கவலை
‘‘என்ன கோமதியக்கா? ரெண்டு மணி நேரமா கடிகாரத்தைப் போய் பார்த்துட்டு பார்த்துட்டு வர்றே?’’ - விசாலாட்சி கேட்டாள். ‘‘பாரேன் என் புள்ளைய! இத்தனை வயசாகியும் இப்படி இருக்கானே...’’
‘‘என்ன ஆச்சு? இப்பத்தானே புறப்பட்டுப் போனான்... அதுக்குள்ளே இப்படி பதட்டப்படறியே?’’ ‘‘என்ன இப்பத்தானேன்னு சொல்றே? புறப்பட்டுப் போய் ரெண்டு மணி நேரமாகுது. ஒரு மணி நேரத்துல போய்ச் சேர்ந்திருக்கலாம். ஒரு போன் பண்ணக்கூடாது? எந்தப் பிரச்னையும் இல்லாம போய்ச் சேர்ந்தானான்னு ஒரே கவலையா இருக்குது’’ என்று கோமதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே மேஜையிலிருந்த போன் அடித்தது. ‘‘அதோ போன் அடிக்குது... உன் மகனாத்தான் இருக்கும்.’’ - விசாலாட்சி சொல்ல, ஓடிப்போய் போனை எடுத்தாள் கோமதி. ‘‘அம்மா... நான் நல்லபடியா வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன். அதைச் சொல்லிடலாம்னுதான் போன் பண்ணினேன். முடிஞ்சா அடுத்த மாசம் வர்றேன். இல்லேன்னா ரெண்டு மாசம் கழிச்சு வர்றேன். வச்சுடவா?’’ - மறுமுனையில் குரல் ஒலித்து அடங்கியது. ‘‘அப்பாடா... புள்ளை நல்லபடியா வீடு போய்ச் சேர்ந்துட்டான். இப்பதான் மனசு அடங்குச்சு. இனி நம்ம வேலையை நான் பார்க்கலாம் பாரு...’’ - தன் சக மூதாட்டியிடம் சொன்னாள், தன் மகனால் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து விடப்பட்ட கோமதி.
|