அமர காவியம்



நண்பனுக்காக தூது போய், தானே காதலில் விழுந்த சத்யாவின் காதல்தான் இந்த ‘அமர காவியம்’.பார்த்து காதல், பார்க்காமலே காதல், பேசி காதல், பேசாமலே காதல் என காதலின் அத்தனை வகைகளையும் கண்ட நமக்கு, இன்னும் காதலின் அடுத்த பக்கங்களை காண்பிக்கிறார் டைரக்டர் ஜீவா சங்கர்.

ஆதிகால காதல் இன்று வரை பயன்பாட்டில் இருப்பதை பயன்படுத்தி இருக்கிறார்கள். மனதில் படிந்த அன்பைப் புறம் தள்ள முடியாமல் தவிக்கும் இரண்டு காதலர்களின் உணர்ச்சித் தவிப்பைத்தான் சொல்கிறது ‘அமர காவியம்’. காதலின் பரிமாற்றம், அதன் பிறகான உளவியல் துயரம் என பதற்றமே இல்லாமல் பயணிக்கிறது படம்.

நண்பனின் காதலையும் கடிதத்தையும் தாங்கிச் செல்லும் சத்யாவின் இயல்பு, ஆர்வமூட்டுகிறது. காவல்துறையின் அதிகப்படியான அத்துமீறலில் காதல் கனிவதற்கு முன்பே பிரிக்கப்படுகிறார்கள். 80களின் கதைக் களத்தில், காதலை அழகாகப் பதிவு செய்யும் முயற்சியில் அழுத்தம் சேர்த்திருக்கிறார் டைரக்டர்.மன அழுத்தத்தின் படிப்படியான கட்டத்தை அருமையாகக் காட்டியிருக்கிறார் சத்யா. காதலின் சோதனை, வேதனைகளை ஆழ்ந்த அமைதியில் காட்டியிருக்கும் விதத்தில் இதயம் கவர்கிறார்.

அவர் காதலில் உருகுவதும், மருகுவதும் ஓகேதான். ஆனால், உணர்ச்சிவசப்படும் சில காட்சிகளில், ஒன்று இறுக்கம் காட்டுகிறார்; அல்லது முகத்தை உம்மென்று வைத்துக்கொள்கிறார். இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் தேறி விடும் வகையில் வந்து விடுவார் சத்யா.‘வந்தாச்சு புது ஹீரோயின்’ என முரசறைகிறார் மியா. கடிதம் கொடுக்க வந்த சத்யாவுக்கு காதல் சொல்லும் அவர், அருமையான புது வரவு.

சத்யாவுக்கு ‘ஐ லவ் யூ’ முதல் தடவை சொல்லும் இடத்திலும், அவரே எதிர்பார்க்காத சமயம் சத்தத்தோடு முத்தம் கொடுக்கும் பதத்திலும் நெஞ்சைக் கிள்ளி அள்ளுகிறார் மியா. யாருமில்லாத வீட்டில் சத்யாவை மடக்கிப் பேசும் சரசத்தில் மிளிரும் வெட்கம், கிறக்கம், இவை போக பலப்பல சூடு பறக்கும் முத்தம் என நடிப்பில் டீன் ஏஜ் மிளிர்கிறது மியாவிடம்.ஜிப்ரானின் இசையில் காதல் கனிந்து உருகுகிறது.

‘ஏதேதோ எண்ணம் வந்து’ பார்வதி யின் வரிகளில் அவ்வளவு பாந்தம். ‘மௌனம் பேசும்’ பாடல் கூடுதல் போனஸ். ஊட்டியின் அழகை பாலுமகேந்திராவிற்குப் பிறகு கருத்தில் நிறைத்திருக்கிற ஜீவா சங்கரின் கேமராவால், மொத்த கேன்வாஸும் அழகு. பாடல் காட்சிகளில் வர்ணிக்க முடியாத ரம்மியம்.

தீவிரமான காதல் கதையென்றால் இத்தனை மெதுவாக நகர வேண்டுமா, நன்றாகவே இருக்கிறது என்றாலும் பார்த்துப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால் போதுமா? இரண்டாம் பகுதியின் நீளம் பொறுமையை செமத்தியாக சோதிக்கிறதே... கவனித்திருக்க வேண்டாமா? தேவதாஸ் காதலை வருஷக் கணக்கில் பார்த்து ரசித்தவர்கள்தானே நாம்.

இன்னும் விறுவிறுப்பைக் கொண்டு வந்திருக்கக் கூடாதா! 80களின் காதல் என்றால் பரபரப்பு தேவையில்லையா? இப்படி நீளும் கேள்விகளை எண்ணப் புகுந்தால் விரல்களுக்கு எங்கே போவது?ஆனாலும், காதலில் இளமையோடு, விரகத்தை, கவர்ச்சியை சேர்க்காத விதத்தில், ‘அமர காவிய’த்திற்கு ஓர் இடம் இருக்கிறது.

குங்குமம் விமர்சனக் குழு