பேத்தியை ஸ்கூல் வேனில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தாள் மரகதம். மருமகள் உமா சமையலறையில் பரபரப்பாக இருந்தாள்.‘‘உமா, தினேஷுக்கு ஆபீஸ் போக லன்ச் எடுத்து வைக்கட்டுமாம்மா?’’‘‘அதெல்லாம் அப்பவே எடுத்து வச்சிட்டேன் அத்தே! நீங்க ஹால்ல உக்கார்ந்து டி.வி பாருங்க!’’
‘‘அதெப்படிம்மா..? வீடு பெருக்கி கூட்டாம கிடக்குது. நான் கூட்டுறேன்!’’ என துடைப்பத்தை கையில் எடுத்தாள் மரகதம். ‘‘மரகதம்... மரகதம்..!’’ வாசலில் எதிர்வீட்டு பொன்னம்மா. ‘‘வா பொன்னம்மா... கொஞ்சம் இரு, கை வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்!’’வீட்டைப் பெருக்கி முடித்து வியர்வையைத் துடைத்தபடியே பொன்னம்மா அருகில் உட்கார்ந்தாள் மரகதம்.
‘‘மரகதம்... உன் மகனும் மருமகளும் எப்பவுமே உன்னை ரெஸ்ட் எடுக்கத்தான் சொல்றாங்க. இந்த வயசுல, நீ ஏன் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யறே?’’ ஆறுதலாகக் கேட்டாள் பொன்னம்மா.
‘‘பொன்னம்மா... என்னதான் மகன் வீடுதான்னாலும் வீட்டுல உபயோகமா இருந்தாத்தான் நமக்கு மதிப்பு! இல்லேன்னா உபயோகமில்லாத பொருளை மூலையிலே வீசிடுற மாதிரி நிலைமை நமக்கும் வந்துடும். அப்படி ஒரு நிலைமை வந்தப்புறம் ‘அய்யோ அம்மா’ன்னா பிரயோஜனமில்ல!’’ இந்த நடைமுறை உண்மை, பொன்னம்மாவுக்கும் புரிந்தது.
கு.அருணாசலம்