தமிழ் ஸ்டுடியோ 24 அருண்
வஞ்சிக்கப்பட்ட இனத்தின் எதிரொலி...
‘ஈழ இறுதி யுத்தத்தில் 1,46,679 பேர் காணாமல் போயிருப்பதாக மன்னார் ஆயர் இராசப்பு ஜோசப்பு குறிப்பிடுகின்றார். இறுதி யுத்தத்தில் காணாமற்போனவர்களும் கொல்லப்பட்டவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்கலாம் என்று கருதப்படுகிறது. மன்னார் ஆயர் குறிப்பிடும் தரவு சரியென்றே கூறப்படுகின்றது. ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில், இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றது.
1000 சிறுவர்களை மாத்திரம் காணவில்லை என்று யு.என்.சி.ஆர் குறிப்பிட்டது. காணாமற்போனவர்கள் தொடர்பில் 8000 முறைப்பாடுகள் கிடைத்ததாக இலங்கை அரசின் காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக் குழு தெரிவித்தது. ஐ.சி.ஆர்.சி வெளியிட்ட அறிக்கையில்,
‘போருக்குப் பின்னரான காலகட்டத்தில் 15,780 பேர் காணாமற் போயுள்ளதாகவும் அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் பற்றி சரியாக மதிப்பிடப்பட்ட தகவல்கள் இல்லை. ஆனால், அது பெரும் எண்ணிக்கையானது என்றே கூறப்படுகிறது’ - வலம்புரி நாளிதழ்.
மேலே உள்ள எண்களை வெறுமனே எண்களாக பாவிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அந்த எண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு இனத்தின் வலியை, ஒரு இன அழிப்பை நாம் கண்டுணர வேண்டும்.
ஒடுக்கும் இனத்தை விட, ஒடுக்கப்படும் இனம் மீண்டும் மிக வலிமையுடன் தனக்கான இருப்பைக் கண்டடையும். அத்தகைய நம்பிக்கையின் வழிதான் ஒடுக்கப்பட்ட இனத்தின் சந்ததிகள் பயணம் செய்துகொண்டிருப்பார்கள். அதில் சிலர் படைப்பு ரீதியாக தங்கள் வலியையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்வார்கள். அப்படி ஒரு பதிவுதான் தமிழியம் சுபாஷின் ‘வன்னி எலி’ குறும்படம்.
வவுனியா காடுகளிலிருந்து ஒரு ஜோடி எலிகள், அங்கிருக்கும் முள் வேலிகளால் சூழப்பட்ட ‘மானிக் ஃபார்ம்’ முகாமிற்குள் புகுந்துவிடுகின்றன. மூன்று லட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த வதை முகாமின் திரைமறைவில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தின் ஊடாக எலிகள் ஒன்றை ஒன்று தேடி அடையவும், அங்கிருந்து தப்பி விடவும் முயற்சி செய்கின்றன. எலிகள் நகர்ன்றன.
திரைமறைவில் ஒவ்வொரு சம்பவமாக பதிவாகிறது. முதலில் ஒரு குழந்தை தன் அம்மாவிடம் ‘பசிக்கிறது’ என்று உணவு கேட்கிறது. ‘‘நாளை காலை 9 மணிக்குத்தான் நமக்கு உணவு கிடைக்கும். அதுவரை பொறுத்திரு மகளே’’ என்று தாய் பதிலளிக்கிறாள். இன்னொரு இடத்தில் ஒரு குழந்தை சிங்கள மொழியில் இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடுகிறது. பிறிதொரு குடிலில் ஒருவர் இறைவனை வேண்டி நிற்கிறார். அதையும் தாண்டி எலிகள் நகர்கின்றன. ‘‘நீ போராளிக் கூட்டத்தைச் சேர்ந்தவன்தானே’’ என்று கேட்டு ஒருவனை ராணுவத்தினர் சித்திரவதை செய்கிறார்கள்.
இறுதியாக ஒரு பெண்ணை ராணுவத்தினர் கூட்டமாக வன்புணர்வு செய்கின்றனர். அவள் கதறுகிறாள். அவள் கதறும் சப்தம் அடங்குவதற்குள்ளாக ராணுவத்தினரின் தோட்டா அவள் மீது பாய்கிறது. இப்போதும் எலிகள் நகர்ந்ததா? குறைந்தபட்சம் எலிகளாவது அந்த வதை முகாமிலிருந்து தப்பித்தனவா, இல்லையா என்பதை இந்த ‘வன்னி எலி’ அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
எலிகளை பின்புலமாக, அல்லது ஒரு கதாபாத்திரமாக முன்வைத்து பல்வேறு சிறுகதைகளும், திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. அசோகமித்திரனின் ‘எலி’ சிறுகதையும், இலங்கையைச் சேர்ந்த உமா வரதராஜனின் ‘எலியம்’ சிறுகதையும் இருவேறு பரிமாணங்களில் எலியை சித்தரிக்கின்றன. அசோகமித்திரனின் எலி இறுதியாக அதன் மீது பரிவு கொள்ள வைக்கிறது. உமா வரதராஜனின் கதையில் வரும் எலி, அழிக்க முடியாத ஒரு படிமமாக உருவகம் பெறுகிறது.
ஆனால் உமா வரதராஜனின் எலி வெறுமனே எலியாக மட்டுமன்றி, இருவேறு நிலைப்பாடுகள் கொண்ட, கலாச்சார ரீதியாக, மொழி சார்ந்த பிரிவினை கொண்டவர்களின் படிமமாகவும் விளங்குகிறது. அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘எலிப்பத்தாயம்’, நாதன் லேன் - லீ இவான்ஸ் நடிப்பில் வெளியாகி மிகப் புகழ்பெற்ற திரைப்படமான ‘மவுஸ் ஹன்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் எலியை ஒரு கதாபாத்திரமாக உருவகித்து, எலிக்கும் மனிதனுக்குமான இருத்தலியல் போராட்டம் பற்றி ஒரு விவாதத்தை ஏற்படுத்த விழைகின்றன.
சுபாஷின் ‘வன்னி எலி’ குறும்படம், எலிகள் என்கிற பிம்பத்தின் வழியே கடந்து செல்லும் காட்சிகள் மூலம், ஒரு இனம் எப்படியெல்லாம் அழித்தொழிக்கப்பட்டது என்பதை விளக்குகிறது. ஒரு காட்சியில் இலங்கையின் தேசிய கீதத்தை சிறுமி ஒருத்தி பாடிக்கொண்டிருப்பாள். தமிழர்கள் மீதான மொழித் திணிப்பையும், மொழி அரசியலையும் எவ்வித விளக்கமும் இன்றி இந்தக் காட்சியில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எலிகள் சில நேரங்களில் வெளிச்சத்திலும், சில நேரங்களில் இருட்டிலும் மாறி மாறிப் பயணிக்கின்றன.
ஒரு காட்சியில், ‘‘இறைவா! என்னையும், எம்முடைய கூட்டத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். இஸ்ரேலிய சமூகத்தை அடிமைத் தனத்திலிருந்து காப்பாற்றி ரட்சித்த நீர் எம்மையும் ரட்சிப்பீராக’’ என்று ஒருவர் பிரார்த்திக்கிறார். அதற்கு முன்புவரை மிக சாதாரண முகம் காட்டும் அந்த வதை முகாமில், அதன்பின்னர் நடக்கும் வன்முறைகள் மனிதகுலத்தையே அதிர்ச்சியுறச் செய்கிறது.
ஒருவனை அடித்துத் துன்புறுத்தி அவன் காலை உடைக்கிறார்கள். ஒரு பெண்ணை வன்புணர்வு செய்து கொல்கிறார்கள். இறைமை மீதும், இறைவன் என்கிற பிம்பம் மீதும் இருக்கும் இருண்மையை, மனித வாழ்விற்கும் இறைவன் என்கிற சொல்லுக்குமான இடைவெளியை உணர்த்தும் விதமாகவே இந்த இடைநிலைக் காட்சி இருக்கிறது.
இந்த குறும்படம் முழுக்கவே எலிகள் காய்ந்த சருகுகளின் வழியாகவும், உடைந்துபோன மரக்கொம்புகளின் வழியாகவும், முள் வேலிகளுக்கு இடையிலும் பயணம் செய்கின்றன. வதை முகாம் எப்படியான இடத்தில் இருக்கிறது, அங்கு எவ்விதமான வசதி வாய்ப்புகள் அம்மக்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாகவே இந்த லேண்ட்ஸ்கேப் காட்சி இருக்கிறது. ஆரம்பத்தில் எலியை குறுகுறுப்பாக பின்தொடரும் பார்வையாளன், இறுதியில் ரத்தம் தோய்ந்த நினைவுகளால் பீடிக்கப்பட்டு, மீளாத் துயரத்தில் உறைந்து போகிறான்.
முழுக்க முழுக்க எலிகளின் பார்வையில், அதன் பயணத்தில் பார்வையாளனை ஒன்றச் செய்கிறது படம். எலிகள் நகரும் அதே வேகத்தில் கேமரா நகர்கிறது. எலிகளின் பார்வைக் கோணத்திற்கேற்ப சில சமயங்களில் கேமரா கோணம் மாறுகிறது. பசி, அடி, உதை, வன்புணர்வு, கொலை என பல சம்பவங்களினூடாக நகரும் எலிகள், அதுகுறித்தெல்லாம் கவலை கொள்வதற்கு மாறாக, அங்கிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்கிற துடிப்பிலேயே ஓடுகின்றன.
எலியையும் இந்த வதைமுகாமின் ஒரு பாத்திரமாகவே சித்தரித்திருக்கிறார்கள். முகாமிற்குள் கூட்டி வரப்படும் மனிதர்களின் பெயர்களைத் தாளில் பதியும்போது, அதில் அரசாங்க முத்திரை பதிப்பார்கள். அதே போன்றதொரு முத்திரையை ‘வன்னி எலி’ என்கிற தலைப்பை திரையில் போடும்போதும் பதிக்கிறார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, எலிகளும் வதை முகாமிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைத்தான் இக்குறும்படம் இறுதியாக நமக்குச் சொல்கிறது.
2009ம் ஆண்டு மே 18ம் தேதி ஏற்பட்ட பேரழிவினைக் கண்டு, வதை முகாமிற்குள் நடக்கும் சம்பவங்களை திரைமறைவிற்குள்ளேயே சொல்ல யத்தனித்திருக்கிறார் சுபாஷ். புலம்பெயர்ந்த தமிழரான சுபாஷ், தன்னுடைய 13 வயதில் ஐரோப்பா சென்றிருக்கிறார். தற்போது அங்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்திவரும் சுபாஷ், தன் இனத்துக்காகக் கொடுத்த கலகக்குரல்தான் ‘வன்னி எலி’.
சர்வதேச அளவில் விருதுகளை வென்ற முதல் ஈழத் தமிழ் குறும்படம் இதுதான். இந்த குறும்படம் குறித்தும், இது பேசும் அரசியல் குறித்தும் பாலு மகேந்திரா பதிவு செய்த வார்த்தைகளும் பாராட்டுகளும் மிக முக்கியமானவை. ‘‘விருதுகளைத் தாண்டி, மனித மனங்களின் மௌனத்தைக் கலைக்கவே இந்தக் குறும்படத்தை எடுத்தேன்’’ என்கிறார் சுபாஷ்.
(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி