தவிப்பு
கதிரேசனுக்கு இரவு வெகுநேரம் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான். ம்ஹும்... தூக்கம் வந்தால்தானே! தவித்துப் போனான். ‘அது’ போட்டால்தான் தூங்க முடியும் போலிருந்தது அவனுக்கு!
‘சே, முன்பே வாங்கி வைத்திருக்கலாமே... நமக்குத் தோணாமல் போய்விட்டதே’ என தன்னைத்தானே நொந்து கொண்டான். தூங்க முடியாததால், எரிச்சலும் கோபமுமாக வந்தது. விடியும் நேரத்தில் தன்னையறியாமல் அப்படியே உறங்கி விட்டான். காலையில் அலாரம் அடித்தும் எழுந்திரிக்க முடியவில்லை. கண்விழித்தபோதுதான் புரிந்தது, நீண்ட நேரம் தூங்கிவிட்டது. கண்கள் எரிச்சலில் சிவந்திருந்தன. பதற்றத்தோடு நேரம் பார்த்தான். காலை பத்து மணி. இனி அரக்கப் பரக்க பல்துலக்கி குளித்துக் கிளம்பினாலும், சரியான நேரத்துக்கு ஆபீஸ் போக முடியாது. மீண்டும் நேற்றைய நினைவுகளால் உந்தப்பட்டான். இன்று ‘அது’ வாங்க கடைக்குப் போனால் என்ன? மனைவிதான் ஊரில் இல்லையே!’ எழுந்தான். காலை நேரத்திலேயே ‘கடை’யில் கூட்டம் களை கட்டியிருந்தது. கதிரேசனுக்கு பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ‘டிபன் சாப்பிடலாமா? வேண்டாம்! பிறகு பார்த்துக் கொள்வோம்’ என ஒரு முடிவுக்கு வந்தவனாக ‘விடுவிடு’வென்று அந்தக் ‘கடை’யை நோக்கிச் சென்றான். அது... மின்சார சாதனங்கள் விற்கும் கடை! இன்று எப்படியும் இன்வெர்ட்டர் வாங்கி வீட்டில் பொருத்தி விடுவது என்ற உறுதியுடன் கடைக்குள் நுழைந்தான், இரவு முழுதும் பவர்கட்டால் தூக்கமின்றித் தவித்த கதிரேசன்.
|