திறமை
கம்பெனி ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வுக்கான பரிந்துரைப் பட்டியல், எம்.டி அருணின் பார்வைக்கு வந்தது. உற்பத்திப் பணியில் எந்தத் தவறுகளையும் செய்யாத ஆவுடையப்பன், இளங்கோ, ஈஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் அந்தப் பட்டியலின் முன்னிலையிலும், அதிகபட்ச தவறுகளைச் செய்த உலகநாதன், ஊமையன், எல்லைராஜா ஆகியோரின் பெயர்கள் கடைசியிலும் இருந்தன. ‘தவறு செய்த இவர்களுக்கு ஊதிய உயர்வு தர வேண்டுமா’ என பிளான்ட் மேனேஜர் கேள்வி எழுப்பியிருந்தார். அதைப் பார்த்ததும், ‘‘ஏகாம்பரம்... பணியாளர்களின் செயல்திறனைப் பதிவு செய்யற அந்த ஃபேக்டரி ரெக்கார்டு புத்தகத்தைக் கொண்டு வாங்க’’ என்று தன் உதவியாளரைப் பணித்தான் அருண். அதைப் பார்த்துவிட்டு உலகநாதன், ஊமையன், எல்லைராஜா ஆகிய மூவருக்கும் அதிகப்படியான ஊதிய உயர்வு கொடுத்த அருணின் உத்தரவைக் கண்டு, அனைவருக்கும் வியப்பு. உதவியாளர் ஏகாம்பரம், அருணிடமே அதைக் கேட்டுவிட்டார். ‘‘எதையும் தீர விசாரிக்காம தவறு செய்யறவங்களெல்லாம் திறமையில்லாதவங்கனு முத்திரை குத்திடக் கூடாது. ரெக்கார்டுகளை பார்க்கும்போது, இவங்க மூணு பேரும் புதிய யுக்திகளைக் கையாண்டு, அதிக உற்பத்தித் திறனை காண்பிச்சுருக்காங்க. அதிகமா வேலை செய்யறவங்களுக்குத்தான் தவறுகளும் அதிகம் வரும். தவறே செய்யாதவங்க மூணு பேரும், எந்தவித ரிஸ்க்கும் எடுக்காம, குறைந்த உற்பத்தியைக் கொடுத்திருக்காங்க. அதற்கேற்றபடிதான் ஊதிய உயர்வும் இருக்கும்’’ என்றான் அருண். இவரல்லவோ நிர்வாகி என்று உணர்ந்தார் ஏகாம்பரம்.
|