ஆண்கள் என்றால் துரோகம்தானா?
ஒழுக்கம் என்பது கவர்ச்சியற்ற ஆண்களால் உருவாக்கப்பட்டது. அது அவர்களுக்கே நன்மை செய்கிறது!
- மானு ஜோசப்
லக்ஷ்மிக்கு வாழ்வில் எல்லாம் இருந்தது. நல்ல வேலை, திருமண வாழ்வு, அமைதியான சூழல். ஆனால், மனதுக்குள் மட்டும் சந்தேகக் கூச்சல்... தன் துணை தன்னை ஏமாற்றுகிறாரோ என்று! அவர்களின் தாம்பத்தியத்தில் அன்புக்கு எந்தக் குறையும் இல்லை.
ஆனாலும், வெகு நேர செல் பேச்சு, எந்நேரமும் ஃபேஸ்புக் சாட் என துணையின் போக்கு பயமுறுத்தியது. உண்மையைக் கண்டறிய தோழி ஒருவர், ‘டெக்னாலஜி வழி’ காட்டினார். ரகசிய மென்பொருள் மூலம் ஒருவரின் ஸ்மார்ட் போனின் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., ஆன்லைன் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்கும் முறை அது!
அப்புறம் என்னாச்சா? நீங்களும் நாங்களும் எதிர்பார்க்கும் அதே விபரீதம்தான் ஆச்சு. துரோகத்தால், துடித்துப் போனார் லக்ஷ்மி. அவர் எதிர்பார்த்து பயந்திருந்தது தங்கள் இல்லறத்துக்கு இடையூறான ஒரு மூன்றாம் நபரைத்தான். ஆனால், நான்காம் நபர், ஐந்தாம் நபர் எனத் தோண்டத் தோண்ட பூதம் கிளம்பியது. ‘வாடி... போடி...’ என்ற உரிமைப் பேச்சு, ஆபாச வர்ணனை, அத்துமீறுகிற அனுமதி என அனைத்தும் ஒலிக்கோப்புகளாகவே வந்து சேர்ந்தன லக்ஷ்மியிடம்.
இது போன்ற சந்தர்ப்பத்தில் பெண்களுக்கு நம்மவர்களின் அட்வைஸ் என்னவாக இருக்கும்? ‘‘உனக்கு ஏன் இந்த சி.ஐ.டி வேலை? ஒவ்வொருத்தர் மனசாட்சிக்குள்ளும் நுழைஞ்சு போய்ப் பார்த்தா யாருமே நல்லவங்க இல்ல. ‘நீ எனக்கு உயிர்’னு ஒருத்தன் சொன்னா நம்பணும். அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை. பூவைக் கசக்கி முகராதே! மனுஷங்களோட மறுபக்கத்தைக் காட்டுற இந்த டெக்னாலஜியைத் தூக்கிப் போட்டுரு.’’
‘கரெக்ட்டுங்க, இதே அட்வைஸைத்தான் நாங்களும் கொடுப்போம்’ என்கிறவர்கள், நிற்க... இந்த அப்ரோச் சரியா? மனித குலத்துக்கு உண்மை முக்கியமில்லை... நிம்மதிதான் முக்கியம் என்றால், எதற்காக வேலை மெனக்கெட்டு குழந்தைகளிடம் இத்தனை ஒழுக்கங்களைக் கற்பிக்கிறோம்? ‘எப்படி வேண்டுமானாலும் இரு...
சுற்றியிருப்பவர்களிடம் அதை மறைக்கக் கற்றுக்கொள். அவர்களை நிம்மதி யாக வை’ என போதிக்கலாமே! ‘‘இந்த உலகில் விதிகளை மீறுகிறவர்களுக்குத்தான் எத்தனை எக்ஸ்க்யூஸ்கள். குறிப்பாக ஆண்களுக்கு இதில் எவ்வளவு சலுகைகள்’’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் நிபுணரான ராபர்ட் வெய்ஸ்.
‘‘திருமணம் தாண்டிய உறவுக்கு ஆண்கள் இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்வார்கள். ‘அந்த ‘இன்னொரு பெண்ணை’ நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளுக்காக என் மனைவியை நான் துரத்தப் போவதில்லை. அப்புறம் என்ன பிரச்னை?’ என வாதிடுவது ஒரு வகை.
இன்னொரு வகை ஆண்கள் இதை தங்கள் பிறப்புரிமையாக - பெருமையாகப் பேசுவார்கள். ‘நான் இப்படித்தான்... ‘பல பெண் விரும்பி’யாகப் படைக்கப்பட்டிருக்கிறேன்’ என்ற ஸ்டேட்மென்ட்டை ஆளுயர மாலை போல ஆனந்தமாய் அணிவார்கள். ஆனால், மனைவியுடனான இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் எதுவுமே துரோகம்தான். இன்றைய இன்டர்நெட் யுகத்தில் கலிபோர்னியாவில் இருக்கும் பெண்ணிடம் களியக்காவிளையிலிருந்து ஒருவன் போன் செக்ஸ் அல்லது Sexting (பாலியல் எழுத்துரையாடல்) வைத்துக்கொள்ள முடியும். இருவரும் ஒருசேர சுய இன்பம் கொள்ள முடியும். இதன் காரணமாக அன்றைய இரவு தன் மனைவியை அவன் தவிர்க்க நேரிடலாம்.
இதே கதைதான் போர்னோகிராஃபி என்ற ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கத்திலும். இவை அனைத்தையுமே அடல்ட் என்டர்டெயின்மென்ட் என்பார்கள். இதை அனுபவிக்கத் துவங்கும் ஆண்கள் பெரும்பாலும் சுய இன்பத்தோடுதான் முடிக்கிறார்கள். அது நிச்சயம் அவர்களின் அன்றைய தின தாம்பத்திய வாழ்வை பாதிக்கும். ஆக, ஆபாசப்படங்கள் பார்ப்பது கூட திருமண உறவுக்கு இழைக்கும் துரோகம்தான்’’ என்கிறார் ராபர்ட்.
அடல்ட் என்டர்டெயின்மென்ட் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே. ஆனாலும், போர்னோகிராஃபி பார்க்கும் மூன்று பேரில் ஒருவர்தான் பெண். ஆண்களுக்கு இதில் 67 சதவீதம் ஒதுக்கீடு! நம் ஊரில் சங்க இலக்கியம், கோயில் கோபுரங்கள் தொடங்கி இன்றைய ஆண்ட்ராய்டு ஆப் வரை அனைத்திலும் அடல்ட் என்டர்டெயின்மென்ட் உண்டு. அவற்றின் டார்கெட் பெரும்பாலும் ஆண்கள்தான். அதெல்லாம் துரோகம் என்றால், ஆண்களில் எத்தனை பேர் மனைவிக்கு துரோகம் செய்கிறார்கள் என்ற கணக்கீட்டை நம்மிடமே விட்டு விடுகிறார் ராபர்ட்.
ஆண்கள் இப்படி திருமணத்துக்கு வெளியே எதையாவது தேடுவதற்கு காரணங்களை மட்டும் அவர் அடுக்குகிறார்...
1. பொய்... தங்கள் திருமண உறவையே சும்மானாச்சுக்கும் என நினைப்பது.
2. பயம்... தன் தோற்றம், வயது குறித்த தாழ்வு மனப்பான்மைகளை ப்ளேபாய் இமேஜ் மூலம் களைய முற்படுவது.
3. பக்குவமின்மை... தங்கள் துணைக்கு எதுவும் தெரியாது என சின்னப்பிள்ளைத்தனமாக நம்புவது.
4. காயம்... தங்கள் ஃப்ளாஷ்பேக்கில் நிறைந்திருக்கும் நிராகரிப்பு, அவமானம் போன்றவற்றுக்கு மருந்து தேடுவது.
5. அநியாய எதிர்பார்ப்பு... ‘அட்லீஸ்ட் தீபிகா படுகோனே மாதிரியாவது’ என்ற ரேஞ்சில் மனைவியிடம் எதிர்பார்த்து ஏமாறுவது.
6. சலிப்பு... அன்றாடம் என்றாகிவிட்ட அனைத்தையும் வெறுக்கும் மனப்போக்கு.
7. குழப்பம்... ‘தாலி என்ன தாலி... அன்புதான் காதல்’ என்ற ரீதியில் உறவுகளைக் குழப்பிக்கொள்வது.
8. அடிமையாதல்... குடி போன்ற ஏதாவதொரு பழக்கத்துக்கு அடிமையாகி அதை கண்டிக்கும் மனைவியை வெறுப்பது.
இதெல்லாம் உலக அளவிலான ஆய்வுகள். நம்மூரைப் பொறுத்தவரை, கணவனை எந்தக் கட்டத்தில் துரோகி எனப் பெண்கள் டிக்ளேர் பண்ணுகிறார்கள்? வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்...
‘‘கணவனின் வெளித் தொடர்பைக் கேள்விப்பட்ட உடனேயே கொதிக்கிற பெண்களும் உண்டு. அது உடல் ரீதியிலான துரோகம் வரை சென்ற பின்பு கேள்வி கேட்பவர்களும் உண்டு. அது தொடர்பாக சொத்துப் பிரச்னைகள் வரும்போது மட்டும் எதிர்வினையாற்றும் பெண்களும் உண்டு.
இது அந்தந்த பெண்களின் சமூகம், வளர்ந்த விதம், மனோபாவத்தைப் பொறுத்தது. எதுவாக இருந்தாலும், ‘இது போல நான் இருந்தால் ஒப்புக்கொள்வீர்களா?’ என மனைவி கேட்கும்போதுதான் அது பிரச்னையாகிறது. இன்று காலம் எவ்வளவோ முன்னேறியிருக்கலாம். ஆனாலும், கல்யாணமான ஒரு ஆணுக்கு ‘ஐ மிஸ் யூ’ என ஒரு குறுஞ்செய்தி வருவதும், அதே குறுஞ்செய்தி ஒரு குடும்பப் பெண்ணுக்கு வருவதும் ஒரே மாதிரியாகப் பார்க்கப்படுவதில்லை!’’ என்றார் அவர்.
இவர் வாதத்துக்கு சான்று... நாம் ஓப்பனிங்கில் சொன்ன கதைதான். மிகச் சமீபத்தில் உளவியல் ஆலோசகர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்த உண்மைக் கதை அது. அதில் நாம் சொல்லாமல் விட்ட ட்விஸ்ட் என்னவென்றால், லக்ஷ்மி என அதில் குறிப்பிடப்பட்டிருப்பது பெண் அல்ல... லக்ஷ்மி நாராயணன் எனும் ஆண். துரோகம் இழைத்தது அவர் மனைவி!
இப்போது சொல்லுங்கள்... அடுத்தவர் மனசை ஆராயக் கூடாது. மனைவி மனசைத் தெரிந்துகொண்டால் நிம்மதி போய்விடும் என ஒரு ஆணுக்கு நாம் அட்வைஸ் பண்ணுவோமா? நமக்குள் ஏன் இவ்வளவு ஆண் - பெண் பேதம்?
நீங்கள் யார்?கிண்டல் இல்லை... இந்த பொஸிஷன் பெயரே ஸ்டார் ஃபிஷ் ஸ்லீப்பிங்தான். கை, காலை அகல விரித்து, இப்படி நட்சத்திர மீன் போலத் தூங்குகிறவர்கள் உலகில் 5 சதவீதம் பேராம். இவர்கள் அடுத்தவரை அதிகம் மதிப்பார்கள். உதவுவார்கள். அதனால் நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால், கூட்டத்தின் நடுவே தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இவர்களுக்கு விருப்பமிருக்காது.
‘‘சேச்சே... இப்படியே திஙியில போட்டோ போட்டேன். நம்ம ஐயாவே அதை லைக் பண்ணி ‘ப்யூட்டி ஃபுல்’னு கமென்ட்டும் போட்டிருக்காரும்மா!’’
எங்க வீட்டுக்காரருக்கு இந்தப் புடவையே பிடிக்கலை. அதான் உனக்குக் கொடுத்துட்டேன்.
நீ தப்பா எடுத்துக்கலையே..?
- தேடுவோம்...
கோகுலவாச நவநீதன்