கடைசி பக்கம்



உறவுகள் யாருமற்ற தனிமையில் வசித்த அந்தப் பணக்கார மூதாட்டியிடம் எல்லாமே இருந்தது. ஆனால் மகிழ்ச்சி இல்லை; நிம்மதி இல்லை. தன் வெறுமைக்கு தீர்வு கேட்டு ஒரு மனநல மருத்துவரிடம் போனார். ‘‘உங்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு இவரிடம் இருக்கிறது’’ என அந்த மருத்துவர் அழைத்துப் போனது, ஒரு துப்புரவு செய்யும் பெண்ணிடம். மூதாட்டி அவநம்பிக்கையோடு அந்தப் பெண்ணைப் பார்க்க, அவள் தன் கதையைச் சொன்னாள்...

‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில் இறந்தார்; அடுத்த இரண்டு மாதங்களில் டெங்கு ஜுரத்திற்கு மகனைப் பறிகொடுத்தேன். திடீரென தனி மரமானேன். எனக்காக யாருமில்லை; எதுவுமில்லை. பசி, தூக்கம், சந்தோஷம் அத்தனையும் இழந்தேன். இனி எதற்கு வாழ வேண்டும்? ஒரு மழை இரவில் ஒரு முடிவோடு நான் மரணத்துக்குத் தயாரானபோது, மழையில் நனைந்து நடுங்கியபடி ஒரு பூனைக்குட்டி வீட்டுக்குள் வந்தது.

அதை டவலால் துவட்டி, ஒரு கிண்ணத்தில் பால் வைத்தேன். பாலைக் குடித்ததும் அதற்கு லேசாக தெம்பு வந்தது. என் கால்களை உரசி, கோணங்கித்தனமாக ஏதோ செய்தது. பார்த்ததும் சிரிப்பு வந்தது. பல நாட்களுக்குப் பிறகு நான் சிரிக்கிறேன்.

ஒரு பூனைக்கு பால் கொடுத்ததிலேயே இவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால்? அடுத்த நாள் இனிப்பு வாங்கி, பக்கத்தில் இருந்த ஆதரவற்றோர் இல்ல பையன்களுக்குக் கொடுத்தேன். இப்படி தினம் தினம் யாருக்காவது, ஏதாவது கொடுக்கிறேன். இப்போது என்னைவிட சந்தோஷமாக யாருமில்லை; நிம்மதியாகத் தூங்குபவர் யாருமில்லை...’’
பணத்தை நிறைய சேர்த்து, பணத்தால் வாங்க முடியாத பொருட்களை இழந்திருந்த அந்த மூதாட்டி கேட்டு அழத் தொடங்கினார்.

தருவதால் பெருகுமே மகிழ்ச்சி!

நிதர்ஸனா