எச்சரிக்கை... உங்கள் போனை யாரோ ஒட்டுக் கேட்கிறார்கள்!




* மனைவியோடு போனில் பேசும் அந்தரங்கமான விஷயத்தை, பத்து அதிகாரிகள் கொண்ட குழு ஒரு ஹாலில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தால்...

* அலுவலக ரகசியம் ஒன்றை உயர் அதிகாரிக்கு போனில் சொல்லும்போது, அதை போட்டி நிறுவனத்தின் உயர் அதிகாரி உற்சாகத்தோடு கேட்டுக் கொண்டால்...

* பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் ஒரு வேனில் எடுத்துச் செல்லப்படு வது பற்றி பேசுவதை கொள்ளையர்கள் ஒட்டுக் கேட்டால்...

* மிக முக்கியமான அரசியல் முடிவு ஒன்றை போனில் பேசி எடுக்கும்போது, அது எதிர்க்கட்சியின் டாப் தலைவருக்குத் தெரிந்துவிட்டால்...

* கமாண்டோ படை நடத்தப் போகும் அதிரடி தாக்குதல் பற்றிய பேச்சு, தீவிரவாதிகளின் காதில் விழுந்தால்...

நம்புங்கள்! இது எல்லாமே இப்போது இந்தியாவில் சாத்தியம். போன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது இங்கு சமீப ஆண்டுகளில் தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. ஒட்டுக் கேட்கப்படும் போன்களில் ஒன்றாக உங்களுடையதும் இருக்கலாம்! கடந்த வாரம் வெளியான அந்தச் செய்தி நிறைய பேர் கண்ணில் படாமல் போயிருக்கலாம்.

‘மத்திய அரசின் உத்தரவுப்படி இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன’ என்பதுதான் அந்த செய்தி. ‘சாஃப்ட்வேர் ஃப்ரீடம் லா சென்டர்’ என்ற அமைப்பு வெளியிட்ட தகவல் இது. இதுதவிர மாநில அரசு உத்தரவுப்படி தனியாக நிறைய போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. தனிநபர்கள் செய்யும் சட்டவிரோத ஒட்டுக் கேட்புகளும் எக்கச்சக்கம். ‘‘சராசரியாக இந்தியாவில் ஆயிரம் போன்களில் ஒன்று ஒட்டுக் கேட்கப்படுகிறது’’ என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

1885ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ‘இந்திய டெலிகிராப் சட்டப்’படி தேசப் பாதுகாப்புக்காக எந்த ஒரு நபரின் தொலைபேசியையும் அரசு ஒட்டுக் கேட்கலாம். இதற்கு மத்திய அல்லது மாநில உள்துறை செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும். ஒரு போனை அதிகபட்சம் 180 நாட்களுக்கு ஒட்டுக் கேட்கலாம்.

ஆனால் 60 நாட்களுக்கு ஒருமுறை மறு அனுமதி வாங்க வேண்டும். ‘ஒட்டுக் கேட்கப்படும் நபர், சட்டவிரோதமாக ஏதோ செய்கிறார்’ என்பதை அப்போது நிரூபிக்க வேண்டும். இப்படி ஒட்டுக் கேட்கப்பட்ட டேப்களில் ஏதும் சட்டவிரோத ஆதாரம் இல்லையெனில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதை அழித்துவிட வேண்டும். அவசரம் எனில் யாருடைய அனுமதியும் இல்லாமலே ஒருவருடைய போனை ஒட்டுக் கேட்கலாம். ஆனால் 72 மணி நேரத்துக்குள் உரிய அனுமதி வாங்கிவிட வேண்டும்.

ரா உளவு அமைப்பு, இன்டெலிஜென்ஸ் பீரோ எனப்படும் மத்திய உளவு அமைப்பு, வருவாய் புலனாய்வுத் துறை, அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ, மத்திய நேரடி வரிகள் வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, தேசியப் புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறை ஆகிய 9 மத்திய அரசு அமைப்புகளுக்கு மட்டுமே ஒட்டுக் கேட்கும் அதிகாரம் உண்டு.

தொலைபேசி உரையாடல்கள் மட்டுமின்றி எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், வீடியோ உரையாடல், இன்டர்நெட் போன் கால் என எதையும் ஒட்டுக் கேட்பது சாத்தியம்.

சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. பிரணாப் முகர்ஜி மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, அவரது அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தி அவரை வேவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அவர் வீட்டில் ஒட்டுக் கேட்க முயன்றதாக டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், மூன்று தனியார் துப்பறியும் நிறுவன ஊழியர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

இமாசலப் பிரதேச முதல்வராக இருந்த பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பிரேம் குமார் துமல், எதிர்க்கட்சித் தலைவர்கள், உயர் அதிகாரிகள் என கிட்டத்தட்ட 1500 பேரின் டெலிபோன்களை ஒட்டுக் கேட்க உத்தரவிட்டிருந்தார். சுமார் 2 லட்சம் உரையாடல்களை ஒட்டுக் கேட்டு ரெக்கார்ட் செய்திருந்தது மாநில உளவு போலீஸ்.

அசாம் முதல்வர் தருண் கோகோய், தனது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சக அமைச்சர்களின் போன்களையே ஒட்டுக் கேட்டதாக புகார் எழுந்தது. இப்படி புகார் எழாத மாநிலங்களே இல்லை. செல்போன் சேவையைத் தரும் தனியார் நிறுவனங்கள் பலவும், அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல், கேட்கும் நம்பரின் உரையாடல்களை பதிவு செய்ய அனுமதித்து விடுகின்றன.

இது இப்போது வேறு வடிவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தனியார் நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. போட்டி நிறுவனங்களின் வியாபார யுக்திகளைத் தெரிந்து கொள்வது, டெண்டர் மதிப்பீடுகளை அறிவது, எதிர்க்கட்சிகளின் திட்டங்களை உளவறிவது, சொந்தக் கட்சிக்காரர்களின் சதிகளைத் தெரிந்து உஷாராவது, மனைவி துரோகம் செய்கிறாரா என அறிவது என்று நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் பலரது ரகசியங்கள் தேவையாக இருக்கின்றன.

இதற்காக தனியார் துப்பறியும் நிறுவனங்கள் ஏராளம் வந்து விட்டன. செல்போன் சேவை நிறுவனங்களில் பணிபுரிவோருடன் ரகசிய டீலிங் வைத்துக் கொண்டு இதைப் பலர் செய்கிறார்கள். சுமார் 1500 ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாய் வரை விலையில் இதற்காக ஒட்டுக் கேட்பு கருவிகள் உண்டு. இதை போனில், அல்லது போன் இருக்கும் இடத்தில் பொருத்த வேண்டும்.

ஆனால் இதைவிட நவீனமாக ‘ஆஃப் ஏர் இன்டர்செப்ஷன்’ கருவிகள் வந்திருப்பதுதான் நவீன அபாயம். ஒரு சூட்கேஸ் சைஸ் பெட்டி, ஒரு லேப்டாப், சக்திவாய்ந்த ஆன்டெனா ஆகியவை அடங்கிய கருவி இது. ஒரு போனை ஒட்டுக் கேட்க வேண்டும் என்றால், அந்த வீட்டுக்கு பக்கத்தில் ஒரு காரில் இந்தக் கருவியை வைத்துக்கொண்டு காத்திருந்தால் போதும்... உள்ளே பேசுவதை கன துல்லியமாக பதிவு செய்துவிடும்.

இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் 2 கோடி முதல் நான்கரை கோடி ரூபாய் வரை விலையில் இது கிடைக்கிறது. இதன் அபாயத்தைப் புரிந்துகொண்டு தடை செய்வதற்குள் இந்தியாவுக்குள் ஆயிரம் கருவிகள் இறக்குமதி ஆகிவிட்டன. இவை யார் கையில் இருக்கின்றன என்பதுகூட யாருக்கும் தெரியாது.எனவே, போனில் ரகசியம் பேசுவதற்கு முன் ஒரு கணம் யோசியுங்கள்!

எப்படி கண்டுபிடிக்கலாம்?


ஒட்டுக் கேட்கப்படுவதில் 80 சதவீதம் செல்போன்கள்தான்; மீதி 20 சதவீதம்தான் லேண்ட்லைன் போன்கள். ஒரு செல்போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பதை எப்படிக் கண்டறிவது?

* பேசாமல் இருக்கும்போதே செல்போன் சூடாகும்.
* பேட்டரி சார்ஜ் முன்பைவிட சீக்கிரம் தீர்ந்து போகும்.
* பேசும்போது திடீரென குரலின் டெசிபல் ஏறி இறங்கும்.
* சும்மா இருக்கும்போதே போனில் விநோத சத்தங்கள் வரும். (இப்படி வந்தால், உங்கள் போனைப் பயன்படுத்தி பக்கத்தில் இருக்கும் போன்களைக்கூட ஒட்டுக் கேட்கிறார்கள் என அறிக!)
* அவ்வப்போது ‘பீப்’ ஒலி கேட்கும்.

இந்தியாவில் ஆயிரம் போன்களில் ஒன்று ரகசியமாக ஒட்டுக் கேட்கப்படுகிறது

- அகஸ்டஸ்