‘‘வணக்கம்மா... நான் மேலத் தெரு ராமசாமி மகன் குமார்! உங்க பொண்ணு லதாவை பொண்ணு பார்க்க நாளைக்கு வர்றதா சொல்லியிருந்தோம். காலையில அப்பா போய் விசாரிச்சார்... தரகர் சொன்ன மாதிரி உங்க பொண்ணு நர்ஸ் இல்லே, அட்டெண்டர்தான்னு அவங்க வேலை பார்க்குற ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்களாம். எங்க அப்பா சொல்லச் சொன்னார்...’’
வந்தவனை உட்காரச் சொன்ன கலா, ‘‘அதே மாதிரிதான் தம்பி... நேத்து என் வீட்டுக்காரர், நீங்க வேலை பார்க்குற ஹோட்டல்ல விசாரிச்சார். நீங்க கேஷியர் இல்ல... சர்வர்னு சொன்னாங்களாம்! இதை உங்க அப்பாகிட்டே சொல்லத்தான் என் வீட்டுக்காரர் போயிருக்கார்... அதோ அவரே வந்திட்டார். நீங்க பேசிக்கிட்டிருங்க, காபி கொண்டு வர்றேன்!’’
‘‘வாங்க! நீங்க இங்கே வந்திருக்கிறதா உங்க அப்பா சொன்னார். ரெண்டு பக்கமும் பொய்யைச் சொல்லி கமிஷன் அடிச்சிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரையும் மோத விடப் பார்த்திருக்கான் அந்தத் தரகன். நாளைக்குப் பெண் பார்க்கிற சம்பிரதாயம் வேண்டாம்னு உங்க அப்பா சொல்லிட்டார். அதுக்கு பதிலா, இப்பவே லதாவைப் பார்த்துட்டு உங்க சம்மதத்தைச் சொன்னா, நிச்சயதார்த்தத்துக்கு நாள் பார்க்கலாம்னு சொன்னார்.’’‘‘உங்க மகளுக்குச் சம்மதம்னா எனக்கும் சம்மதம்!’’ காபி அருந்தியவாறு சொல்லிவிட்டுக் கிளம்பினான் குமார்.
சத்யகிரிராஜன்