கவிதைக்காரர்கள் வீதி



வண்ண மீன்கள்


கண்ணாடித் தொட்டி
வண்ண மீன்கள்
அருளப்பட்டவை
அவற்றை இலக்கு வைத்து
தூண்டிலோ, வலையோ வருவதில்லை!
கொக்கு, நாரைகள்
அவற்றுக்காகக் காத்திருப்பதில்லை!

அழகிப் போட்டி
நங்கையர்கள் போல
குறுக்கும் நெடுக்கும் உலா வரும்
அவற்றை வறுக்கும் ஆசை
வளர்ப்போருக்கு வருவதில்லை!

தினமும் ஒரே சுவையிலான
உணவு என்றபோதிலும்
நேரம் தவறாமல்
தேடி வந்துவிடுவதால்
வயிற்றைப் பசி கிள்ளுவதில்லை!

வறட்சி, பெருக்கு இரண்டுமற்ற
குறுக்கப்பட்ட அவற்றின்
மத்திம உலகம்
விழுந்து உடைந்திடாதபடி
வைக்கப்படுவதால்
பாதுகாப்பிற்கு பங்கமில்லை!

அறை முழுக்க
நீந்தி வரும் உணர்வை
கண்ணாடிச் சுவர்கள் தருவதால்
சுதந்திரம் குறித்த வருத்தமும்
இல்லை!
கூழாங்கற்களும்
செயற்கை நீர்த்தாவரங்களும்

உருண்டு உருண்டு
உள்ளுக்குள் வரும் காற்றும்
தமது கடல் சிறியது
என்ற கவலையை
அவற்றுக்குத் தருவதில்லை.

ரசனைக் கண்கள்
பகட்டைக் காட்டும் தாகம்
வாஸ்து நம்பிக்கை
நம்மிடம் உள்ளவரை
கண்ணாடித் தொட்டி
வண்ண மீன்களின் வாழ்வில்
குறையொன்றுமில்லை!

வீ.விஷ்ணுகுமார்