மணியம் செல்வன்
“என் குருநாதரை இழந்து தவிக்கிறேன்’’ என பிரபல இந்தி நடிகர் அனில் கபூர் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார். தெலுங்கு திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. எழுத்தாளர்கள், ஓவியர்கள் பலரும் துக்கத்தில் மூழ்கியிருக்கிறார்கள். காரணம், கடந்த வாரம் சென்னையில் தனது 80வது வயதில் மறைந்த பாபு. திரைப்பட இயக்குனர், ஓவியர், கார்ட்டூனிஸ்ட் என பல முகங்கள் கொண்டவர்.
இந்தியிலும் தெலுங்கிலும் 52 படங்களை இயக்கியவர்... பிரபல நடிகர்களை வைத்து படமெடுத்தபோதும் ஆழமான கதையையே நம்பியவர்... மூன்று தேசிய விருதுகளும் மூன்று மாநில விருதுகளும் பெற்றவர். தனது சினிமா அடையாளத்தைத் தாண்டி ஓவியனாகவே நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்பட்டார்.
பாபுவின் ஓவியத்தால் ஈர்க்கப்படாதவர்களே இல்லை என்று சொல்லலாம். தெலுங்கு பத்திரிகைத் துறை, திரைப்படத்துறை, கலைத்துறை, ஓவியத்துறை, வாசக ரசிகர்கள் என இந்தப் பட்டியலில் ஏராளமானவர்கள் உண்டு. சத்திராஜு லக்ஷ்மிநாராயணா என்பது இவரின் இயற்பெயர். சிறு வயதிலேயே ஓவியத்தில் ஆர்வம்.
‘‘நீ கவனத்துடன் படித்து முன்னேறிய பிறகு ஓவியம் வரையலாம்’’ என்று தந்தை கண்டிப்புடன் கூற, அதனை மறுக்காமல் சட்டத்தில் பட்டம் பெற்றார். பட்டம் வாங்கிய பிறகே ஓவியத்தில் முழு கவனம் செலுத்தியதாக பாபு என்னிடம் ஒருமுறை கூறியுள்ளார். படித்த துறைக்குச் செல்லாமல் தனக்கு விருப்பமான துறைக்கே வந்ததற்கு, அவர் உள்ளிருக்கும் ஓவிய ஆர்வமே காரணமாக இருந்திருக்கும்.
நான் ஓவியக்கல்லூரியில் 1968ல் ஓவியம் பயின்ற காலம் முதற்கொண்டே இவரின் ஓவியங்கள் என்னை ஈர்த்துள்ளன. லலிதம், காதல், தெய்வீகம், கவிதை, புதுமை எல்லாமே ததும்பும் அழகோவியங்கள். கோட்டோவியத்திலும் வண்ண ஓவியத்திலும் அவரது நேர்த்தியான காட்சி அமைப்புத் திறமையை நாம் காண முடியும். அவரது பல ஓவியங்கள் என்னுடைய ஓவிய ஆர்வத்திற்கு உந்துதல்களாக அமைந்திருக்கின்றன.
அவருக்கு குரு, ஓவிய பிதாமகர் கோபுலு. அவரை பாபு, ‘குருகாரு’ என்றே கூறுவார். அந்த குரு சிஷ்ய பந்தம் என்னை பலமுறை நெகிழ வைத்துள்ளது. திறமையும் புகழ் வட்டமும் அவரை கர்வப்பட வைத்ததில்லை. யாரிடமும் இயல்பாக, மனித நேயத்துடன் பழகுவார். அவரின் சாதனைகள் ஓவிய உலகத்திற்கு என்றும் அழியாப் புகழ் தந்தவை.
பத்திரிகை ஓவியங்கள், கார்ட்டூன், வாழ்த்து அட்டைகள், சினிமா விளம்பரம் என அவர் தூரிகை தொடாத இடங்கள் இல்லை. ராமாயணம் அவரது மனம் கவர்ந்த காவியம். ஓவியங்களிலும் சினிமாவிலும் அதை பலவிதங்களாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது, அவர் மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்த அந்த ஹாலில் ஓவிய படைப்புக்களும் விருதுகளும் சூழ்ந்திருக்க, அவரின் அருகாமையிலேயே கார்ட்டூனிஸ்ட் கேசவ், சுரேந்தர், நரசிம் ஆகியோருடன் அவரின் ஓவிய சகாப்தம் பற்றி பரிமாறிக் கொண்டேன்.
இதற்கு முன்பு அவரை பலமுறை அந்த இடத்திலேயே சந்தித்தது போல இன்றும் அவருடனேயே எல்லோருமாக கலந்து உரையாடியது போல அந்த அனுபவம் என்னுள் எழுந்தது. அந்த ‘மஹானுபாவ’ அவர்களுக்கு எங்களின் ஓவிய அஞ்சலியைச் செலுத்தினோம்.