உங்கள் பாஸ் எப்படி பாஸ்?



டீக்கடை பையன், கூரியர் பாயை எல்லாம் நம்ம ஆட்கள் ‘பாஸ்’ என்றழைக்க காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? எல்லாம் தங்கள் பாஸ் மீது உள்ள கடுப்புதான்! ‘எங்க பாஸ் சரியில்ல’, ‘பாஸ் டார்ச்சர் தாங்கல’ என பிரேக் நேரத்தில் ‘புகையாத’ கேன்டீன்களே இல்லை எனலாம்!

அடிக்கடி வேலை மாறுவதற்கும், வேலையை விட்டுவிட்டு சும்மா அலைவதற்கும், ‘இந்த ஃபீல்டே வேணாம்’ என முழுக்குப் போட்டு ஒதுங்குவதற்கும் கூட, இந்த ‘பாஸ் சரியில்லை’, காரணமாகச் சொல்லப்படுகிறது.

வேலையை விட்டு விலகியவர்கள் மத்தியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், ‘மேலதிகாரியுடன் மனக்கசப்பே வேலையை விடுவதற்குக் காரணம்’ என பாதிப் பேர் சொல்லியிருக்கிறார்கள். ‘சம்பளம் குறைவா இருந்தாலும் பரவாயில்லை. அனுசரித்துப் போகும் மேலதிகாரி வேண்டும்’ என்பது பலரது சாய்ஸ். ஆனால், நிஜமாகவே தப்பு மேலதிகாரிகள் மீதுதானா? ஆனானப்பட்ட மனைவிகளையே புரிந்து கொள்கிறோம்... மேலதிகாரிகளைப் புரிந்து கொள்ள முடியாதா? இதோ சில புரிஞ்சுஃபை டிப்ஸ்...

* வில்லனுக்கு வில்லன் மாதிரி உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மேலதிகாரி இருப்பார் என்பதை மறவாதீர்கள். ஹாலிவுட் ஏலியன் மிருகத்தைப் போல அந்த மேலுக்கு மேலதிகாரி குதறிப் பிறாண்டும் டைப்பாக இருக்கலாம். அவர் நெருப்பாகத் தகித்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு உங்களுக்கு வெளிச்சத்தை மட்டுமே கொடுக்கும் பெட்ரோமாக்ஸ் மேண்டில்தான் உங்கள் மேலதிகாரி. ‘இதுல எப்படிண்ணே வெளிச்சம் வரும்’ என அவசரக் குடுக்கையாய் நீங்கள் அவரை உடைத்து விட்டால், கை சுடுவது நிச்சயம்!

* தீர விசாரிப்பதே மெய். உண்மைதான். ஆனால், அரைகுறையாக விசாரிப்பது, தலையணையில் வடிகட்டின பொய்யாக இருக்கும். ‘இந்தாளு விசாக்ல இருந்தாரு... விருதுநகர் ஊரு... விரால் மீன் பிடிக்கும்’ என ரைமிங்காக கேள்விப்படும் தகவல்களை வைத்து ஒரு முடிவுக்கு வராதீர்கள். அப்புறம், ‘இவரைப் போய் அப்படி நினைச்சேனே’ என்றெல்லாம் மானிட்டரில் முட்ட வேண்டி வரும்.

* உங்கள் பாஸ்தான் நிறுவனத்தின் மெயின் வண்டி மாடு. அவர் ஒரு வாகாக வண்டியை இழுக்கும்போது, நீங்கள் அப்படியே பேக் அடிக்கவோ பக்கவாட்டில் திருப்பவோ நினைத்தால் அவர் உங்களை முட்டுவார். அவர் போகும் திசையிலேயே அவரோடு தோள் கொடுத்து ஐலேசா போட்டால், நிச்சயம் அந்தப் பணியாளனை எந்த மேலதிகாரிக்கும் பிடிக்கும். மொத்தத்தில் ‘நீங்கள் இருவருமே மாடுகள்தான்... சாட்டையை சொடுக்கும் முதலாளி அல்ல’ என்பதைப் புரிந்துகொண்டாலே பெரும்பாலான பிரச்னைகள், கன்ட்ரோல்... ஆல்ட்... டெலிட்!

* ‘இது சரியில்ல... இது வேணாம்... நல்லா இல்ல...’ என ட்விட்டரில் சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவது போல சிலபேர் பாஸிடம் பேசி வாங்கிக் கட்டுவார்கள். தன் மேலதிகாரிகள் பேசுவது மாதிரியே கீழே வேலை பார்ப்பவர்களும் பேசினால் யாருக்குத்தான் கோபம் வராது? அவர் எடுக்கும் முடிவில் தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதற்கு பதில் என்ன செய்யலாம் என்ற யோசனையைத்தான் முதலில் சொல்ல வேண்டும். அவர் ஐடியாவை ரிஜெக்ட் பண்ணும் இடத்தில் நீங்கள் இல்லை.

* ‘இன்னுமா முடியலை... சீக்கிரம்’ என தீபாவளி நேர டெய்லர் கடை மாதிரி விரட்டுவது எல்லா பாஸ்களுக்கும் பொதுக்குணம். இதற்காக ‘புஸ்’ என்று காற்றுப் போவது, ‘உஸ்’ என்று சீறுவது இரண்டுமே தவறு. அந்த நேரத்துக்குள் முடிக்கவே முடியாத வேலையாக இருந்தாலும் ‘முடிச்சுக் காட்டுறேன்’ என்று இறங்கு வதுதான் உங்கள் திறமையை நிரூபிக்கும் சான்ஸ்.

அன்றாடம் எரிந்து விழுந்தாலும், குறித்த நேரத்தில் வேலையைத் திறம்பட முடிக்கும் பணியாளனைப் பார்த்து ‘இவனுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்’ என மேலதிகாரி ரகசியமாய் ஃபீல் பண்ணுவது நிச்சயம்.

ஆரம்ப நிலையில் இருக்கும் பணியாளர்கள், தங்கள் பாஸிடம் தமிழிலும் பேசக் கூடாது; ஆங்கிலத்திலும் பேசக் கூடாது. வேலையால் பேச வேண்டும். ‘நீங்க சொன்ன மாதிரி செஞ்சா, வௌங்காது’ என விவாதம் பண்ணாமல், உங்கள் ஸ்டைலில் அதை முடித்துக் கொடுத்துவிட்டு, ‘எப்படிச் செய்தேன்’ என விளக்குவதே விவரமானவன் பேச்சு.

* சில பேர் பாஸ் அணியும் அதே பிராண்ட் சட்டையைத் தேடியெடுத்துப் போட்டு, பார்வையிலேயே ‘சேம் பின்ச்’ சொல்வார்கள். அவர் வைத்திருக்கும் அதே மாடல் வண்டி, பயன்படுத்தும் பர்ஃப்யூம் என எல்லாவற்றிலும் அவரை ஃபாலோ பண்ணி இம்ப்ரஸ் வலை வீசுவார்கள்.

ஆனால், பெரும்பாலான மேலதிகாரிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் தெரியுமா? ‘நாம இதையெல்லாம் அனுபவிக்க எவ்வளவு தண்ணி குடிச்சு, தண்டால் அடிச்சு, தயிர் சாதம் தின்னிருப்போம்... பய புள்ள வந்த உடனே வாழுது பார்’. ஸோ, உங்கள் பாஸை ட்விட்டரில் தவிர வேறெதிலும் ஃபாலோ பண்ண வேண்டாம்!

* நேரடியாய், ‘டேய் மடையா’ என்று நீங்கள் கூப்பிட்டால் கூட, அது மறந்து போகலாம். ஆனால், சக ‘நண்பர்’களிடம், பாஸ் பற்றி, ‘ப்ச்’ என உச்சுக் கொட்டினால் போதும், நீங்கள் தேளாகக் கொட்டியது மாதிரி அது அவர் காதுக்குப் போகும். ஆக, நோ மோர் புலம்பிங்ஸ்!லதிகாரியின் குடும்பப் பின்னணி பற்றித் தெரியாமல், உங்கள் குடும்பப் பெருமைகளை லிஸ்ட் போடாதீர்கள்.

 நேற்றுதான் டைவர்ஸ் வாங்கி விட்டு வந்து அமர்ந்திருப்பவரிடம் ‘என் பொண்டாட்டி சமைப்பா பாருங்க...’ என்பதும், தறுதலை பிள்ளையோடு தள்ளுமுள்ளு பண்ணிவிட்டு வந்தவரிடம், ‘என் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட்’ என்பதும் அப்போதைக்கு ஒன்றும் செய்யாது. ஆனால், பிற்கால எரிந்து விழலுக்கு நிச்சயம் காரணமாகும். ஸோ, பர்ஸையும் பர்சனலையும் ஆபீஸில் ஓப்பன் பண்ணாதீர்கள்!

* முந்தைய மேலதிகாரி தோளில் கை போட்டு பார்ட்டிக்குக் கூப்பிட்டார் என்பதற்காக, புதிதாக வருபவரிடமும் அதையே எதிர்பார்க்கக் கூடாது. கை போடுவதும் கால் போடுவதும் கணக்குப் போடுவதும் நபருக்கு நபர் மாறும்.

நிச்சயம் உங்களை விட அதிகம் வேலை பார்த்து, அதிகம் ஓ.பி அடித்து, அதிகம் பொய் சொல்லித்தான் பாஸ் எனும் இடத்துக்கு உங்கள் மேலதிகாரி வந்திருப்பார். அவரிடம் திறமையாகப் பொய் சொல்லி சமாளித்து விட்டதாக எப்போதும் நினைக்க வேண்டாம். ‘உன்னை மாதிரி எத்தனை அப்பாடக்கர்களைப் பார்த்திருக்கேன்டா... நொண்ணைகளா’ என்று அவர் சத்தமே இல்லாமல் உங்களைத் தன் நம்பக லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிடலாம். ஜாக்கிரதை!

* எல்லாவற்றுக்கும் மேலாக, ‘என்னை என் பாஸ் புரிஞ்சுக்கலை’ என நகம் கடிக்காமல், பாஸைப் புரிந்துகொண்டு வாழ்க்கை டெஸ்ட்டில் பாஸாகப் பாருங்கள். ஏனெனில், ‘பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்’ பாஸ்!
    
*எஸ்.ராமன்