33 நிபுணர்கள்
எனக்குத் தெரிந்து எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒன்றில் நிபுணத்துவம் இருக்கிறது. மிகச் சாதாரணமான ஒரு விஷயம், காய்கறி நறுக்குவது. நான் பெரிய விருந்துகளுக்கு அமர்த்தப்பட்டவர்களைச் சொல்லவில்லை. மிக எளிதாக, ஒரே அறையில் காலம் தள்ளும் மிகச் சாமானியர்கள். என் தகப்பனாரின் ஒரு சகோதரி இப்படித்தான் ஒரே அறையில் காலம் தள்ளினாள். பல அளவுகளில் வரும் காய்கறிகள் அவள் கையில் ஒரு சீராகத் துண்டாகும். இதை யாருடனாவது பேசிக்கொண்டே செய்வாள்.
மிகச் சாதாரணமான இன்னொரு விஷயம், பாத்திரங்கள் துலக்குவது. எனக்கு ஒன்று விட்ட சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் ஒரே குடும்பத்து மருமகன்கள் ஆனார்கள். அவர்கள் வீட்டில் முப்பதாண்டுப் பழைய எவர்சில்வர் பாத்திரங்கள் எல்லாம் புதிய வெள்ளிப் பாத்திரங்கள் போல மின்னும். மிகப் பழைய மேஜை நாற்காலிகள்... நூறாண்டுப் பழையதாகக் கூட இருக்கும்.
ஆனால் அவை தினமும் நன்கு துடைக்கப்பட்டு மிக நேர்த்தியாக இருக்கும். இது யாருடைய வேலை என்று தெரியாதபடி அவர்கள் எப்போதும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது போலக் காணப்படும். ‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்றொரு பழமொழி உண்டு. அது என் சகோதரர்களைப் பார்த்து உண்டான பழமொழியோ எனத் தோன்றும். இன்று இருவரும் இல்லை.
இதையெல்லாம் யாரும் நிபுணத்துவம் என்று கூறுவதில்லை. சமூகம் சிலரையே நிபுணர்களாகக் கருதுகிறது. அந்த நிபுணர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் ஆலோசனை கூறும்போது எனக்குக் கவலையே தோன்றுகிறது. மிக எளிய மருத்துவக் குறிப்புகள் கூட அச்சம் தருகின்றன.
நான் பன்னிரண்டு வயதிலிருந்து இன்றைய 83வது வயது வரை ஒரு பூஞ்சையாகக் காலம் தள்ளிவிட்டேன். எவ்வளவு மருத்துவர்களைப் பார்த்து விட்டேன்; வைத்திய முறைகளில் எவ்வளவு மாற்றங்களைப் பார்த்து விட்டேன்!
நான் சிறுவனாக இருந்தபோது ‘த்ரோட் பெயின்ட்’ என்று உண்டு. ஜுரம் வந்தால் தொண்டை சரியில்லாமல் போகும். தொண்டை சரியில்லை என்றால் இந்த த்ரோட் பெயின்ட் மருந்து கொண்டு தொண்டையில் பூசி விடுவார்கள். அதில் உடல் சரியாக வில்லையென்றால்தான் வேறு மருந்துகள் தருவார்கள். என் உடலைக் கீறியது, அம்மை குத்துவதற்குத்தான். இன்று பலருக்கு இந்தத் தொண்டை பூச்சு பற்றித் தெரியாது.
அதே போல டிங்க்சர் அயோடின். ரத்தக் காயம் என்றால் இதைப் பூசுவார்கள். தாங்க முடியாதபடி புண் பற்றி எரிவது போல இருக்கும் ஒரு நிமிடம். காயம் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் ஒரே நாளில் ஆறிவிடும். ஆனால் இன்று இந்த வைத்தியம் புழக்கத்தில் இல்லை. சிறு சிறு உபாதைகளுக்கு ஒருவேளை இந்த வெகுஜனப் பத்திரிகை மருத்துவக் குறிப்புகள் பொருந்தலாம்.
ஆனால் சில வைத்தியர்கள் மிகச் சிக்கலான நோய்களுக்குக் கூட ஆலோசனைகள் தந்து விடுகிறார்கள். அதைப் படித்தால் வைத்தியர் கூறும் அவ்வளவு நோய்களும் உங்களுக்கு இருப்பது போலத் தோன்றும். (இந்த உணர்வும் ஒரு நோய். அதற்கும் ஒரு மருத்துவப் பெயர் இருக்கிறது!)
மருத்துவம் போல இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஆன்மிகம். அதிலும் சில யோகச் சக்கரங்களைப் போட்டு அவை ஏதோ எளிதில் அடையக் கூடியது போல விளக்கம் இருக்கும். உலகில் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள் லட்சக்கணக்கில் இருக்கலாம். அவர்கள் யாரும் அதைப் பிரகடனப்படுத்த மாட்டார்கள்.
ஒருவருக்கு உண்மையிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் இருந்தால்? நாட்டம் என்பது என்ன? விளையாட்டுகளில் நாட்டம், ஆட்டத்தில் முன்னேற்றம், இதெல்லாம் வெளிப்படையாகத் தெரியும். ஆனால் ஆன்மிகம் நமக்குள்ளே இயங்குவது. இதில் கூட என் கண்களுக்கு எல்லாருமே வெவ்வேறு அளவுகளில் ஆன்மிகம் உடையவர்களாகத் தோன்றுகிறார்கள்.
இதில் ஓரளவு நமக்கு உதவக் கூடியது, சிலரின் வாழ்க்கை வரலாறுகள். ஆன்மிகத் தலைவர்கள் பற்றிய பல வரலாறுகளை மிகைகூறல் என்னும் அம்சத்தினால் ஒதுக்கித் தள்ள வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகைகளில் தவறாது தோன்றும் ஒரு சாமியார் ஆசிரமத்திலிருந்து ஒரு நூல் என்னிடம் வந்து சேர்ந்தது. தொழில்நுட்பம் மற்றும் நூல் தயாரிப்புக்கு இந்த வெளியீடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் இது உட்கொண்டிருக்கும் செய்தி அவ்வளவு எளிதல்ல. எழுதப்பட்ட தாலேயே அது அர்த்தப்படுத்திக் கொள்வதாகி விடுகிறது.
இதை எப்படி இரண்டு தனித்தனி நபர்களால் ஒரே மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்? இதனால்தான் வரலாற்றில் பதிந்துள்ள பெரிய ஆன்மிகத் தலைவர்கள் எதையும் எழுதி வைக்கவில்லையோ? இதனால்தான் புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள் எனத் தொடர்ந்து 19ம் நூற்றாண்டு ராமகிருஷ்ணர் வரை எவரும் எதையும் எழுதி வைக்கவில்லையோ?
ரமணர் குகைவாசியாக இருந்த நாட்களில் திருவண்ணாமலைக்கு நியமிக்கப்பட்ட ஓர் ஆங்கிலேய அதிகாரி ஒரு கனவு கண்டார். அந்தக் கனவுப்படி அவர் ஒரு குகைவாசியைச் சந்திக்க வேண்டும். அவருடைய இந்திய உதவியாளர்களிடம் விசாரித்திருக்கிறார். ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அந்த அதிகாரி திரும்பத் திரும்பக் கேட்க... ‘‘நீங்கள் கூறுவதுபோல ஒருவர் இருக்கிறார்’’ என்று ஒரு நபர் கூறியிருக்கிறார். அந்த நபர் அந்த அதிகாரியை ரமணரிடம் அழைத்துச் சென்றார்.
ரமணர் பதினைந்து வயதில் வீட்டை விட்டு வந்து திருவண்ணாமலையில் இருப்பவர். அதிகம் ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அது அந்த ஆங்கில அதிகாரியும் ரமணரும் மீண்டும் மீண்டும் சந்திக்கத் தடையாக இல்லை.
ஒரு கட்டத்தில் அந்த ஆங்கில அதிகாரிக்கு சில சக்திகள் வந்து விட்டன. ரமணரின் ஆலோசனைப்படி அதில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார். நாம் நினைப்போம், அவர் ஓர் இந்துவாக மாறுவார் என்று! இல்லை, அவர் வேலையைத் துறந்து இங்கிலாந்து திரும்பி ஒரு பாதிரியாராகி விட்டார்!
ஆன்மிகம் ஒரு குருமுகமாகப் பழக வேண்டும் என்பார்கள். யார் அந்த குரு? அதை நாமாகத் தேர்ந்தெடுக்கக்கூடாது. நம் தேர்வில் சுயசார்பு இருக்கும். ஆதலால் குருதான் சீடனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!
இவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததை ஒரு பத்திரிகை மூலம் சொல்லித் தர முடியுமா? எழுத்தே குறைபாடுகள் கொண்டது. புனைகதைகள் இந்தக் குறைபாட்டைக் கொண்டு தான் வளர்ந்திருக்கின்றன. மகாபாரதக் கதைகள் எவ்வளவு பட்டிமன்றங்களுக்குப் பொருளாக இருந்திருக்கின்றன? ராமாயணம் எவ்வளவு விரிவுரைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது?
வாலியை நேருக்கு நேர் சந்தித்துப் போரிட முடியாது. அவன் கண்ணில் விழுந்த அக்கணமே எதிரியின் ஆற்றலில் பாதி வாலியைச் சென்றடைந்து விடும். ஆனால் வாலி சுயமாகவே மிகுந்த பலசாலி. ராவணனைப் பிடித்து அங்கதன் தொட்டில் மேல் ‘பத்து தலைப் பூச்சி’ என்று விளையாட்டுப் பொருளாகத் தொங்க விடக் கூடியவன்.
அவனை வதம் செய்தேயாக வேண்டும் என்றால் நேருக்கு நேர் யுத்தம் சாத்தியமில்லை. எவ்வளவு சிக்கலான சூழ்நிலை? பாரதத்தில் பீஷ்மர் வதமும் அப்படித்தான். சிகண்டி பீஷ்மரைக் கொல்லவில்லை என்றால் அம்பையின் தவம் வீணானதாகி விடும். ஓர் இதிகாசத்தைப் புரிந்து கொள்வதிலேயே இவ்வளவு சிக்கல்கள் என்றால் முக்தித் தத்துவம் எவ்வளவு கடினமானது?
சமூகம் சிலரையே நிபுணர்களாகக் கருதுகிறது. அந்த நிபுணர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் ஆலோசனை கூறும்போது எனக்குக் கவலையே தோன்றுகிறது. மிக எளிய மருத்துவக் குறிப்புகள் கூட அச்சம் தருகின்றன.
படிக்க...இந்தப் பகுதி வந்ததிலிருந்து நெருங்கிய நண்பர் முதல், என்னைத் துச்சமாகக் கருதுபவர்கள் வரை, அவர்கள் நூல்களைச் சிலாகித்து எழுத வற்புறுத்துகிறார்கள். நம்பகத்தன்மை என்று ஒன்று இருக்கிறது. நான் மட்டுமே பாராட்டினால் போதுமா? வெறும் புகழ்ச்சி நம்பகத்தன்மை இல்லாதது.அறுபது ஆண்டுகள் முன்பு தற்கொலை செய்துகொண்டு இறந்தவர், ‘‘என்னை ஏன் இன்னும் அதிகம் புகழவில்லை?’’ என்று கேட்க மாட்டார்.
அவர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. பிரசுரம் ஆவதற்கும், தான் எப்போதும் பத்திரிகைச் செய்தியாக இருப்பதற்கும் அவர் நிறையவே தந்திரங்கள் செய்திருக்கிறார். ஆனால் அவர் படைப்புகளில் ஒரு துளியளவு சமரசமும் கிடையாது. அவருடைய ‘தி ஸன் ஆல்ஸோ ரைசஸ்’ (கதிரவனும் உதிக்கிறான்) நாவல் இருநூறு பக்கங்கள்தான் இருக்கும். அதற்குள் எவ்வளவு விஷயங்களைப் புலப்படுத்தி விட்டிருக்கிறார்? இந்தச் சொற் சிக்கனத்தை நானறிந்து வேறு எந்தப் படைப்பாளியிடமும் கண்டதில்லை.
(பாதை நீளும்...)
அசோகமித்திரன்