்ப உள்ள குழந்தைங்க டி.விக்கு அடிமையாகிட்டாங்க. எந்நேரமும் கார்ட்டூன்ல வர்ற கேரக்டர் மாதிரி கட்டைக் குரல்ல பேசிக்கிட்டுத் திரியிறாங்க. ஓடியாடி விளையாடுறதுன்னா என்னான்னே தெரியறதில்ல. இந்தப் பாரம்பரிய விளையாட்டெல்லாம் அடுத்த தலைமுறையில அழிஞ்சே போயிடுமோன்னு பயமாகிடுச்சு.

அதான், நாங்களா சில குழந்தைகளைக் கூப்பிட்டு சில விளையாட்டுகளை விளையாட வச்சோம். கத்துக்கிட்டதும் அவங்க ஆர்வமாகிட்டாங்க. இப்போ பசங்களுக்கு சிலம்பாட்டம், ஒயிலாட்டம்னு இந்த மண்ணோட பாரம்பரியக் கலைகளையும் சொல்லித் தர்றோம்’’ என்கிறார் பூங்கோதை உற்சாகமாக. ஒயிலாட்டக் கலைஞரான கருப்பையா தொடர்கிறார்...

‘‘எங்க கிராமமே ஒயிலாட்டத்துக்கு படு ஃபேமஸ். இந்தியா முழுக்க போய் ஆடியிருக்கோம். போன மாசம் கூட லட்சத்தீவு போய்ட்டு வந்தோம். எங்க ‘கண்ணப்பர் ஒயிலாட்டக் கலைக்குழு’வுல 70 பேர் இருக்காங்க. இதுல நிறைய பேர் ஸ்கூல் பசங்க. இந்தக் கலை எங்களோட அழிஞ்சு போகக் கூடாதுனு இவங்களுக்கு சொல்லிக் கொடுத்திட்டு வர்றோம். நாங்க மேடையில ஆடுறதைப் பார்த்து பசங்களே ஆர்வமா வந்து கத்துக்கிறாங்க’’ என்கிறார் அவர் சந்தோஷமாக.

‘‘எங்கப்பா கருப்பண்ண மூப்பனார்தான் இந்த ஊர்ல இந்தக் கலையை முதல்ல கத்துக் கொடுத்தார்’’ எனத் துவங்குகிறார் மூத்த ஒயிலாட்டக் கலைஞரான ராஜா. ‘‘இதுல கரகம் வச்சு ஆடுறது, கோல்குச்சியை கையில பிடிச்சுக்கிட்டு ஆடுறது, கரகம் இல்லாமல் கையில துணி வச்சு ஆடுறதுனு மூணு வகை ஆட்டம் இருக்கு. ஆனா, கரகம் இல்லாத ஆட்டம் மட்டும்தான் இன்னிக்கு ஆடுறாங்க. இவ்வளவு பெரிய பாரம்பரியத்தை அழிய விடாம எங்க பசங்க முன்னெடுத்துட்டுப் போறதே பெரிய விஷயம். எங்க அழிஞ்சாலும் எங்க ஊர்ல இந்தப் பாரம்பரியக் கலையும் விளையாட்டுகளும் எப்பவும் அழியாது’’ என்கிறார் அவர் பெருமூச்சுவிட்டபடி.

பேராச்சி கண்ணன்
படங்கள்: பொ.பாலமுத்துகிருஷ்ணன்