அட்சய திருதியை தங்கத்தைப் பெருக்கும்...அட்சய திரிதியை வந்தாலே தங்கம்தான் டாக் ஆஃப் தி டவுன். இந்த ஒரு நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்றாலே தயங்கித் தயங்கித்தான் பர்ஸைத் திறக்கிறார்கள் கணவன்மார்கள். ஆனால், வருடம் முழுவதும் தினம் தினம் தங்கத்தை வாங்கி விழுங்குகிறவர்களும் இருக்கிறார்களே! அதாங்க... தங்க பஸ்பம்! சித்த மருத்துவத்தால் மருந்தாக முன்னிறுத்தப்படும் இந்த தங்க பஸ்பம் நிஜமாகவே தங்கமா? அது உண்ணக் கூடியதா? எதற்காக அதை உட்கொள்கிறார்கள்? இப்படிப் பல கேள்விகளோடு நிபுணர்களைச் சந்தித்தோம்....

‘‘தங்கம் என்பது மிக உயர்ந்ததொரு உலோகம். அதை பலவித நோய்களுக்கான மருந்தாகப் பார்த்தார்கள் சித்தர்கள். தங்கத்தை அப்படியே உட்கொள்ள முடியாது என்பதால், அதை நுண்துகளாக, பொடியாக, லேகியமாக மாற்றிக் கொடுத்தார்கள். அதுதான் தங்க பஸ்பம்!’’ என்கிறார் சித்த மருத்துவரும், இயற்கை மருத்துவருமான சிவராமன்.
‘‘தங்க பஸ்பம் என்றாலே ஏதோ செக்ஸ் ஊக்கியாக, ஆண்மை விருத்தி மருந்தாகப் பார்க்கிறார்கள் மக்கள். அது தவறு. தங்க பஸ்பத்தின் பல பயன்பாடுகளில் ஒன்றுதான், கருத்தரிப்பு தாமதமாகும் தம்பதிகளுக்குக் கொடுப்பது. அதுவும் தங்க பஸ்பம் கொடுப்பதற்கு முன் ஒருவரின் உடல்நிலை அதை ஏற்கும் அளவுக்கு உள்ளதா என அறிந்துதான் கொடுப்பார்கள். தங்கத்தை லேகியமாக மாற்றுவதற்கு உப்பிலாங் கொடி, மூங்கில் பட்டை எனப் பல வகையான மூலிகைகளை சித்தர்கள் பயன்படுத்தினார்கள்.
இன்று விளம்பரப்படுத்தப்படும் தங்க பஸ்ப லேகியங்கள் எல்லாம் சித்தர்களின் ரசவாத அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றனவா என்பதே கேள்விக்குறிதான். ஆனால், ஒரு விஷயம் சரியாக செய்யப்படவில்லை என்பதற்காக அந்த விஷயத்தையே தப்பென்று சொல்லக் கூடாது. பாரம்பரிய விஷயங்களை கொஞ்சமும் கெடுக்காமல் பின்பற்றும்போது நிச்சயம் பலன் கிடைக்கும்.
நவீன மருத்துவம் கூட ‘நானோ பார்ட்டிக்கிள்’ எனும் தங்க துகள்களைக் கொண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை தருவதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது. சில வகைப் புற்றுநோய்களுக்கு இப்போதே மருந்தாகவும் தங்கத்தைப் பயன்படுத்தி வருகிறது. நவீன மருத்துவத்தின் தொழில்நுட்பங்களையும், சித்த வைத்தியத்தின் பாரம்பரியமான மருத்துவ முறைகளையும் இணைத்து தங்க பஸ்பம் ஆராயப்பட்டால் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும்’’ என்கிறார் அவர்.
தேனியைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் டாக்டர் ரவிக்குமார் இந்த வாதங்களை ஏற்றுக் கொண்டாலும் சகட்டுமேனிக்குதங்கத்தை பொடியாக்கி உட்கொள்ளும் போக்கை எதிர்க்கிறார்...‘‘நம் உடலுக்குள் மிக சொற்ப அளவுகளில் பல வகை உலோகங்களும் இருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு, ஓர் ஆணின் உயிரணு தாதுக்களில் கூட ஒரு மில்லி கிராம் தங்கத்தில் மில்லியனில் ஒரு பங்கு இருக்கும். அதற்காக, மிக கனமான தங்கம் போன்ற உலோகத்தை சர்க்கரை மாதிரி பொடித்து சாப்பிட்டால் உடலுக்கு கேடுதான் வரும்’’ என்கிறார் அவர்.
‘‘தங்க பஸ்பம் என விற்கப்படும் லேகியங்களில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது... அது சாப்பிடும் நபருக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கிறது... எந்த அளவுக்கு ஆண்மை விருத்தி ஏற்படுத்தியிருக்கிறது என்பதெல்லாம் ஊர்ஜிதம் செய்யப்படாதவை. இயற்கையாக உடலுக்குள் இருக்கும் ஒரு சத்துக்கும் செயற்கையாய் செலுத்தப்படும் சத்துக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டுக்காக நாம் யாரும் இரும்புப் பொடியை உட்கொள்வதில்லை. நமது உணவில் உள்ள கழிவுகளை பிரித்து வெளியில் அனுப்பும் சிறுநீரகமும் கல்லீரலும் செயற்கையாகக் கொடுக்கப்படும் தங்கம் போன்ற உலோகங்களால் பாதிக்கப்படலாம்.
ஆங்கில மருத்துவத்தில்கூட ரூமடாயிட் ஆர்த்ரைட்டிஸ் எனும் ஒருவகை கீல்வாதத்துக்கு தங்கத்தை ஒரு மருந்துப் பொருளாக பயன்படுத்துகிறார்கள். அந்த மாத்திரைகளில் கூட பத்தாயிரம் மாத்திரைகளில் ஒரு மில்லி கிராம் தங்கம்தான் கலந்திருக்கும். அப்படி அறிவியல்பூர்வமாக நிரூபிக்காத வரை, ‘தோல் மினுமினுப்பைக் கூட்டும்... சிவப்பழகு கொடுக்கும்... செக்ஸ் வீரியத்தை அதிகப்
படுத்தும்...’ என்றெல்லாம் நம்பி தங்க பஸ்ப லேகியங்களை வாங்குவது, மனக்கஷ்டத்தையும் பண நஷ்டத்தையும்தான் தரும்!’’
என்கிறார் அவர்.
தலைவரே சொல்லிட்டாரே...
‘வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள...
தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள!’
பாரம்பரியமும், நவீனமும் கலக்காததால்தான்
தங்க பஸ்பம் விற்பனை என்ற பெயரில் நடமாடும்
போலி மருத்துவர்கள்
பெருகி விட்டார்கள்!
டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்