ராசி





‘‘சிரிப்புதான் வருது கதிர்... ரெண்டு மாசமா பஸ்ல இப்படி தூர நின்னு பாக்கிறதோட சரி. அந்தப் பொண்ணு பேரு கூடத் தெரியாதுங்கறே. நீ இப்படி அவமேல பைத்தியமா அலையறது அவளுக்குத் தெரியுமோ, தெரியாதோ? அப்புறம் திடீர்னு இன்னிக்குப் போய் ஐ லவ் யூ சொல்லப் போறேன்னா எப்படி?’’ - நக்கலாகக் கேட்டான் நண்பன் சுந்தர்.

‘‘நீ வேணா பாரேன்... என்னோட ராசியான ஷர்ட் போட்டிருக்கேன். இன்னிக்கு நான் நினைச்சது நடக்கும்!’’ என்று நம்பிக்கையுடன் சொன்னான் கதிர்.
பஸ்ஸில்...
‘‘ஐயோ, என் பர்ஸை திருடிட்டு ஓடுறானே!’’ - கதிர் காட்டிய அதே பெண்தான் திடீரென்று கத்தினாள். கைப்பையோடு ஒருவன் பேருந்தில் இருந்து இறங்கி ஓட, கதிர் தன் ராசி சட்டையை வியந்துகொண்டான். எத்தனை தமிழ் சினிமாக்களில் இதே சிச்சுவேஷனை பார்த்திருப்பான். ‘இதுதான் சான்ஸ்’ என்று அந்தத் திருடனை விரட்டிப் பிடித்தான்.
‘‘இந்தாங்க உங்க பர்ஸ்... உள்ள எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க’’ - பெருமிதத்துடன் நீட்டினான் கதிர்.
‘‘ரொம்ப தேங்க்ஸ் சார்... இது காலி பர்ஸ்தான். ஆனா, என் ஹஸ்பெண்ட் ஆசையா கிஃப்ட் பண்ணின ராசியான பர்ஸ். அதான் பதறிட்டேன். பாவம், உங்க ஷர்ட் கிழிஞ்சு... அடி வேற பட்டிருக்கு. சாரி சார்’’ என்றாள் அந்தப் பெண்.
கதிரின் ராசி சட்டையும் மனசும் கந்தலாகித் தொங்கின!