facebook வலைப்பேச்சு



இரு போர்வைக்குள் ஒரு தூக்கம்... குன்னூர் குளிர்!
- ரமணி பிரபா தேவி

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது, போட்டியிடாமல் இருப்பது கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன போட்டியிட்டு வாபஸ் வாங்குவது?
# பிஜேபி ஸ்பெஷல்?!
- ஜோதிமணி சென்னிமலை

மலேசிய விமானம் போல் தவிக்கவிட்டு எங்கோ சென்றுவிட்டாள், சென்னை விமான நிலையம் போல் தினம் தினம் உடைந்துகொண்டு இருக்கிறேன்.
- பூபதி முருகேஷ்

அடுப்பங்கரையில் கிடைக்கும் நூதன முத்தம், கூட்டுக்குடும்பத்தில் மட்டுமே சாத்தியம்...
- மீனம்மா

துண்டிக்கப்பட்ட வால்
துடிப்பதைக் கூடத்
திரும்பிப் பார்க்காமல்
தப்பியோடித்
தன் உயிரைக் காக்கும்
பல்லிகள்!
- உமா தேவி

ஒருவன் தனக்குத் தானே அளித்துக் கொள்ளக்கூடிய நற்சான்றிதழ்களிலேயே தலைசிறந்தது, இப்படி பிரகடனம் செய்வதுதான்: ‘‘நான் ஒரு திறந்த புத்தகம்.’’
- நவீன் கிருஷ்ணன்

தவறான உறவால் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசும் சமூகம், தவறான வழியில் கிடைத்த பணத்தை குப்பைத் தொட்டியில் வீசுவதில்லை...
- அம்புஜா சிமி

கூட்டிக் கழிச்சு பாத்தா லவ் மேரேஜ்தான் பெஸ்ட்டு!
கூட்டாம கழிக்காம பாத்தாலும் அதான்! அதேதான்!
- பிரபாகரன் சேரவஞ்சி

விதைத்த விதைகள் எல்லாம் சரியாக முளைத்ததா என காவல் காக்கும் நிலா...
- சுந்தரி விஸ்வநாதன்

சூடான விவாதங்களில் மனைவியை வெல்லும்போதெல்லாம், சூடு தணிக்கத் தரப்படும் ஆறிப் போன காபி!
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

என் பெயரை
வானத்திற்குச் சூட்டிவிட்டேன்
இனி நான் பெயரற்றவன்
என் சொற்களை
பறவைகளுக்கு ஊட்டிவிட்டேன்
இனி நான் மொழியற்றவன்
என் காமத்தை
கடலில் கரைத்துவிட்டேன்
இனி நான் உடலற்றவன்
என் காதலை
உனக்குள் விதைத்துவிட்டேன்
இனி நான் காலமற்றவன்
 பழநி பாரதி

தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தல்களை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது: ஞானதேசிகன்.
ஆடத் தெரியாத சிலுக்கு... காலுல சுளுக்குன்னாளாம்!
- பூபதி முருகேஷ்

ஒருவேளை மனிதன் டைனோசரை சந்தித்து இருந்தால்... அதன் தலையுடன் ஒரு கடவுள் நமக்குக் கிடைத்திருப்பார். நாமளும் கார் டேஷ்போர்டுல வச்சிருக்கலாம்!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

twitter வலைப்பேச்சு

@8appan  iPhone6
 நோக்கியா 1100வைவிட சிறந்ததுன்னு மார்க்கெட்டிங் பண்ணா ஒரே வாரத்துல அம்புட்டும் வித்துரும்...
# நாம சொன்னா எங்க கேக்குறானுங்க?

@dlakshravi
  ‘பழைய இரும்பு, பழைய பேப்பர் வாங்கறதும்மா’விலிருந்து முன்னேறி இப்போது ‘பழைய டிவி, பழைய கம்ப்யூட்டர் வாங்கறதும்மா!’

@veyilooraan
நடை பழகிய நாட்கள் நினைவில் இல்லை, நடை தளரும் நாட்களும் இருக்கக்கூடாது!

@_Kathir_   
குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கிறது, இதான் ஒன்லைன்! இதை மையமா வச்சி நீதி போதனையாவோ, த்ரில்லராவோ, ப்ளாக் காமெடியாவோ படம் எடுக்கிறது ட்ரெண்ட் போல...

@Balki_tweets    
தியேட்டருக்கு செல்லும் மக்கள் கொஞ்சம் சத்தமில்லாமல் படம் பாருங்கப்பா... சி.டி.ல உங்க சத்தம்தான்   அதிகமா    கேட்குது; டயலாக்கே புரியமாட்டேங்குது!

@pugalmani55
மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக மின்துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை: செய்தி
# தமிழக மின்துறைக்கு அமைச்சகம் இருக்கா?

@mymindvoice   
தேங்காய் உள்ளிருந்து தின்னும் தேரை போல, வெளி தெரியாது உறவை அழிக்கும் சில வன்மங்கள்!

@bommaiya
கமல் அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்ன்னு நடிச்சி மொத்தமா ‘பாபநாச விஸ்வரூப உத்தம வில்லன்’னு ரிலீஸ் பண்ணுவார் போல!

@Thaaymanam    
கட்டினா த்ரிஷாவைத்தான் கட்டணும்னு முடிவா இருந்தேன். இப்ப என் பையனும் அதே ட்ரீமுக்கு வந்துருவான் போல!
# அதே உறுதி, அதே நம்பிக்கை, தலைமுறை தலைமுறையா...

@iLoosu   
10 வருஷத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க முடியலனு புலம்புற நண்பன், 10 நாளுக்கு முன்ன நம்மட்ட வாங்குன கடனை மட்டும் மறந்திடுறான்!

@kattathora     
நடு இரவில் இல்லறத்தை உதறி என்னால் சித்தார்த்தன் போல் செல்ல முடியும்... இந்த தெருநாய்களை நினைச்சாதான் லைட்டா பயமா இருக்கு!

@Erode_Kathir     
அரசியல் தலைங்க ஆளாளுக்கு அவங்க ஊரை ‘சிங்கப்பூர் போல’ ஆக்கிட்டா, அந்த சிங்கப்பூரை எந்த ஊரா ஆக்குறதுன்னுதான் புரியல!

@sundartsp   
ஆம்லெட்டுக்கோ ஆஃப்பாயிலுக்கோ தப்பிப்பதுதான் சிக்கனாகிறது!