சில்லரை
‘‘டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட்டையெல்லாம் கேட்டு வாங்குங்க...’’ - நடத்துனரின் கட்டைக்குரல். ‘‘சார்... ரெண்டு திருநெல்வேலி கொடுங்க!’’ என்றபடி மிகச் சரியான கட்டணத்தை எடுத்துக் கொடுத்தார் ஆவுடைநாயகம். ‘‘எல்லாருமே இப்படிக் கொடுத்துட்டா, எங்களுக்கு சில்லரை பிரச்னையே வராது சார்’’ - டிக்கெட் கொடுத்த நடத்துனர், பாராட்டிக் கொண்டே உள்ளே நடந்தார். அவர் தலை மறைந்ததும் ஆவுடைநாயகத்தின் மனைவி ஈஸ்வரி கேட்டாள். ‘‘ஏங்க... நேத்து மதுரைக்குப் போகும்போது, உங்ககிட்ட சில்லரை இருந்தும் ஐந்நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினீங்க. இன்னிக்கு கஷ்டப்பட்டு பர்ஸைத் துழாவி கரெக்டா சில்லரை கொடுக்குறீங்களே... ஏன்?’’ ‘‘ஈஸ்வரி... நேத்து அந்த கண்டக்டர் பின்சீட்டுகிட்ட இருந்து, டிரைவர் சீட்டை நோக்கி வந்தார். விரல் இடுக்குல நிறைய ரூபாய்த் தாள்கள் இருந்துச்சு. இன்னிக்கு ஆரம்பமே நம்ம பக்கம் இருந்துதான். காலையில முதல் ட்ரிப். கையில பணம் சேர்ந்திருக்காது. அனாவசியமா நாமதான் திட்டு வாங்கணும்’’ - ஆவுடைநாயகம் விளக்கம் அளித்தார். இப்போது நடத்துனர் டிக்கெட்டெல்லாம் கொடுத்து முடித்து, தன் இருக்கையை நோக்கி வந்தார். ‘‘சார், ஒரு ஐந்நூறுக்கு ஹண்ட்ரட்ஸ் கிடைக்குமா?’’ என்றார் ஆவுடைநாயகம். ‘‘ஓ... தாராளமா தர்றேன்!’’ என்று பையைத் திறந்தார் நடத்துனர்.
|