காதலில் திளைத்த நானி... காரத்தில் துடித்த வாணி!



காதல் மனைவியைக் கைபிடித்திருக்கும் புதுமாப்பிள்ளை நானிக்கு, காதலர் மாதமான பிப்ரவரியே ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்துவிட்டது. தெலுங்கில், ‘பைசா’, ‘ஜந்தா பை கபிராஜு’... தமிழில்  ‘ஆஹா கல்யாணம்’ என மூன்று படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். ‘ஆஹா கல்யாணம்’ கடைசி நாள் ஷூட்டிங்கில் ஹீரோயின் கழுத்தில் மாலை சூட்டிக்கொண்டிருந்தார் நானி. ஷாட் முடிந்ததும்  ஹீரோயின் வாணி கபூர், இயக்குனர் கோகுல்கிருஷ்ணாவுடன் கடலைக் கச்சேரிக்கு ஆயத்தமானார்.

‘‘பாஸ்... இங்க வாணிக்கு நான் போட்டது ஷூட்டிங் மாலைதான். நீங்க பாட்டுக்கு கிசுகிசு எழுதி புதுப் பொண்டாட்டிகிட்ட அடி வாங்க வச்சுடாதீங்க’’ என எடுத்த எடுப்பிலேயே எச்சரிக்கையானவர்,  ‘‘டைரக்டர் சார், எதுக்கும் நீங்க கதையைச் சொல்லிடுங்க!’’ என கோகுல் பக்கம் ரூட்டைத் திருப்பினார்.

‘‘சக்தி, ஸ்ருதி இந்த ரெண்டு கேரக்டர்தான் படத்தோட பிரதானம். நட்பில் ஆரம்பித்து தெ £ழில் பார்ட்னராகி பிறகு காதலில் விழும் இருவருக்கும் இடையே நடக்கும் காதல், மோதல், ஈகோ எல்லாம் கலந்த கலவைதான் ‘ஆஹா கல்யாணம்’. நானியும், வாணியும் வெட்டிங் பிளானிங்  கம்பெனி நடத்துறவங்க. படத்தில 23 வகையான கல்யாணங்கள் நடக்குது. இதன் பின்னணியில் நடக்கும் இவங்களோட காதலும், கலாட்டாவும் செம கலர்ஃபுல்லா இருக்கும்’’ என்று இயக்குனர்  முடிக்க, ‘பட ரிலீசுக்கு முன்பே உங்களை மிளகா பஜ்ஜின்னு கூப்பிடுறாங்களே?’ என்று வாணியிடம் கொக்கி போட்டோம்.

‘‘நான் பஞ்சாபி பொண்ணு. சென்னை எனக்கு புதுசுன்னாலும் மெரினா பீச்ல சுண்டல், மிளகா பஜ்ஜி ரொம்பவே ஃபேமஸ்னு தெரியும். படத்துல மெரினா பீச் பின்னணியில் நடக்கிற ஒரு சீன்ல, ‘இந்த மிளகா பஜ்ஜி சத்தியமா...’ன்னு நானி எங்கிட்ட பேசுவார். டிரெய்லர்லயே அந்த சீனுக்கு செம ரெஸ்பான்ஸ்! மிளகா பஜ்ஜி டேஸ்ட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதை சாப்பிடுற மாதிரியான சீன்ல பத்து டேக் எடுத்தாங்க. வரிசையா பத்து பஜ்ஜி தின்னு வாயும், வயிறும் எரிய ஆரம்பிச்சுடுச்சு.

காரம் தாங்க முடியாம கண்ல தண்ணியா ஊத்துது... இங்க நானியும், டைரக்டரும் கல் நெஞ்சோடு சிரிச்சிட்டிருந்தாங்க. அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. அதனாலதான் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்ல ‘குஷ்பு’ இட்லி மாதிரி ‘மிளகா பஜ்ஜி’ வாணின்னு கூப்பிடச் சொன்னேன். சிம்ரன் மேடம் கொடுத்த பஞ்சாபி ஜிலேபி
பட்டத்தையும் நான் ஆசையா ஏத்துக்கறேன்!’’

‘‘டைரக்டர் சார்... வாய் எரிச்சலில் இருந்த வாணிக்கு லிப்-லாக் சீன் வச்சிருந்தா சரியாகியிருக்குமே?’’
‘‘ம்... அதுவும் இருக்கு. ஆனா, வேற சிச்சுவேஷன். ரொமான்ஸ் மூடின் எல்லை தாண்டாத அளவுக்கு ரொம்ப டீசன்டா எடுத்திருக்கோம். அந்த சீனில் நானி, வாணி தந்த ஒத்துழைப்புக்கு நன்றி  சொல்லிக்கிறேன்...’’‘‘நானி அந்தக் காட்சியில் நிறைய டேக் வாங்கியிருப்பாரே?’’

‘‘ஏன் சார்..? ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்களா. பஜ்ஜி சீன்லதான் பத்து டேக் ஆனதே தவிர, முத்தக் காட்சி சீக்கிரமாவே முடிஞ்சிடுச்சு. என்னைப் பத்தி நல்ல செய்தியே சொல்ல மாட்டீங்கள £?’’ என நானி நல்ல பிள்ளை போல நழுவ, ‘‘நானி ரொம்ப நல்லவருங்க. தெலுங்கில அவர் நடிச்ச படங்கள் ஹிட்டாகியிருக்கு. ரொம்ப சார்மிங்கான ஆளு. தமிழ் பேசி நடிப்பதிலும் ஆர்வமா  இருக்கார். போதுமா நானி?’’ என்று டைரக்டர் கொடுத்த நற்சான்றிதழுக்கு நானியிடம் வெல்கம் சிக்னல்!

‘‘வாணியும் தமிழ் கத்துக்கிட்டு நடிப்பதில் ஆர்வமா இருக்காங்க. ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே தமிழ் உச்சரிப்புகள் பற்றி அவங்களுக்கு டியூஷன் எடுத்தோம். ஆனாலும்,  சில வார்த்தைகள் தகராறுதான். ‘பண்ணிக்கலாம்’ என்கிற வார்த்தையில் ‘பண்ணி’யை மட்டும் சரியா சொல்லிட்டு பாதியில் சொதப்புவார். அப்புறம் ‘அப்துல் கலாம்’னு சொல்ல வச்சி ‘கலாமை’  புரிய வச்சி பேசச் சொன்னோம்’’ என்று கோகுல் பேச, ‘‘இதை நான் வன்மையா மறுக்கிறேன்’’ எனக் குறுக்கே நுழைந்த நானி, ‘‘கதைப்படி என்னைத் திட்டுறதுக்கான பீடை, தரித்திரம், மூடு  என்கிற வார்த்தைகளை மட்டும் வாணி சரியா சொன்னாங்க’’ என்று டைரக்டரை செல்லமாக முறைத்தார் நானி.

‘‘படத்தோட பின்னணி முழுக்க சிவப்பாகவே இருக்கே?’’‘‘நம்ம ஊர்ல சிவப்பு, நீலம், மஞ்சள் நிறமில்லாத கல்யாணத்தையே பார்க்க முடியாது. குங்குமம் சிவப்பு நிறம். திருமண நாளில் பெரும்பாலான பெண்கள் ஊதா அல்லது மயில் நிறத்திலேயே  புடவை கட்டுவாங்க. அட்சதை முதல் தாலி வரைக்கும் மஞ்சள் நிறம்தான். இதெல்லாம் பிரதிபலிக்கிற கலர் டோனைத்தான் படத்தில் யூஸ் பண்ணியிருக்கோம். மலையாளத்தில் ‘உஸ்தாத் ஹோட் டல்’, தமிழில், ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு படத்தோட முதுகெலும்பா இருக்கும்.

தரண் இசையில் தமிழ் சினிமாவின் பன்ச் டயலாக்கை வைத்தே மதன்கார்க்கி எழுதி யிருக்கும் ஒரு பாடலும் படத்துக்கு ப்ளஸ்’’ என்று டெக்னிக் டீம் பற்றி கோகுல் பெருமை பேச, ‘‘பசிக்குது’’ என முகத்தில் வாட்டம் காட்டிய வாணியிடம், ‘மிளகா பஜ்ஜி வேணுமா?’’ என்று நானி கேட்க... அவரை விரட்டிக்கொண்டு ஓடினார் வாணி.

- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்