வாரன்டி...கேரன்டி...



இந்த கிரைண்டருக்கு ஆறு மாசம் கேரன்டி கொடுத்தீங்கல்ல... மூணே மாசத்துல மோட்டார் போயிடுச்சு!’’  நண்பர் ஒருவர் கடைக்காரரிடம் முறையிட்டிருக்கிறார். ‘‘சார்! நாங்க சொன்ன கேரன்டியைத்தான் நீங்க கவனிச்சிருக்கீங்க. இந்தப் பொருளை எப்படிப் பயன்படுத்தணும்னு சொன்னோமே கவனிக்கலையா? வோல்டேஜ் ஃப்ளக்சுவேஷன்ல ஓட விட்டதாலதான் போயிடுச்சு. இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?’’  கறாராக கை விரித்து விட்டது நிறுவனம்.

கடைசியாக அவர்கள் சொன்ன வார்த்தை... ‘‘இலவசமா இதை ரிப்பேர் பண்ணித் தர நாங்க என்ன வாரன்டியா கொடுத்திருக்கோம்? ‘ஒழுங்கா யூஸ் பண்ணினா ஒண்ணும் ஆகாது’ங்கறது எங்க கேரன்டி. நீங்க அசட்டையா இருந்துட்டு எங்களை வந்து கேட்டா எப்படி?’’ ‘‘அப்போ கேரன்டியும் வாரன்டியும் ஒண்ணு இல்லையா?’’ அப்பாவியாய் கேட்ட நண்பருக்காக விசாரிக்கக் கிளம்பினோம்...

‘‘டிக்ஷனரியில் உள்ளபடி, இரண்டு சொல்லும் ஒரே அர்த்தத்தைத் தந்தாலும் நடைமுறை வாழ்வில் இரண்டுக்குமான வித்தியாசங்கள் நிறைய’’ எனத் துவங்கினார் சென்னையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகரான ஷ்யாம் சுந்தர். அவர் பகிர்ந்த கருத்துப்படி, கேரன்டி  வாரன்டி: சில குறிப்புகள்...

*கேரன்டி...

கேரன்டி என்பது ஒரு நிறுவனமோ, கடையோ, வாடிக்கையாளர்களுக்குத் தரும் வாக்குறுதி. ‘எங்கள் பொருள் இவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பே இல்லை’ எனும் வாய்மொழி வார்த்தை, அவ்வளவுதான்! இதற்காக கேரன்டி கார்டெல்லாம் கூட கொடுப்பார்கள். ஆனாலும், இது நூறு சதவீதம் சட்ட பூர்வமானதென்று சொல்ல முடியாது.

 சொன்னபடி தங்கள் தயாரிப்பு வேலை செய்யவில்லை என்றால், அதை சரி செய்து கொடுப்பதும், வேறு பொருளை மாற்றிக் கொடுப்பதும் அந்தந்த நிறுவனத்தின் நாணயத்தைப் பொறுத்தது. ‘நீங்கள் பயன்படுத்திய விதம் சரியில்லை’ என்று அவர்கள் தட்டிக் கழிக்கவும் வாய்ப்பு உண்டு.

*வாரன்டி...

இது சட்டபூர்வமானது. கிட்டத்தட்ட இன்சூரன்ஸ் போன்றது. ‘குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்துக்குள் இந்தப் பொருளுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு நான் பொறுப்பு’ என கம்பெனியே நமக்கு கையெழுத்திட்டுத் தருவதுதான் வாரன்டி. அந்தக் காலக்கெடுவுக்குள் பொருட்கள் கெட்டுப் போனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சட்டையைப் பிடிக்க நமக்கு உரிமை உண்டு. சட்டமும் அதற்குத் துணை நிற்கும். வாரன்டி பலன்களைப் பெற, பொருள் வாங்கிய பில்லையும் வாரன்டி கார்டையும் பத்திரமாக வைத்திருப்பது மிக முக்கியம்!

*ரீப்ளேஸ் வாரன்டி

நீங்கள் வாங்கிய பொருளில் குறிப்பிட்ட வாரன்டி காலத்துக்குள் பிரச்னை வந்தால், அதை ரிப்பேர் செய்து, காலம் தாழ்த்தாமல், புத்தம் புதிய பாகங்களை இலவசமாக மாற்றிக் கொடுத்து விடுவார்கள். மொத்தமுள்ள வாரன்டி காலக் கெடுவில் முதல் சில மாதங்களுக்கு மட்டும் இந்த ரீப்ளேஸ் வாரன்டி கொடுக்கப்படுவதுண்டு.

*ஆன் சைட் வாரன்டி  ஆஃப் சைட் வாரன்டி


பழுதடைந்த பொருள் இருக்கும் இடத்துக்கே வந்து சர்வீஸ் செய்து கொடுப்பது ஆன்சைட் வாரன்டி. சர்வீஸ் சென்டருக்கு நாம் எடுத்துக்கொண்டு போக வேண்டியிருப்பது, ஆஃப் சைட் வாரன்டி. இப்போது சில பொருட்களில் மொத்தம் மூன்று ஆண்டு வாரன்டி என்றால், ஓராண்டு ஆன் சைட்டும் இரண்டு ஆண்டுகள் ஆஃப் சைட்டும் தருகிறார்கள்.

*எக்ஸ்டெண்டட் வாரன்டி...

இது நீட்டிக்கப்பட்ட வாரன்டி. அதாவது, கம்பெனியால் இயல்பாகத் தரப்படும் வாரன்டி காலத்தைத் தாண்டிய பிறகும் நமது பொருட்களுக்கு இலவச சர்வீஸ் சேவையைப் பெறும் நடைமுறை இது. இதற்காக நம்மிடம் கூடுதல் தொகை பெற்றுக் கொள்வார்கள்.

*வாரன்டி கண்டிஷன்கள்


வாரன்டி காலத்துக்குள் பாதிப்பு ஏற்பட்டாலும் நிறுவனங்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க வாய்ப்பு உண்டு. இதற்குத்தான் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற நட்சத்திரக் குறியில் ட்விஸ்ட் வைக்கின்றன நிறுவனங்கள்.

பைக்குக்கு 5 வருடம் வாரன்டி எனப் பளிச்சிடும் விளம்பரத்தில் கண்ணுக்கே தெரியாமல், ‘இந்த வாரன்டி எஞ்சினுக்கு மட்டும். அதிலும் அதிக வெப்பத்தில் சீஸ் ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ எனப் போட்டிருப்பார்கள். பெரும்பாலும் பைக்கில் அத்தனை சீக்கிரம் எஞ்சின் பாதிப்பு வராது. வந்தாலும் சீஸ் ஆவதைத் தவிர வேறெதுவும் நிகழாது என்பதைத் தெரிந்து தரப்படும் விஷமமான விளம்பரம் இது.

ஆக, ‘இந்தப் பொருளுக்கு ஒரு வருஷம்தான் வாரன்டி... இந்தப் பொருளுக்கு ரெண்டு வருஷம் இருக்கு’ என வருடத்தை ஒப்பிடுவதை விட, அதில் இருக்கும் நிபந்தனைகளைப் படித்துப் பார்த்து பொருட்களை வாங்குவதே நல்லது. வெறும் கம்ப்ரஸருக்கு மட்டும் தரப்படும் 5 வருட வாரன்டியை விட, ஒட்டுமொத்த ஏ.சிக்கும் தரப்படும் 2 வருட வாரன்டியே சிறந்தது.

ஆன்லைனில் வாங்குகிறவர்கள், அந்தப் பொருளைப் பற்றிய விமர்சனங்களையும் படிக்க வேண்டும். சர்வீஸ் சென்டரே இல்லை, சர்வீஸ் எஞ்சினியர் நம்மை மதிப்பதில்லை என்கிற அதிமுக்கியத் தகவல்கள் அதில் தெரிந்துவிடும்.   Terms and Conditions பகுதியையும் ஒருமுறை முழுவதுமாகப் படித்து விடுவது நல்லது!

பேராச்சி கண்ணன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்